ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Sunday, 10 February 2013

ஐந்தரை லட்சத்தின் அடுத்த நபரா நீங்கள்?

ண்களுக்கு, நுரையீரல், வயிறு, கல்லீரல், உணவுக்குழாய், ப்ராஸ்டேட் புற்றுநோயாலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு மற்றும் கர்ப்பப்பைப் புற்றுநோயாலும் அதிக அளவில் உயிர் இழப்பு நேரிடுகிறது. புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்து வதால் ஏற்படும் புற்றுநோயால் 42 சதவிகித ஆண்களுக்கும், 18 சதவிகித பெண்களுக்கும் உயிர் இழப்பு ஏற்படுகிறது.
இப்போது எல்லாம் சினிமா பார்க்க தியேட்டருக்குப் போனால், முதல் காட்சியே குலை நடுங்கவைக்கிறது. புகையிலையின் அபாயத்தைப் பொளேரென விளக்கும் வகையில் சிலருடைய புற்றுநோய்ப் பாதிப்புத் துயரங்கள் விளம்பரப் படமாகத் திரையில் விரிகிறது. அதிர்ச்சியில் உறைகிறது நெஞ்சம்.
புற்றுநோய் குறித்து உங்களை மேலும் அச்சப்படுத்துவதற்காக அல்ல இந்தக் கட்டுரை. புற்றுநோய் குறித்த அபாயத்தை முழுக்க உணர்ந்து, நம்மை நாமே நெறிப்படுத்திக்கொள்வதற்கான வழிவகையை உருவாக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.






100-க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகள் உள்ளன. உடலில் நகம் மற்றும் முடியைத் தவிர்த்து எங்கு வேண்டுமானாலும் புற்றுநோய் ஏற்படலாம்.
 இந்தியாவில் 2010-ம் ஆண்டில் மட்டும் 5,55,000 பேர் புற்றுநோயால் உயிரை இழந்து இருக்கிறார்கள். உலக அளவில் 76 லட்சம் பேர். இதில் 70 சதவிகித உயிர் இழப்புகள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் நிகழ்கின்றன.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுபவராக இருந்தால், 70 சதவிகிதம் வாழ்க்கைமுறையோடு தொடர்புடைய புற்றுநோயைத் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். சத்தான சரிவிகித உணவு, உடற்பயிற்சி, புகையிலைப் பொருட்களைத் தவிர்த்தல் போன்றவற்றை மேற்கொண்டாலே புற்றுநோய் பாதிப்பைத் தவிர்க்க முடியும்.
புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைப்பதற்கான 10 வழிகள் குறித்து டாக்டர் டி.ராஜா பேசுகிறார்.
புற்றுநோய்: நம்முடைய உடலில் உள்ள சில திசுக்கள், வழக்கத்துக்கு மாறாக வளர்ச்சி அடைந்து கட்டுப்பாடுகள் இன்றி பல்கிப்பெருகுவதுடன், மற்ற நல்ல திசுக்களைத் தாக்குவதையே புற்றுநோய் என்கிறோம். புற்றுநோய் பாதிக்கப்பட்ட செல்லானது ரத்தம் மற்றும் நிணநீர் வழியே உடலின் எந்த ஒரு பகுதிக்கும் செல்லும் தன்மைகொண்டது.
புற்றுநோய்க்கு என்ன காரணம்?
உங்கள் உடல் செல்லில் உள்ள டிஎன்ஏ குறியீட்டில் ஏற்படும் மாற்றமே புற்றுநோயைத் தொடங்கிவைக்கிறது. இந்த டிஎன்ஏ குறியீடுகள்தான் உங்கள் திசு எப்படி வளர வேண்டும், எப்படிப் பெருக வேண்டும், எவ்வளவு வேகத்தில் இது நடக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கிறது. இந்த டிஎன்ஏ குறியீடு மாற்றமானது பிறவியிலேயே, வைரஸ் தொற்று காரணமாகவோ, புற ஊதாகதிர், பூச்சி மருந்து போன்ற சுற்றுச்சூழல் மாறுபாடு காரணமாகவோ ஏற்படலாம்.
அறிகுறிகள்
எந்த இடத்தில் புற்றுநோய் செல் வளரத்தொடங்குகிறதோ அதைப் பொருத்தே அறிகுறிகள் இருக்கும். பொதுவாக, சோர்வு, தோலுக்கு அடியில் வீக்கம், வலி, உடல் எடையில் மாற்றம், சருமத்தின் நிறம் மாற்றம், சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் பிரச்னை, நீடித்த இருமல், விழுங்குதலில் பிரச்னை, உணவு செரிமானத்தில் பிரச்னை, அதிகப்படியான உடல் மற்றும் மூட்டு வலி போன்றவை பொதுவான அறிகுறிகள்.







நோய் கண்டறியும் முறைகள்
வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற உதவியாக இருக்கும். சருமத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் உள்ளிட்ட சிலவற்றைக்கொண்டு புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதை மருத்துவர்கள் தெரிந்துகொள்வர். இதுதவிர ரத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனைகள் மூலம் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதை உறுதிபடுத்தலாம். சிடி, எம்.ஆர்.ஐ, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே பரிசோதனை மூலம் புற்றுநோய் பாதிப்பு எங்கு உள்ளது என்பதைக் கண்டறிய முடியும்.
புற்றுநோயை எப்படித் தவிர்ப்பது?
ஊட்டச் சத்துக்கள் நிறைந்த காய்கறி, பழங்கள், ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி, புகையிலைப் பொருட்களைத் தவிர்ப்பது ஆகியன முதற்கட்டப் புற்றுநோய்த் தவிர்ப்பு முறைகள். உடல் எடையைப் பராமரித்தல், அவ்வப்போது புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளைச் செய்துகொள்வது, புறஊதாக் கதிர்வீச்சை முடிந்தவரை தவிர்ப்பது போன்றவை புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும். ரசாயனப் பூச்சி மருந்துகள் இல்லாத, ஆரோக்கியமான இயற்கை உணவுகளையே எடுத்துக்கொள்ளுங்கள்.
சிகிச்சை முறைகள்
அறுவைசிகிச்சை, கீமோதெரப்பி, கதிர்வீச்சுத் தெரப்பி, இம்யூனோதெரப்பி போன்றவையே புற்றுநோய்க்கான சிகிச்சைமுறைகள். எதிர்காலத்தில் செல்களில் மரபியல் மாற்றங்கள் செய்து புற்றுநோயைக் குணமாக்கும் சிகிச்சை முக்கியத்துவத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சைபர் நைஃப்
புற்றுநோயாளிக்கு முதலில் சி.டி. ஸ்கேன் செய்யப்பட்டு புற்றுநோய்க் கட்டியின் அளவு, வடிவம், இடம் போன்றவை துல்லியமாகக் கண்டறியப்படும். இந்தத் தகவல்கள் அனைத்தும் சைபர் நைஃப் என்ற கருவியில் பதிவுசெய்யப்படும். சைபர் நைஃப் கருவியானது நோயாளியைச் சுற்றிப் பல இடங்களில் இருந்து கதிரியக்கத்தைச் செலுத்தி புற்றுநோய்க் கட்டியை மட்டும் தாக்கி அழிக்கும். இதனால் மற்ற நல்ல திசுக்கள் தாக்கப்படுவது குறைக்கப்படும். இந்த சிகிச்சை முறை மூலம் மூளை, கல்லீரல், சிறுநீரகம், ப்ராஸ்டேட் சுரப்பி, நுரையீரல், முதுகுத் தண்டுவடப் புற்றுநோய்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியும்.
செலக்டிவ் ரேடியேஷன் தெரப்பி
கல்லீரல் புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சையில் நோயாளியின் தொடையில் உள்ள நல்லரத்தக் குழாயில் துளை போடப்படும். இதன் வழியாகக் கல்லீரல் புற்றுநோய்த் திசுக்களைத் தாக்க லட்சக்கணக்கான எஸ்.ஐ.ஆர். ஸ்பியர்ஸ் என்ற பந்து போன்ற அமைப்பு செலுத்தப்படும். இந்த ஸ்பியர்ஸ் 'ஈட்ரியம் 90’ என்ற கதிர்வீச்சைக் கொண்டது. இது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பகுதியைத் தாக்க ஆரம்பிக்கும். புற்றுநோயின் டி.என்.ஏ. அழிக்கப்படும். பழைய கதிர்வீச்சு முறைகளைக்காட்டிலும் 40 மடங்கு அதிகக் கதிர்வீச்சுத் தாக்குதல் இதில் அளிக்கப்படுகிறது.
ஏதோ ஓர் ஈர்ப்பில் போதைக்கு ஆளாகிவிடும் நாம், உயிர் மீதான ஈர்ப்பில் நல்ல பாதைக்கு மாறிக்கொள்ளலாமே!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR