ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Thursday, 27 June 2013

அமெரிக்க இரும்புத்திரையை அம்பலப்படுத்தும் ஸ்னோடன் !

திரு எட்வர்ட் ஜோசப் ஸ்னோடன். அமெரிக்கரான இவர் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து சர்வதேச கவனம் பெறுவார். விரைவில் அமெரிக்காவின் மிக முக்கிய எதிரி என அறிவிக்கப்படுவார். பின் லாடனை விட மோசமான தீவிரவாதியாகவும், அமெரிக்க மக்களின் உயிர் பறிக்கும் அரக்கனாகவோ அல்லது பெண் பித்தர், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் குற்றம் சாட்டப்படலாம்.


ஏன் என்றால் அவர் செய்த செயல் அப்படிப்பட்டது! அமெரிக்கா தன் சொந்த நாட்டு மக்களையே வேவு பார்த்தை வீதியில் போட்டு உடைத்தவர்; அமெரிக்க அரசு கைபிசைந்து கொண்டு மக்கள் முன் தலை குனிந்து நிற்கும் நிலையை ஏற்படுத்தியவர். சென்ற வாரம், அமெரிக்க அரசு ”தேசிய பாதுகாப்பு” என்னும் பெயரில் அமெரிக்காவிலிருந்து வெளிநாடுகளுக்கு செய்யப்படும் தொலைபேசி, செல்பேசி உரையாடல்களை வேவு பார்த்தது, பலரின் மின்னஞசல்களையும், பிற ஆவணங்களையும் இணைய சேவை நிறுவனங்களில் இருந்து எடுத்து சேமித்தது ஆகியவற்றை நிரூபிக்கும் ஆவணங்கள் ஊடகங்களில் வெளியாகின.
அமெரிக்க மற்றும் உலக மக்கள் தினமும் தொலைபேசி, செல்பேசிகளில் பேசிக்கொள்ளும் உரையாடல்கள் முதல் அவர்களது இணையத் தகவல் பரிமாற்றங்கள் என சகலத்தையும் வேவு பார்த்துள்ளனர் அமெரிக்க உளவுத் துறையினர். இதற்காக தனிபிரிவுகளை ஏற்படுத்தி பல மில்லியன் டாலர்களை செலவு செய்து இந்த வேலைகளை செய்துள்ளனர்
ஸ்னோடன் 2003-ம் ஆண்டு ஈராக்கில் ‘ஜனநாயகத்தை நிலைநாட்டும் கடமையில் பங்கேற்கும்’ கனவுகளுடன் சிறப்பு ராணுவப் படைகளுக்கான பயிற்சித் திட்டத்தில் சேர்ந்தார். ஆனால், சீக்கிரமே அவர் ராணுவத்தின் உண்மை முகத்தை தெரிந்து கொண்டார். “பயிற்சியாளர்களில் பெரும்பகுதியினர் மக்களுக்கு உதவும் நோக்கம் கொண்டவர்கள் இல்லை, ஈராக் மக்களை கொல்வதைப் பற்றி மட்டும்தான் பேசினார்கள்” என்கிறார் அவர். பயிற்சி காலத்தில் ஒரு விபத்தில் கால்கள் முறிந்ததால் ராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தில் இருக்கும் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் ரகசிய அலுவலகத்தில் பாதுகாவலராக சேர்ந்திருக்கிறார். பின்னர் அமெரிக்க உளவுத் துறையின் தகவல் தொழில் நுட்ப பாதுகாப்பு துறையின் கீழ் ஜெனீவாவில் பணி புரிந்திருக்கிறார்.
அவரை முதலில் சுவிஸ் வங்கிகளை வேவு பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள். அவரும் கணினி உதவியுடன் பல்வேறு ஆவணங்கள், உரையாடல்களை சேகரித்துக் கொடுக்கும் வேலை செய்துள்ளார். இது சரிதான், ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் முதல் பல்வேறு சமூக விரோதிகளை தான் நம் கண்காணிக்கிறோம் என்று பெருமிதம் கொண்டார். ஆனால் மெல்ல அவர் சேகரிக்கும் தகவல்களும் ஆவணங்களும் சாதாரண அமெரிக்க குடிமக்களின் உரையாடல்கள் மற்றும் மின்னஞ்சல் தகவல்கள் என தெரிய வந்தபோது அதிர்ச்சியடைந்தார்; குற்றவுணர்வு கொண்டார். இதனால் அமெரிக்க அதிபரை குற்றவாளி என நினைத்தார். புஷ் நிர்வாகம் செய்யும் தவறுகள் தான் இவை, அடுத்து சில மாதங்களில் எப்படியும் புஷ் மாறி வேறு ஒரு அதிபர் வரும் போது தவறுகள் சரிசெய்யப்படும் என சமாதானம் செய்து கொண்டார்.
2009-ம் ஆண்டு ஜப்பானில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் அலுவலகத்தில் ஒரு ஒப்பந்த ஊழியராக சேர்ந்தார். ஒபாமா அதிபர் ஆன ஆரம்ப நாட்களில் இந்த வேலைகள் தொடர்ந்தாலும் இத்தகைய கொள்கைகள் மெல்ல மாற்றப்படும் என காத்திருந்தார். ஆனால் ஒபாமா பதவி காலத்தில் இந்த தகவல்கள் சேகரிப்பு விஸ்தரிக்கப்பட்டது. முன்பு குறுகிய அளவில் இருந்த வேவு பார்க்கும் வேலை அமெரிக்க மக்கள் மீது முழுவதுமே திரும்பியது. அதிபர் மாற்றம் ஒன்றுமே செய்யவில்லை, எத்தனை அதிபர் மாறினாலும் அமெரிக்க நிர்வாகம் மக்களுக்கு எதிரானது என்பதை கண்டுணர்ந்தார்.
‘அப்பாவி மக்களை வேவு பார்ப்பது தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது; அரசு நிர்வாகம் வெளிப்படையாக இருக்க வேண்டும்; அமெரிக்க நிர்வாகம் வெளிப்படையானது; இங்கு மக்களுக்கு கருத்து சுதந்திரம் பொங்கி வழிகிறது’ என அமெரிக்க அரசின் சகல முழக்கங்களும் பொய்யானவை என்பது ஸ்னோடனை கடும் குற்றணர்வு அடைய செய்தது.
கடைசியாக ஹவாயில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆணையத்தில் பூஸ் அலன் என்ற ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியராக வேலை செய்திருக்கிறார். அமெரிக்க அரசின் ‘பெரிய அண்ணன் கண்காணிப்பு’ அடக்குமுறையை மக்களுக்கு எப்படி தெரியப்படுத்தலாம் என யோசிக்கிறார். அமெரிக்காவில் மக்கள் மீதான நிறுவனங்களின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடுபவர்கள் விசில் ப்ளோவர்ஸ் என அழைக்கப்படும் அம்பலப்படுத்துபவர்கள். இவர்கள் மக்களுக்கு தெரியாமல் அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் செய்யும் ஊழல்களை, தமக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை பொருட்படுத்தாமல், மக்களுக்கு அம்பலபடுத்துகிறவர்கள். ஒபாமா ஆட்சியில் இந்த அம்பலப்படுத்துபவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர்; அழிக்கப்பட்டனர்.
அதனால் ஸ்னோடன் அமெரிக்காவின் மிக முக்கிய உளவுநிறுவனமான சிஐஏ-வின் கீழ் இயங்கும் தனிப்பிரிவின் பல ஆயிரம் ஆவணங்களை வெளியில் கொண்டு வருவதன் பின் உள்ள ஆபத்தை நன்கு உணர்ந்திருந்தார். தான் வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க நேரிடலாம் என்பதை புரிந்து கொண்டிருந்தார். ஆனால், ஸ்னோடனுக்கு விக்கிலீக்ஸ் ஆதர்சமாக இருந்தது. அமெரிக்க ராணுவம் ஈராக்கில் செய்யும் அட்டூழியங்களை விக்கிலீக்ஸ் உதவியுடன் வெளிகொண்டு வந்த ப்ராட்லி மேனிங் என்பவரின் செய்கை அவருக்கு வழிகாட்டியது. ப்ராட்லி மேனிங் அமெரிக்க அரசால் கைது செய்யப்பட்டு அல்கைதாவிற்க்கு உதவியதாக ஒரு பொய் வழக்கில் விசாரிக்கப்பட்டு வருகிறார். மரண தண்டனை வழங்கக் கூடிய வழக்கு அது.
ஸ்னோடன் அமெரிக்க அரசு மக்களை வேவு பார்ப்பது தொடர்பான தகவல்களை சேமித்தார். ஆயிரக்கணக்கான உரையாடல்கள் பதிவுகளையும் ஆவணங்களையும் தனது அறைக்கு கொண்டு வந்தார். தான் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என இரண்டு வாரம் விடுப்பெடுத்துக் கொண்டார். தகவல்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஹாங்காங் சென்று அங்கிருந்தபடி தகவல்களை வெளி உலகிற்கு அம்பலப்படுத்தினார்.
முதலில் தன் பெயரை அவர் வெளியிடவில்லை, அமெரிக்க அரசு உலகம் முழுவதிலும் மக்களை வேவு பார்க்கும் வேலையை செய்வதை ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டன. பரபரப்பு பற்றிக்கொண்டது. அமெரிக்காவின் உளவுத்துறையும் உள்துறையும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் அவமானப்பட்டு நின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமா, இப்படி வேவு பார்ப்பது தேசிய பாதுகாப்பிற்கு தேவையானது என்று சப்பைக்கட்டு கட்டினார்.
ஒரு வாரத்திற்கு பிறகு இந்த ஆவணங்களை வெளிக்கொண்டு வந்தது யார் என்ற கேள்விக்கு விடை தரும் விதமாக ஸ்னோடன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அவர் மிக தெளிவாகவே இருக்கிறார் அவரின் கருத்தும் மிக தெளிவாகவே இருக்கிறது, ”நான் யாரையும் புண்படுத்தவோ, நாட்டை காட்டிகொடுக்கவோ இந்த வேலையை செய்யவில்லை, நான் கவனமாக ஆவணங்களை பரிசோதித்து யாருக்கும் ஆபத்து ஏற்படுத்தாத தகவல்களையும் ஆவணங்களையும் மட்டுமே வெளியிட்டுள்ளேன். ஆனால் என்னுடைய நோக்கம் அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான்” என்கிறார்.
ஆனால், மக்களை பாதுகாப்பதற்காக மக்களை வேவு பார்க்கிறோம் என்கிறது அமெரிக்க அரசு.
தொடர்ச்சியாக பல கொலைகளையும், திட்டமிட்ட நம்பிக்கை துரோகங்களையும் செய்யும் கிரிமினல் ஒரு கட்டத்தில் யாரையுமே நம்பாமல் அனைவரையும் சந்தேகப்பட்டு மனநோயாளி போல் தன்னை காப்பாற்றி கொள்ள அலைவது இயல்பு தான். மூன்றாம் உலக நாடுகளில் தனக்கு வேண்டாத அதிபர்களை தீர்த்துக் கட்டுவது, வெளியுறவுத் துறை அதிகாரிகளை அவர்கள் இருக்கும் நாடுகளில் வேவு பார்க்கச் செய்வது, தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்களை சீர்குலைவு செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்வது, ஆட்சிக் கவிழ்ப்பு, சதி, அழிவு என சகல கிரிமினல் வேலைகளை செய்து வரும் சிஐஏ-வும் அமெரிக்க அரசும், இன்று யாரை நம்புவது என தெரியாமல் அனைவரையுமே சந்தேகப்படுவது இயல்பு தான். ஆனால் மக்கள் ஒரு ரவுடியின் மனநோயை ஆதரிக்க முடியுமா?
சோஷலிச நாடுகள் வெளிப்படையாக தம் வர்க்க சார்பை அறிவிக்கின்றன; ”எந்த ஒரு அரசும் ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கான எந்திரம்தான்; சோஷலிச அரசு என்பது பெரும்பான்மையினரான உழைக்கும் வர்க்க மக்கள், சிறுபான்மையினரான சுரண்டல் வர்க்கங்களை ஒடுக்குவது” என வெளிப்படையாக அறிவித்து விட்டு ஆட்சி நடத்துகின்றன. சோவியத் அரசு, பெரும்பான்மை உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக சுரண்டல் வர்க்கங்களுக்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்படும் என வெளிப்படையாகவே அறிவித்திருந்தது.
சோவியத் யூனியனின் இந்த கொள்கையை மக்கள் முன் திரித்துக் கூறி ‘சோவியத் யூனியனில் கருத்து சுதந்திரம் இல்லை, வெளிப்படையான நிர்வாகம் இல்லை, கம்யூனிஸமே தனிமனித சுதந்திரத்திற்கும் கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானது, ஆனால் அமெரிக்கா மாதிரியான முதலாளித்துவ அரசுகளோ தனி மனித சுதந்திரத்தை பேணி பாதுகாக்கின்றன. கருத்து சுதந்திரத்திற்கு முழு ஆதரவு தருகின்றன, வெளிப்படையான நிர்வாகம் நடத்துகின்றன’ என தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் செய்து வந்தன மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள்.
ஆனால், ஜனநாயகம் என்று சொல்லப்படும் முதலாளித்துவ அமைப்பில் அரசு மேலும் மேலும் உளவு பார்க்கும் வேலையை அதிகரித்து வருகிறது. தமது நலன்களை பாதுகாப்பதற்காக, தாம் போலியாக முன் வைக்கும் கருத்துரிமை, தனி மனித சுதந்திரம் போன்றவற்றை வெளிப்படையாக பலி கொடுக்கின்றன முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள். ஸ்னோடன் போன்ற நேர்மையான குடிமக்கள் இந்த போலித்தனத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் போது தேள் கொட்டிய திருடன் போல விழிக்கிறது அமெரிக்க அரசு.

- ஆதவன்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR