"முஹர்ரம்"
இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும் முஹர்ரம். முற்காலம் தொட்டு அரபிகள்
இம்மாதத்தைப் புனித மாதங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தனர். முஹர்ரம்
என்னும் அரபிச் சொல்லிற்கு "விலக்கப்பட்டது" என்று பொருள்.
"சொற் பொருள்"
முஹர்ரம், ஹராம்,ஹரம், ஹுரும், தஹ்ரீம,இஹ்ராம் என்ற சொற்கள் ஒரே வேர்
சொல்லிலிருந்து பிறந்த சொற்களாகும். பாவங்கள் அல்லது செய்யக்கூடாதவைகளை
செய்வதை விட்டும் தடுக்கப்படுவதால் விலக்கப்பட்டது,
தடுக்கப்பட்டது,என்றும் விலக்கப்பட்டதை செய்வதைவிட்டும் தடுக்கப்படுவதால்
அச்செயல் புனிதமானது என்றும், தடுக்கப்படும் இடம் புனிதமான இடம் என்றும்
பொருள் கொள்ளப்படுகிறது.
( உ-ம் : தொழுகைக்கு முன் செய்யப்படும் செயல்கள் தொழுகையில்
தடுக்கப்படுவதால் "தக்பீர் தஹ்ரீம்" என்றும் , உம்ரா,ஹஜ்ஜ'க்குமுன்
அனுமதிக்கப்படுவை இஹ்ராமுக்கு நிய்யத் செய்ததும் தடுக்கப்படுவதால்
"இஹ்ராம்" என்றும், ஹரம் எல்லைக்கு வெளியே செய்யப்படும் பாவமானவை-
விலக்கப்பட்டவை- ஹரம் எல்லையில் தடுக்கப்படுவதால் "ஹரம்"-புனித எல்லை-
என்றும்,"மஸ்ஜிதுல்ஹராம்"- புனிதமான பள்ளி வாசல்- என்றும்
சொல்லப்படுகிறது.)
"புனித மாதங்கள்- அஷ்ஹுருல் ஹுரும்"
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில்
உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றுள் நான்கு மாதங்கள்
புனிதமானவை ஆகும். ( அல்-குர்ஆன் 9:36) எனத் திருமறை கூறுகிறது. அவை
துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களாகும்.
இந்நான்கு மாதங்கள் புனிதமிக்கவை என்னும் போது ஏனைய மாதங்கள்
சிறப்புக்குரியவை அல்ல என்பது பொருளல்ல. ஏனெனில் ரமளான் என்னும் மாண்பார்
மாதம் இதில் தான் வருகிறது.இந்நான்கு மாதங்களை நபி இப்ராஹீம் (அலை)
அவர்கள் காலம் முதல் மக்கள் புனிதமானவையாகக் கருதி வந்தனர்.
ஒருவர் அறியாமல் செய்த தீங்கையும் தம் மானம் அழிக்கும் பெரும் குற்றமாகக்
கொண்டு அதற்காக பழி வாங்குவதில் தம் காலத்தையெல்லாம் கழித்து வந்தவர்கள்
அரபிகள். கொலை,கொள்ளை போன்ற மாபாதகச் செயல்களை செய்வதற்கு அவர்கள்
கொஞ்சமும் தயங்காதவர்கள்.இந்த ஓயாச்சண்டைகளிலும் ஒழியாச் சச்சரவுகளிலும்
ஈடுபட்டிருந்த அவர்களை தடுப்பதற்கு இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட
மாதங்களே இந்நான்கு மாதங்களும். அவற்றுள் முதன்மையானதே முஹர்ரம்
மாதமாகும்.
குறிப்பாக இந்த மாதத்தில் தமது சண்டை சச்சரவுகளை விலக்கிவைத்திருப்பதால்
தான் விலக்கப்பட்டது என்ற பொருள் கொண்ட "முஹர்ரம்" என்ற பெயர் இதற்கு
ஏற்பட்டது. இவ்விதம் அக்கால அரபிகள் தமது உணர்ச்சிகளையும், வாளையும்
உறையுள் போடத்தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இந்த மாதத்தை ஒரு புனித
மாதமாகக் கருதியது தான்.
இந்த மாதத்தில் தான் "ஆஷூரா" என்னும் நாள் வருகிறது. இந்த 'ஆஷூரா'
என்னும் சொல் ஹீப்ரு மொழிச் சொல்லாகும். அதாவது "பத்தாவது நாள்" என்பது
பொருளாகும். யூதர்களின் பத்தாவது நாளுக்கு இப்பெயர் இருந்து வருகிறது.
யூதர்களின் "திஷ்ரி" மாதமும் அரபிகளின் "முஹர்ரம்" மாதமும் இணையாக
வருபவையாகும். திஷ்ரி மாதத்தின் பத்தாம் நாளே முஹர்ரம் மாதத்தின் பத்தாம்
நாளாகும்.
யூதர்கள் இந்த பத்தாம் நாளில் நோன்பு நோற்கும் வழக்க முடையவர்களாக
இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா வந்தபோது
இப்பழக்த்தைக் கண்டதும் அதற்குரிய காரணத்தை அவர்களிடம் கேட்டனர். அதற்கு
"நானே இறைவன்" எனக் கூறிய பிர்அவ்னையும் அவனுடைய படையினரையும் இறைவன்
செங்கடலில் மூழ்கடித்ததும் நபி மூஸா (அலை) அவர்களையும் அவர்களின்
மக்களையும் காத்தருளியதும் அந்நாளில்தான் என்றும் அந்த நன்றியை நினைவுகூர
மூஸா(அலை) அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றனர் என்றும் அதனையே தாங்களும்
பின்பற்றுவதாகவும் கூறினர். அதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள் , "
அவ்விதமாயின் நானும் என் மக்களும்தாம் உங்களையும்விட மூஸா(அலை)
அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்" என்று கூறி அது முதல் தாங்களும்
நோற்று தம் மக்களையும் அவ்வாறே நோன்பு நோற்குமாறும் பணித்தனர்.
அது மட்டுமன்றி "வரும் ஆண்டும் நான் இவ்வுலகில் வாழ்ந்தால் முஹர்ரம்
ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்" என்றும் கூறினார்கள். { ஆதாரம்:
முஸ்லிம், அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
Wednesday, 6 November 2013
முஹர்ரம்!!
22:34
No comments
0 comments:
Post a Comment