ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Thursday, 2 October 2014

காந்தியின் கொலையில் சாவர்க்கரின் பங்கு

கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 12ம் நாள் அன்று மாலை ஸ்வபன் தாஸ் குப்தா தொலைக்காட்சியில் ஓர் உண்மையை வெளிப்படுத்தினார். 

வி.டி. சாவர்க்கருக்கு மகாத்மா காந்தியின் படுகொலையில் பங்குண்டு என்றும், ஆனால் அவர் தப்பித்து விட்டார் என்றும் மொரார்ஜி தேசாய் சொன்னதாக எல்.கே. அத்வானி தன்னிடம் கூறினார் என்பதுதான் அந்தச் செய்தி.அன்றைய பாம்பே மாகாணத்தின் உள்துறை அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் ஒருமுறை இவ்வாறு கூறினார்: 

“காந்தியின் படுகொலை குறித்த புலன் விசாரணை பாம்பே மாகாணத்தில் நடந்து வருகிறது. அதில் நான் நேரடியாகத் தொடர்பு வைத்து கேட்டு அறிந்து வருகிறேன்.”அவருக்கு உண்மை என்ன என்று தெரியும். 

பாம்பே குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) சிறப்புக் கிளையின் துணை கமிஷனராக இருந்த ஜாம்ஷெட் நகர்வாலாவுக்கும் அது தெரியும். அவர் உள்துறை அமைச்சர் மொரார்ஜிக்கு மிக நெருங்கியவராக இருந்தார்.

1948ம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று மத்திய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு இவ்வாறு எழுதியனுப்பினார்:

“காந்தியின் படுகொலை வழக்கு விசாரணையின் முன்னேற்றத்தை நான் தினமும் கவனித்து வருகிறேன். சாவர்க்கரின் கட்டுப்பாட்டிலுள்ள ஹிந்து மகாசபாவின் தீவிரவாதப் பிரிவுதான் இந்தப் படுகொலைக்கான சதித் திட்டத்தைத் தீட்டி, அதனை நிறைவேற்றியது.”
(Sardar Patel’s Correspondence, Volume 6, Page 56)

அன்றைய மத்திய அமைச்சரவையில் ஓர் அங்கமாக இருந்த சியாம பிரசாத் முகர்ஜி சாவர்க்கருக்காக பட்டேலிடம் பொருத்தமற்ற முறையில் வக்காலத்து வாங்கி வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதினார். 

சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்ட அதே நாளில் சாவர்க்கரின் சார்பில் முகர்ஜி பட்டேலிடம் பேசினார். சியாம பிரசாத் முகர்ஜிதான் சாவர்க்கருக்கு அடுத்தபடியாக ஹிந்து மகாசபாவின் தலைவரானார்.பட்டேல் சியாம பிரசாத் முகர்ஜிக்கு இவ்வாறு பதிலனுப்பினார்:“இந்த வழக்கின் பொறுப்பாளரான பாம்பேயின் அரசுத் தரப்பு வழக்கறிஞர், இன்னபிற சட்ட வல்லுனர்கள், புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஆகியோர் என்னை டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் சந்தித்தனர். நான் அவர்களிடம் ஒன்றைத் தெளிவாகச் சொன்னேன். சாவர்க்கரை இந்த வழக்கில் சேர்ப்பது என்பது முழுக்க முழுக்க சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றின் நிலைப்பாட்டைப் பொறுத்துதான்.

இந்த விவகாரத்தில் அரசியல் வந்து விடக்கூடாது. சாவர்க்கரை வழக்கில் சேர்க்கவேண்டும் என்ற கருத்திற்கு அவர்கள் வருவார்களேயானால் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அதற்கான ஆவணங்கள் என் மேஜைக்கு வரவேண்டும் என்று நான் மீண்டும் அவர்களுக்குத் தெளிவு படுத்தி விட்டேன்.

ஹிந்து மகாசபா ஓர் அமைப்பு என்ற ரீதியில் காந்தி படுகொலையின் சதிக்குக் காரணமில்லை என்பதில் நான் உங்களுடன் உடன்படுகிறேன். ஆனால் அதே வேளை, அதன் கணிசமான உறுப்பினர்கள் காந்தி படுகொலை நடந்தவுடன் இனிப்பு வழங்கி கொண்டாடியதையும் நாம் கவனிக்காமல் கண் மூடி இருந்துவிட முடியாது. 

இந்த (இனிப்பு வழங்கப்பட்ட) விவகாரம் தொடர்பாக நம்பகமான தகவல்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வந்துள்ளன. அத்தோடு ஆபத்தான இன்னொன்றும் உள்ளது. அது தீவிரவாத வகுப்புவாதம்.

மகந்த் திக்விஜய் நாத், பேரா. ராம் சிங், தேஷ்பாண்டே போன்ற ஹிந்து மகாசபாவின் பேச்சாளர்கள் சில மாதங்களுக்கு முன்பு இந்த மதவெறி பிடித்த தீவிரவாத வகுப்புவாதத்தைப் பிரச்சாரம் செய்து வந்தனர். இது பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெருத்த ஆபத்தை உண்டு பண்ணும் என்பதையும் நாம் மறுக்க முடியாது. 

இதே ஆபத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்தும் உள்ளது. இராணுவ நடவடிக்கைகள் அல்லது பகுதி இராணுவ நடவடிக்கைகளை அது மறைமுகமாக நடத்தி வருகிறது.”
(Sardar Patel’s Correspondence, Volume 6, Pages 65-66)

பட்டேல் முகர்ஜிக்கு மீண்டும் எழுதினார்:“காந்திஜியின் படுகொலை குறித்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்தப் படுகொலையில் ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து மகாசபா ஆகிய இரு அமைப்புகளின் பங்கு குறித்து நான் இப்பொழுது கருத்து கூறக்கூடாது. ஆனால் ஒன்றை எனக்குக் கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த இரண்டு அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகளின் விளைவால், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்.ஸின் நடவடிக்கைகளின் விளைவால், நாட்டில் ஒரு சூழல் உருவானது. 

எப்படிப்பட்ட சூழல் என்றால் இப்படிப்பட்ட கொடூரக் கொலைகள் நடப்பதற்கு சாத்தியப்படக்கூடிய அளவுக்கு மோசமான சூழல் உருவானது.ஹிந்து மகாசபாவின் மதவெறி பிடித்த தீவிரவாதப் பிரிவுதான் இந்தப் படுகொலையைச் செய்தது என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை. 

ஆர்.எஸ்.எஸ்.ஸின் நடவடிக்கைகள் அரசின் இருப்புக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அது தடை செய்யப்பட்ட பின்பும், அதன் இத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை என்று எனக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. 

மாறாக, உண்மையில் சொல்லவேண்டும் என்றால், அதன் கீழறுப்பு நடவடிக்கைகள் அதிகமாகத்தான் ஆகியிருக்கின்றன.”
(Sardar Patel’s Correspondence, Volume 6, Page 323)“

மகாத்மா காந்தியின் வாழ்வும், மரணமும்” (The Life and Death of Mahatma Gandhi) என்ற நூலை ராபர்ட் பெய்ன் (Robert Payne) என்பவர் எழுதி 1969ல் வெளியிட்டார். 

அதில் சாவர்க்கர் குறித்து அவர் இவ்வாறு எழுதுகிறார்:“காந்தி படுகொலை செய்யப்பட்டு 8 மணி நேரத்துக்குள் சாவர்க்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர்தான் இந்தப் படுகொலையின் முதல் சந்தேகத்திற்குரியவர். ஆனால் ஆச்சரியப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் அவர் ஆரம்பத்தில் கைது செய்யப்படவில்லை. அவர் லண்டனில் வசித்திருந்தால் உடனே அவர் மீது சந்தேகம் பாய்ந்திருக்கும்.

நாதுராம் வினாயக் கோட்சேதான் சதித் திட்டம் தீட்டுவதற்கு ஒருங்கிணைப்பு செய்தவர் என்று காட்டுவதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு எந்தக் கஷ்டமும் இருந்திடவில்லை.ஆனால் சாவர்க்கர் நேரடியாக இதில் ஈடுபட்டார் என்பது நிரூபிக்கப்படுவதற்கு மிகுந்த கஷ்டம் இருந்தது. 

படுகொலை நடப்பதற்கு முன்பாக பல மாதங்கள் தான் நோய்வாய்ப்பட்டு இருந்ததாகவும், சொற்ப நபர்களே தன்னை வந்து சந்தித்ததாகவும், கோட்சேயோ, நாராயண் டி. ஆப்தேயோ தன்னை ஒரு வருடத்திற்கும் மேலாக சந்திக்கவேயில்லை என்றும் சாவர்க்கர் கூறினார்.

காந்திப் படுகொலைக்கு மூன்று நாட்களுக்கு முன்னர், அதாவது ஜனவரி 27ம் நாள், திகாம்பர் பாட்கே என்பவர் கோட்சேவையும், ஆப்தேவையும் பாம்பேயில் சாவர்க்கர் இல்லத்திற்கு காலை 9 மணிக்கு அழைத்துச் சென்றார். பாட்கே கீழ்த்தளத்தில் காத்திருக்க, தங்கள் அரசியல் குருவான சாவர்க்கரை கடைசியாக ஒரு முறை பார்க்கவும், இறுதிக் கட்ட அறிவுரைகளைக் கேட்டு விட்டுப் போகவும் கோட்சேவும், ஆப்தேவும் மேல் தளத்திற்குச் சென்று சாவர்க்கரைச் சந்தித்தனர்.ஐந்திலிருந்து பத்து நிமிடங்களுக்குள் கோட்சேவும், ஆப்தேவும் திரும்பி கீழ்த்தளத்திற்கு வந்தனர். அவர்களுடன் சாவர்க்கரும் வந்தார். “வெற்றியுடன் திரும்பி வாருங்கள்” என்று சாவர்க்கர் அவர்களிடம் சொன்னார். இந்தப் படுகொலைக்கு தார்மீக ரீதியான அதிகப் பொறுப்பு சாவர்க்கருக்கே உள்ளது.” (Sardar Patel’s Correspondence, Volume 6, Page 323) 

1975ம் ஆண்டு லாரி காலின்ஸ், டொமினிக் லேப்பியர் ஆகியோர் எழுதிய மிகப் பிரபலமான “நள்ளிரவில் சுதந்திரம்” (Freedom at Midnight) என்ற நூல் வெளிவந்தது. 

அந்த நூல் காவல்துறை ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. மேற்கு பாகிஸ்தானிலிருந்து இங்கே வந்த அகதியான மதன்லால் கே. பஹ்வா 1948ம் ஆண்டு ஜனவரி 20 அன்று காந்தி பிரார்த்தனைக் கூட்டத்தில் ஒரு குண்டை வெடிக்கச் செய்தான். அவனுடன் கூட வந்த கோட்சேயும், இன்னும் சிலரும் தப்பி ஓடி விட்டனர்.

அடுத்த நாள், இந்த வழக்கு விசாரணையை பாம்பே மாகாண உள்துறை அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் காவல்துறை அதிகாரி நகர்வாலாவிடம் ஒப்படைத்தார். 

“நள்ளிரவில் சுதந்திரம்” நூலில் அதன் ஆசிரியர்கள் எழுதுகிறார்கள்:“நகர்வாலா மதன்லாலைப் பிடிக்க அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டார். காந்தியைக் கொல்ல முனைந்தவர்கள் பனை மரங்களுக்கிடையில் அமைதியாக இருந்த வீடுகளைக் கடந்து பாம்பேயின் கெலுக்சர் சாலையில் அமைந்துள்ள சாவர்க்கரின் வீட்டிற்குச் சென்றார்கள் என்பதைக் கண்டறிய அந்த இளம் அதிகாரிக்கு வெகு நாட்கள் பிடிக்கவில்லை. 

மதன்லால் அந்தக் கொலை முயற்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு சாவர்க்கரை அவரது வீட்டில் வைத்து சந்தித்ததை அடிப்படையாக வைத்து சாவர்க்கரைக் கைது செய்ய நகர்வாலா மொரார்ஜியிடம் அனுமதி கேட்டார்.

மொரார்ஜி கோபத்துடன் அதற்கு மறுத்ததுடன் இவ்வாறு அந்த அதிகாரியிடம் எரிந்து விழுந்தார்: “உமக்கென்ன பைத்தியமா? இந்த மொத்த மாகாணமும் தீக்கிரையாகிப் போக வேண்டும் என்று நீர் எண்ணுகிறீரா?”நகர்வாலாவால் சாவர்க்கரை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால்தான் போட முடியவில்லை. 

ஆனால் ஒரு காரியம் செய்தார். பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட அதிபுத்திசாலிப் பிரிவான ‘கண்காணிப்பாளர் பிரிவு’ (Watchers’ Branch) என்ற பிரிவுக்கு சாவர்க்கரைக் கண்காணிக்கும் பொறுப்பை ஒப்படைக்க முடிந்தது.”(நள்ளிரவில் சுதந்திரம், பக். 417)

சாவர்க்கர் தீவிரக் கண்காணிப்பின் கீழ் வந்தார். ”ஜிம்மி நகர்வாலாவின் பாம்பே புலன் விசாரணை முதல் 48 மணி நேரத்தில் கொஞ்சம் புதிய செய்திகளைக் கொண்டு வந்தது. பாம்பே கண்காணிப்பாளர் பிரிவு சாவர்க்கர் சதான் என்னும் சாவர்க்கர் இல்லத்தின் முன்பு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டது. ஆனால் அதிபுத்திசாலியான சாவர்க்கர் தன் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்தவில்லை.

சில ஆபத்தான மர்ம அலை அந்த இல்லத்திலிருந்து வெளிவருவது போலிருந்தது.சாவர்க்கரின் வீட்டைச் சுற்றி அவரின் சீடர்களின் நடமாட்டங்களில் நகர்வாலாவுக்கு சந்தேகம் பிறந்தது. அவரது போலீஸ் மூளை ஏதோ ஒரு விபரீதம் நடக்கப்போவது குறித்து அவருக்கு எச்சரிக்கை விடுத்தது. டெல்லி காவல்துறைத் தலைவரிடம் நகர்வாலா இவ்வாறு கூறினார்: “ஏன் என்று கேட்காதீர்கள். இன்னொரு கொலை முயற்சி நடக்கவிருக்கிறது. இங்கு நிலவும் சூழ்நிலையை வைத்து நான் இதனை உணர்கிறேன்.”(நள்ளிரவில் சுதந்திரம், பக். 429-430) - 

மொரார்ஜியின் மௌனம், 

ஒரு நீதிபதியின் தடை மெரார்ஜி மிகத் தாமதமாக தன் கருத்தைத் தெரிவித்தார். காந்தி படுகொலை வழக்கில் அவர் ஆதாரங்களைத் தந்தார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் சி.கே. தஃப்தாரி என்பவர் நீதிபதி அத்மா சரணுக்கு அளித்த மனுவின் உள்ளடக்கச் செய்தியை 1948ம் ஆண்டு செப்டம்பர் 1 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் வெளியிட்டது. அதில் சாவர்க்கர் சம்பந்தப்பட்ட செய்தி உள்ள பகுதியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது:

“கண்ணியத்திற்குரிய மொரார்ஜி தேசாய் அவர்களைக் குறுக்கு விசாரணை செய்தபொழுது, குற்றவாளி எண் 7ன் (வி.டி. சாவர்க்கர்) வழக்கறிஞர் கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்டார்: “சாவர்க்கரின் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற பேரா. ஜெய்னின் கூற்று போக, உங்களுக்கு சாவர்க்கர் குறித்து வேறு ஏதேனும் தகவல் தெரியுமா?” “மொரார்ஜி இதற்கு இவ்வாறு பதிலளித்தார்: “நான் முழு உண்மைகளையும் சொல்லட்டுமா? நான் பதிலளிக்கத் தயாராகவே வந்திருக்கிறேன். சாவர்க்கர்தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும்?”

குற்றவாளி எண் 7ன் (வி.டி. சாவர்க்கரின்) வழக்கறிஞர் தான் கேட்ட கேள்வியைப் பின்வாங்கிக் கொள்வதாக அறிவித்தார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் இந்தக் கேள்வி, பதில், சாவர்க்கரின் வழக்கறிஞரின் கூற்று இவையனைத்தையும் நீதிமன்றத்தில் பதிவு செய்ய அனுமதிக்கும்படி நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிபதி அவ்வாறு பதிவு செய்வதற்கு அனுமதி தர மறுத்துவிட்டார்.

”இப்படி நீதிபதி போட்ட தடையை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏப்ரல் 8, 1948 அன்று பாம்பே சட்டசபையில் மொரார்ஜி வெளிப்படையாக இவ்வாறு சொன்னார்:

“சாவர்க்கரின் கடந்த கால சேவைகள் அனைத்தும் இந்தத் தீய சேவையின் மூலம் அழிந்துவிட்டது.”அனைத்துக் கொலைகளிலும் முக்கிய குற்றவாளிக்கெதிரான வழக்கில் அவருடன் கூட சென்று, அந்தக் குற்றத்துக்கு உடந்தையாக இருந்து, பிறகு குற்றவாளிக்கு எதிராகச் சான்று கூற அனுமதிக்கப்பட்ட ஒருவரின் (அப்ரூவராக மாறியவரின்) வாக்குமூலம் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறும்.காந்திப் படுகொலை வழக்கில் அது நடந்தது டிகாம்பர் பாட்கே என்ற அப்ரூவரால். இந்த வழக்குக்குத் தீர்ப்பளித்த நீதிபதி ஆத்மா சரண் தனது தீர்ப்பில் டிகாம்பர் பாட்கேவின் வாக்குமூலத்தை மிகத் துல்லியமாக அலசுகிறார்.“

டிகாம்பர் பாட்கே என்ற அப்ரூவரிடம் விசாரணையும், குறுக்கு விசாரணையும் 20.07.1948 முதல் 30.07.1948 வரை நடைபெற்றது. அவர் ஏழு நாட்கள் குறுக்கு விசாரணை மட்டும் செய்யப்பட்டார். ஆதலால் அவரது ஆதாரம் கொடுக்கும் விதம், அவரது அந்தஸ்து அனைத்தையும் அறிய முடிந்தது. அவர் அவரது தரப்பு உண்மைகள் அனைத்தையும் சுற்றி வளைக்காமல் நேரடியாக விவரித்தார். அவர் எந்தவொரு குறுக்கு விசாரணைக் கேள்விக்கும் நழுவலாக பதில் சொல்லவில்லை. அல்லது அந்தக் கேள்வியிலிருந்து தப்பிக்க முயலவில்லை. இவ்வளவு நீண்ட நெடிய சம்பவத்தை பிசிறில்லாமல் துல்லியமாகச் சொல்வது வேறு யாருக்கும் சாத்தியப்பட்டிருக்காது. இவ்வளவு நீண்ட விஷயங்களை எவராலும் மனனம் செய்யமுடியாது.

“அப்ரூவர் அவரது ஆதாரத்தில் சொல்லும்பொழுது, 20.01.1948 அன்று மெரினா ஹோட்டலில் வைத்து அவர்கள் வெடிப்பஞ்சுகளுக்கு பிரைமர் பொருத்தியதாகவும், கையெறி குண்டுகளுக்கு வெடிக்கருவி பொருத்தியதாகவும், சதித்திட்டம் குறித்து கலந்தாலோசித்ததாகவும், அவர்களிடையே சில “விஷயங்களை” பரிமாறிக்கொண்டதாகவும் கூறுகிறார்.

ஆனால் இதற்கு நேரடி தொடர் ஆதாரம் எதனையும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சார்பில் சமர்ப்பிக்க முடியவில்லை ஆனால் மறுமகமான தொடர் ஆதாரம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. நைன் சிங் என்பவரின் ஆதாரத்தின் படி (விசாரணைகள் பி-17, பி-24 ஆகியன ஆதரித்தபடி) மூன்று தேநீர்கள் சொல்லப்பட்டு, அறை எண் 40ல் வினியோகிக்கப்பட்டிருக்கின்றன.“

ஆதாரங்களை ஆராயும்பொழுது ஒரு விஷயம் எல்லோருக்கும் நன்றாக விளங்கும். அடுத்தடுத்த நிகழ்வுகளைக் கூறும்பொழுது அதன் வெளிச்சத்தில் முந்தைய நடப்புகளையும் நாம் கணித்துக்கொள்ளலாம். அப்ரூவரின் வாக்குமூலம் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளுக்கு முழுமையாகப் பொருந்துகிறது. தொடராகவும் அமைந்துள்ளது. 

ஆனால் வி.டி. சாவர்க்கர் போன்ற சில குற்றவாளிகளை அடையாளப்படுத்தும் விஷயத்தில் அப்ரூவரின் ஆதாரம் தொடராக இல்லை.“அப்ரூவர் (சாவர்க்கர் விஷயத்தில்) கூறிய ஆதாரம் என்னவென்றால் 

14.01.1948 அன்று நாதுராம் வி. கோட்சேயும், நாராயண் டி. ஆப்தேவும் அவரை தாதரில் உள்ள ஹிந்து மகாசபா அலுவலகத்திலிருந்து சாவர்க்கர் சதான் என்னும் சாவர்க்கரின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். 

“விஷயத்தை” வைப்பதற்கு சில ஏற்பாடுகளைச் செய்யவேண்டியிருப்பதாக அவரிடம் சொல்லப்பட்டது. “விஷயம்” அடங்கிய பையைக் கையில் வைத்திருந்த கோட்சேவும், ஆப்தேவும் சாவர்க்கர் சதானின் வெளியில் அப்ரூவரை விட்டு விட்டு வீட்டின் உள்ளே சென்றனர். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து அவர்கள் அதே பையுடன் வெளியே வந்தனர்.“

அதன் பிறகு அப்ரூவர் என்ன சொல்கிறார் என்றால், 15.01.1948 அன்று, தீட்சித் மகாராஜ் கோயிலின் சுற்றுச்சுவருக்கருகில் வைத்து நாராயண் டி. ஆப்தே அப்ரூவரிடம் இவ்வாறு கூறினார்: “காந்தி கொல்லப்படவேண்டும் என்று சாவர்க்கர் தீர்மானித்திருக்கிறார். அந்த வேலையை எங்களிடம் நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்.” “

அதன் பிறகு அப்ரூவர் சொல்வது என்னவென்றால், 17.01.1948 அன்று கடைசியாக ஒரு தடவை சாவர்க்கரைப் பார்த்து விட்டு வரவேண்டும் என்று நாதுராம் வி. கோட்சே சொன்னார். அதன்படி அவர்கள் சாவர்க்கர் சதானுக்குச் சென்றனர். நாராயண் டி. ஆப்தே தரைத் தளத்திலுள்ள ஓர் அறையில் அப்ரூவரைக் காத்திருக்குமாறு கூறிவிட்டு, அவரும், கோட்சேவும் முதல் தளத்திற்குச் சென்றனர். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து அவர்கள் கீழே வந்தனர். அவர்களுக்குப் பின்னால் சாவர்க்கரும் தொடர்ந்து வந்தார். நாதுராம் வி. கோட்சேவையும், நாராயண் டி. ஆப்தேவையும் நோக்கி சாவர்க்கர் “யஷஸ்விஹூன்யா” (சென்று வாருங்கள், வென்று வாருங்கள்) என்று கூறினார்.“

சாவர்க்கர் சதானிலிருந்து திரும்பி வரும்பொழுது நாராயண் டி. ஆப்தே அப்ரூவரிடம் சாவர்க்கர் தங்களிடம் இவ்வாறு கூறியதாகக் கூறினார்: “காந்தியின் 100 வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த வேலை வெற்றிகரமாக முடியும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை”.

“வினாயக் டி. சாவர்க்கர் மேல் அரசுத்தரப்பு தொடுத்துள்ள வழக்கு அப்ரூவரின் ஆதாரத்தை மட்டுமே மையமாக வைத்து அமைந்துள்ளது. வினாயக் டி. சாவர்க்கருக்கெதிரான அப்ரூவரின் கூற்றே அரசுத் தரப்பு விளக்கத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. அப்ரூவர் கூறும் நிகழ்வுகளின் இடைத்தொடர்ச்சிக்கு செல்வி ஷாந்தாபாய் பி. மோடக், அய்தப்பா கே. கோடியான் ஆகிய இருவரின் ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

ஆனால் நீதிமன்றம் அந்த இருவரையும் அவ்வளவு முக்கியமாகக் கருதவில்லை.“சாவர்க்கரின் இல்லத்தில் முதல் தளத்தில் நாதுராம் வி. கோட்சேவுக்கும், நாராயண் டி. ஆப்தேவுக்கும் இடையில் என்ன உரையாடல் நடைபெற்றது, அவ்விருவருக்கும், சாவர்க்கருக்குமிடையே என்ன உரையாடல் நடைபெற்றது என்பது குறித்த எந்த விவரமும் வழக்குப் பதிவில் இல்லை. 

ஆதலால் சாவர்க்கர் அப்ரூவர் முன்னிலையில் கோட்சேயிடமும், ஆப்தேவிடமும் (சென்று வாருங்கள், வென்று வாருங்கள் என்று) வாழ்த்துக் கூறியது மகாத்மா காந்தியின் படுகொலை சம்பந்தப்பட்டதுதான் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.“ஆதலால் அப்ரூவரின் கூற்றை வைத்து சாவர்க்கருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் முடிவுக்கு வருவது 
உறுதியில்லாததாக ஆகிறது.”

ஆக, அப்ரூவராக மாறிய பாட்கே உண்மையான ஒரு சாட்சிதான் என்று நீதிபதி ஒப்புக்கொண்டாலும், சாவர்க்கர் சம்பந்தப்பட்டு அவர் கூறிய நிகழ்வுகள் ஒப்புறுதிப்படுத்தப்படாததால் (uncorroborated), அதன் தொடர்ச்சி உறுதிப்படுத்தப்படாததால் சாவர்க்கருக்கு தண்டனை அளிப்பது “பாதுகாப்பற்றது” என்று நீதிபதி கருதுகிறார்.

ஆனால், ஏழு பக்கங்கள் கழித்து, அடுத்த அத்தியாயத்தில் (XXV), பாட்கே குறித்து நீதிபதி கூறிய கருத்துகளுக்கு அவரே முரண்படுகிறார். ஆதாரச் சட்டத்தின் அடிப்படையில் சாவர்க்கரை சிறைக்கு அனுப்புவது “பாதுகாப்பற்றது” என்றுதான் நீதிபதி கூறியுள்ளார். 

ஆனால் சாவர்க்கரின் பங்கு குறித்து நீதிபதி இவ்வாறு கூறுகிறார்:“வினாயக் டி. சாவர்க்கர் அவரது வாக்குமூலத்தில் இந்தச் ‘சதி’யில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறுகிறார். தனக்கு கோட்சே, ஆப்தே ஆகியோர் மேல் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது என்றும் கூறுகிறார். 

மேலே குறிப்பிடப்பட்டது போல் அரசுத்தரப்பு வழக்கு அப்ரூவரின் ஆதாரத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது. அதற்கடுத்ததாக குறிப்பிடப்பட்டது போல் அப்ரூவரின் கூற்றை மட்டுமே வைத்து சாவர்க்கரின் மேல் நடவடிக்கை எடுக்கும் முடிவுக்கு வருவது பாதுகாப்பற்றது. 

ஆதலால் 20.01.1948 அன்றும், 30.01.1948 அன்றும் டெல்லியில் நடந்த சம்பவங்களில் சாவர்க்கருக்குப் பங்கிருக்கிறது என்று கருதுவதற்கு எந்தவிதக் காரணமும் இல்லை.

”இந்த இறுதி வாக்கியம் தீர்ப்பின் இடைக்கூற்று மட்டுமே. இதற்கு சட்டரீதியாக எந்த மதிப்பும் இல்லை. அப்ரூவர் பாட்கேயின் வாக்குமூலத்தில் 20.01.1948 அன்றும், 30.01.1948 அன்றும் டெல்லியில் நடந்த சம்பவங்களில் சாவர்க்கருக்குப் பங்கிருக்கிறது என்பதற்கு போதிய ஆதாரங்கள் இருக்கின்றன.

அப்ரூவரின் கூற்றில் நம்பகத்தன்மைக்கு எந்தக் குறைவுமில்லை. ஆனால் ஒப்புறுதிப்பாடு (corroboration) குறைபாடு மட்டுமே உள்ளது.ஆதாரம் ஒப்புறுதிப்படுத்தப்பட்டது, ஆனால் மிகத் தாமதமாக!

சாவர்க்கரின் மரணத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குப் பிறகு, அவரது உதவியாளர்கள் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எல். காபூர் கமிஷன் முன் காந்திப் படுகொலை குறித்து பேசினார்கள். அப்பொழுது அப்ரூவர் பாட்கேவின் கூற்றுகளுக்கு போதுமான அளவு ஒப்புறுதிப்பாட்டைக் கொடுத்தார்கள்.

நீதிபதி ஜே.எல். காபூர் கமிஷனின் அறிக்கை இவ்வாறு கூறுகிறது: 

“1948 மார்ச் 4ம் தேதி பாம்பே போலீசில் பதிவு செய்யப்பட்டபடி, சாவர்க்கரின் மெய்க்காப்பாளரான அப்பா ராம்சந்த்ர காசரின் வாக்குமூலம் இவ்வாறு கூறுகிறது: 

1946லேயே ஆப்தேவும், கோட்சேவும் சாவர்க்கரை அடிக்கடி சந்திக்க வருவர். கர்க்கரேயும் சில நேரங்களில் சாவர்க்கரைச் சந்திக்க வருவார். 1947 ஆகஸ்ட் மாதம் சாவர்க்கர் ஒரு கூட்டம் சம்பந்தமாக பூனா சென்றிருந்தபொழுது கோட்சேயும், ஆப்தேயும் அவர் கூடவே எப்பொழுதும் இருந்தனர். அவர்கள் சாவர்க்கருடன் ஹிந்து மகாசபாவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்தனர். தனக்கு வயதாகிக்கொண்டு வருவதாகவும், அவர்கள்தான் இந்தப் பணியை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் சாவர்க்கர் ஆப்தேவிடமும், கோட்சேயிடமும் கூறினார். 

1947 ஆகஸ்ட் 5 அல்லது 6ம் தேதி, டெல்லியில் அனைத்திந்திய ஹிந்து மாநாடு நடைபெற்றது. அதற்கு சாவர்க்கரும், கோட்சேயும், ஆப்தேவும் விமானத்தில் சென்றனர். அதேபோல் அங்கிருந்து பாம்பேக்கு ஒன்றாகவே விமானத்தில் திரும்பினர். 

1948 ஜனவரி 13 அல்லது 14 அன்று, கர்க்கரே ஒரு பஞ்சாபி இளைஞனோடு சாவர்க்கரிடம் வந்தார். அவர்கள் சாவர்க்கரை 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேட்டி கண்டனர். அதேபோல் 15 அல்லது 16ம் தேதி, ஆப்தேவும், கோட்சேவும் இரவு 9.30 மணியளவில் சாவர்க்கரைப் பேட்டி கண்டனர். அதற்கு ஒரு வாரம் கழித்து, 23 அல்லது 24 தேதியாக இருக்கலாம், ஆப்தேவும், கோட்சேவும் மீண்டும் சாவர்க்கரைச் சந்திக்க வந்தனர்.காலை 10 முதல் 10.30 மணியளவில் அவருடன் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.”இப்படிப் போகிறது அந்த அறிக்கை.

ஆக, சாவர்க்கர் காந்திப் படுகொலையில் சம்பந்தப்பட்டிருப்பதுது முழு முதல் உண்மை. 

வழக்கு நடந்த நேரத்தில் அப்ரூவரின் ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று நீதிபதி கருதியதால் சாவர்க்கர் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அதற்குப் பின்னால் வந்த அனைத்து ஆதாரப்பூர்வ தகவல்களும் காந்தியின் படுகொலையில் சாவர்க்கருக்கு முழு பங்கிருக்கிறது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

இதனை உணர்ந்து நாட்டையே களங்கப்படுத்தும் விதமாக பா.ஜ.க. அரசு பாராளுமன்றத்தில் சாவர்க்கருக்கு வைத்த சிலை அகற்றப்படுமா? - 

-- 
with peace,
Shajahan Mohamed Umer
"Help People"
"Worship the Creator not his creations"

"There is none worthy and worship the God except the one.
  We can't create idols or statues of the God because No one has seen the God" (Logic)
என்னுடைய நாடு இந்த உலகம்உலகத்தில் வாழும் அனைவரும் என் உடன்பிறந்தவர்கள்பங்காளிகள். நாம் அனைவரும் ஒரு தாய் தந்தை மக்கள். உலக மக்கள் அனைவரையும் நேசிக்கிறேன், மதிக்கிறேன், மரியாதை செலுத்துகிறேன். எனக்கு இனவெறி, நிறவெறி, மதவெறி, ஜாதிவெறி, மொழிவெறி, பணவெறி, தேசியவெறி, கோத்திரவெறி, குடும்பவெறி, பெருமை, கர்வம், அகம்பாவம், பரிகாசம், திமிர், தெனாவட்டு போன்ற எதுவும் கிடையாதுஉலக மக்கள் எந்த மதத்தையும் பின்பற்றலாம், அது அவர்கள் இஷ்டம். நன்மையை ஏவ வேண்டும், தீமையை தடுக்க வேண்டும்.

" ஒன்றே குலம் ஒருவனே தேவன், 
  யாதும் ஊரே யாவரும் கேளீர், 
  பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் "

உதவி செய்வது அனைத்தும் தர்மமாகும்.


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR