ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Saturday, 28 November 2015

என்னதான் நடந்தது, ஆமிர் என்ன சொன்னார்

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடக
சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தவர்
ராம்நாத் கோயங்கா. ஆர்என்ஜி
என்பார்கள். அவர் பெயரால்
எக்ஸ்பிரஸ் நிறுவனம் விருது ஏற்படுத்தி
உள்ளது. சிறந்த பத்திரிகையாளர்களுக்கு
வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான
விருதுகள் வழங்கும் விழா நேற்று
டெல்லியில் நடந்தது. பிரபலங்கள் கலந்து
கொண்டனர். ஆமிர் கான் சிறப்பு
விருந்தினர். ஆர்என்ஜியின் பேரன் அனந்த்
கோயங்கா அவரை பேட்டி கண்டார்.
பார்வையாளர்களும் கேள்விகளை வீசினர்.
அதிலிருந்து...
அனந்த்: வருகைக்கு நன்றி ஆமிர்.
ஆமிர்: பத்திரிகை துறைக்கு சவாலான
காலகட்டம் இது. இந்தியாவின் மிகச்சிறந்த
பத்திரிகையாளர்கள் இங்கே வந்திருக்கிறீர்கள்.
எல்லாருக்கும் வணக்கம்.
அனந்த்: நான் உங்கள் ரசிகன். சிறந்த
நடிகர் என்பதால் அல்ல. வித்யாசமான
நடிகர். மற்றவர்கள் தொடாத
விஷயங்களை எடுத்து படம் பண்ணுகிறீர்கள்.
எந்த விஷயத்தையும் யோசித்து அதை பற்றி ஒரு
கருத்து வைத்திருக்கிறீர்கள். பயமில்லாமல் அதை
வெளிப்படையாக
சொல்கிறீர்கள். இந்த கருத்து, இந்த
நிலைப்பாடு எல்லாமே நீங்கள் ஆழமாக
யோசித்து எடுப்பதா, திடீரென மனதில்
தோன்றுவதா?
ஆமிர்: இரண்டும்தான். மனதில்
திடீரென தோன்றும். அதை ஆராய்வேன்.
அலசுவேன். ஒரு கருத்து உருவாகும். உடனே
சொல்லிவிட மாட்டேன். அதற்கான
நேரம் இதுதான், சொல்லிவிடு என்று
உள்ளுணர்வு உந்தும்போது பேசுவேன்.
நிறைய பிரச்னைகளில் கருத்து சொல்லி
இருக்கிறீர்கள். சிலது அரசியல்
சம்மந்தப்பட்டவை. இதை ஏன்
சொன்னோம், சொல்லாமல்
இருந்திருக்கலாமோ என்று பின்னர்
எதற்காவது வருத்தப்பட்டது உண்டா?
இல்லை. நான் சொன்ன
ஒவ்வொரு கருத்துக்கும் பாராட்டு
வந்த மாதிரியே எதிர்ப்பும் கண்டனமும் நிறையவே
வந்திருக்கிறது. ஆனால் சொன்ன
எதற்காகவும் வருந்த வேண்டிய நிலை
வரவில்லை.
அனந்த்: உங்கள் கருத்தை பிடிக்காதவர்களா
ல் உங்கள் தொழிலுக்கு நேரக்கூடிய
நஷ்டத்தை நினைத்து பார்த்ததே இல்லையா?
இல்லை. உண்மையில் என் கருத்துகளுக்கு எழுந்த
எதிர்ப்பால் என் வருமானம் குறைந்ததே
இல்லை.
பொதுவாக உங்களை போன்ற
பிரபலங்கள் பிரச்னையில் சிக்கி நஷ்டப்படும்
வகையில் கருத்து எதுவும்
சொல்வதில்லை. அப்படி
இருப்பதுதான் நல்லதா? அல்லது எல்லா
பிரபலங்களும் உங்களை மாதிரி லாபநஷ்டம்
பார்க்காமல் கருத்துக்களை ஓப்பனாக பேசி
விவாதத்தை தூண்டுவது சமுதாயத்துக்கு
நல்லதா? இந்த கேள்விக்கு இங்கு வந்துள்ள
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பதில் தர
வேண்டுகிறேன்?
அருண் ஜேட்லி: கலைஞர்கள், படைப்பாளிகள்
தங்கள் தொழிலில் மூழ்கி
கிடப்பவர்கள். மற்ற விஷயங்களில் கவனம்
செலுத்த அவர்களுக்கு நேரம் இல்லை.
எப்போதும் பிசி. அவர்களுக்கு மத்தியில் ஆமிர்
போன்ற சிலர் சுற்றி நடப்பதை கவனித்து கருத்து
சொல்வது நல்ல விஷயம். நாட்டு
நடப்பு பற்றி சிந்திப்பதே நல்ல விஷயம்தான்.
ஆழ்ந்த சிந்தனையில் வெளிப்படும்
கருத்துகளால் சமூகத்துக்கு நன்மைதான்
ஏற்படும்.
அனந்த்: சமூக ஊடகம் ரொம்ப
ஆக்டிவாக இருக்கிறது. எல்லாரும் எல்லா
விஷயத்திலும் கருத்து
சொல்கிறார்கள். இதனால்
நீங்களும் ஏதாவது சொல்லியாக
வேண்டும் என்று நிர்ப்பந்தம் உண்டாகிறதா,
ஆமிர்?
ஆமிர்: இல்லை. எந்த ஊடகத்தாலும் எனக்கு
நிர்ப்பந்தம் கிடையாது. ஒரு விஷயத்தில் என்
கருத்தை சொல்ல வேண்டும் என்று
நானாக எப்போது உணர்கிறேனோ அப்போது
சொல்லி விடுவேன். அவ்வளவுதான்.
நம்மூர் கலைஞர்கள், படிப்பாளிகள்
நீண்டகாலமாக அமைதியாக தானுண்டு
தன் வேலையுண்டு என இருந்தார்கள். இப்போது
சில மாதங்களாக அவர்களிடம் மாற்றம்
தெரிகிறது. நாட்டில் நடப்பது குறித்த
தங்கள் கருத்தை தனியாகவும் கூட்டாகவும்
அழுத்தமாக வெளிப்படுத்துகிறார்கள்.
அதைப்பற்றி ஒரு கலைஞனாக என்ன
நினைக்கிறீர்கள்?
படைப்பாளிகள், சிந்தனையாளர்கள் தாங்கள்
என்ன நினைக்கிறோம் என்பதை கட்டாயம்
வெளிப்படுத்த வேண்டும். அது நாட்டுக்கு
அவசியம். விஞ்ஞானிகள், வரலாற்று
ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் அப்படி
தங்கள் உணர்வுகளை தெரியப்படுத்த
முன்வருவதை வரவேற்கிறேன். அதிருப்தி அல்லது
ஏமாற்றம் காரணமாக தமது விருதுகளை
திருப்பி தருகிறார்கள். தங்கள் உணர்வுகளை
மற்றவர்களுக்கு உணர்த்த அவர்கள் அந்த
வழியை தேர்ந்து எடுக்கிறார்கள் என்றால் அது
அவர்களின் உரிமை.
அனந்த்: எதிர்ப்பை தெரிவிக்க விருதுகளை
திருப்பி கொடுப்பதை சரிதான்
என்கிறீர்களா?
ஆமிர்: எதிர்ப்பை வெளிப்படுத்த எத்தனையோ
வகையில் போராடலாம். அதில் இது ஒன்று.
ஒருவரின் எதிர்ப்பு எப்படி இருக்க வேண்டும்
என்று தீர்மானிக்க நீங்களோ நானோ யார்?
அந்த எதிர்ப்பு வன்முறை இல்லாததாக,
மற்றவர்களை பாதிக்காததாக இருக்க
வேண்டும் என்பது மட்டுமே முக்கியம். யாரையும்
அடித்து உதைக்க கூடாது, சட்டத்தை கையில்
எடுத்துக் கொள்ளகூடாது. மற்றபடி
யாரும் எப்படி வேண்டுமானாலும் எதிர்ப்பை
வெளிப்படுத்தலாம்.
அனந்த்: அவ்வாறு எதிர்ப்பவர்கள்
தெரிவிக்கும் கருத்தோடு நீங்கள் முழுமையாக
உடன்படுகிறீர்களா? அல்லது
கொஞ்சம் ஓவர் என
நினைக்கிறீர்களா?
ஆமிர்: அவர்கள் அத்தனை பேரின் எதிர்ப்பு,
போராட்டம் குறித்து ஒரு நடிகனான என்னை விட
பத்திரிகையாளர்களான நீங்கள் மிகவும்
அதிகமாக அறிந்திருப்பீர்கள். எனக்கு
தெரியவந்த செய்திகளின்
அடிப்படையில் என் மனதில் தோன்றுவதை மட்டும்
இங்கே சொல்கிறேன். தங்களை சுற்றிலும்
இப்போது நடக்கும் சில சம்பவங்கள் அவர்கள்
மனதில் ஒரு கவலையை உண்டாக்கி இருக்கிறது.
சமூக சூழலில் மெதுவாக ஏற்பட்டு வரும்
ஒரு மாற்றம் ஒரு அச்சம், ஏமாற்றம்
அவர்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை. அந்த மன
கலக்கத்தை இந்த வழியில் தெரியப்படுத்துக
ிறார்கள் என்றுதான் நான் பார்க்கிறேன்.
தினம் தவறாமல் பத்திரிகை வாசிக்கிறேன்.
அதில் வரும் செய்திகளை பார்த்தால்
சில சம்பவங்களை பற்றி படிக்கும்போது எனக்கு
பயம் வருகிறது. நாம் பாதுகாப்பான
சூழலில் வாழ்கிறோமா என்ற கவலை
ஊண்டாகிறது. உலகம் முழுவதும் எல்லா
காலத்திலும் வன்முறை சம்பவங்கள் நடந்து
கொண்டுதான் இருக்கிறது. எனக்கும்
அது தெரியும். ஆனால் என் நாட்டில்
இப்படி இதுவரை பாதுகாப்பாற்ற உணர்வு
தோன்றியதில்லை. ஏன் இப்படி என்று யோசித்தபோது
இரண்டு மூன்று காரணங்கள் எனக்கு
தென்பட்டது.
ஒன்று, நீதித்துறையின் செயல்பாடு. ஒரு
தவறு நடந்தால், அதை சரி செய்வது நீதி.
யார் தப்பு செய்தாலும் தண்டனை
நிச்சயம் என்பது நடைமுறையாக இருந்தால்,
இங்கே சட்டத்தின் ஆட்சி நடக்கிறது; நாம்
பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வு
மக்கள் மனதில் நிறைந்து இருக்கும்.
இரண்டாவது, மத்தியிலும் மாநிலங்களிலும்
நாம் தேர்ந்து எடுக்கும் ஆட்சியாளர்களின்
செயல்பாடு. சில தனி நபர்களோ ஒரு சில
அமைப்புகளோ தமது பேச்சாலும்
செயலாலும் சமுதாயத்தில் பலர்
மனதில் ஒரு பயத்தை உண்டாக்கும்போது, அந்த
அத்துமீறலை வன்மையாக கண்டித்து,
குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்க வழி
செய்வது ஆட்சியாளர்களின்
பொறுப்பு. அது நடக்காவிட்டால்
மக்கள் மனதில் பயம் அதிகரிக்கும். நமக்கு
பாதுகாப்பு இல்லையோ என்று கவலை
உண்டாகும்.
நான் இப்படி சொல்வதை குறிப்பிட்ட
எந்த ஆட்சிக்கும் எதிரானது என பார்க்க
வேண்டாம். எல்லா ஆட்சியிலும் இப்படி
சம்பவங்கள் நடந்து கொண்டுதான்
இருக்கின்றன. இப்போது பிஜேபி ஆட்சி நடக்கிறது.
ஆகவே, இன்று நடக்கும் சம்பவங்களுக்காக
அவர்களை கேள்வி கேட்கும்போது, 1984ல் என்ன
நடந்தது? சீக்கியர்கள் கொலை
செய்யப்பட்டார்களே? என்று பழைய
நிகழ்ச்சிகளை காட்டி திருப்பி கேட்கிறார்கள்.
பழைய தப்பு புதிய தப்பை நியாயப்படுத்த
முடியுமா?
அன்று நடந்ததும் மோசமான குற்றம்தான்.
மிகப்பெரிய குற்றம். அதற்கு முன்னாலும்
நடந்திருக்கிரது. ஒரு அப்பாவி
செத்தாலும் ஆயிரம் பேர்
கொல்லப்பட்டாலும் அது
கொடுமை, அது பெரும் இழப்பு,
பெரிய துரதிர்ஷ்டம்.
அப்படி நடக்கும்போது, சட்டம் தன் கடமையை
செய்ய வேண்டும் என்பதோடு கூடவே, ஆட்சி
அதிகாரத்தில் இருப்பவர்கள்
பயப்படாதீர்கள், நானிருக்கிறேன் என்று
ஆறுதல் வார்த்தை சொல்ல
மாட்டார்களா என்றும் அச்சப்படும் மக்கள்
எதிர்பார்க்கிறார்கள். ஒரு அறிக்கை மூலம்
பேச்சு மூலம் இதையாவது செய்ய வேண்டும்
என்பது குறைந்தபட்ச எதிர்பார்ப்பு.
அது இல்லாததால் முன்னைவிட அதிகமாக
இப்போது மக்கள் ஏமாற்றம் அடைகிறார்கள்.
பாதுகாப்பு இல்லை என்பதாக
பயப்படுகிறார்கள். மனைவி கிரணுடன்
இதுபற்றி பேசியிருக்கிறேன். நாங்கள் இத்தனை
காலமாக இந்தியாவில்தான் வசித்து
வருகிறோம். முதல்முறையாக சமீபத்தில் அவள்
கேட்ட கேள்வி என்னை அதிர வைத்தது. ‘இந்தியாவை
விட்டு போய்விடுவோமா?’ என்று கிரண் கேட்டாள்.
எப்படி இருந்தது தெரியுமா எனக்கு?
அவளுக்கும் தெரியும் அப்படி ஒரு கேள்வியை
என்னிடம் கேட்பது எவ்வளவு சீரியசான
விஷயம் என்று. ஆனாலும் கேட்டாள்.
ஏனென்றால் ஒரு தாயாக தன்
குழந்தையை நினைத்து அவள் கவலைப்படுகிறாள்.
நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை
பார்க்கும்போது இப்படிப்பட்ட சூழலிலா
குழந்தைகளை வளர்ப்பது என்ற அச்சம். தினசரி
பத்திரிகைகளை திறந்து பார்க்கவே
பயப்படுகிறாள். என்ன செய்யப் போகிறோம்,
தெரியவில்லையே என்ற தவிப்பு, இப்படியே
போனால் என்ன ஆகும் என்கிற கலக்கம்,
இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்ற
குழப்பம் அந்த தாயை ஆட்டிப்படைக்கிறது.
எனக்குள்ளும் அந்த உணர்வுகள் தேங்கி
நிற்கின்றன.
அனந்த்: தினசரி பேப்பர் பார்க்க பயம்
என்றீர்கள். மீடியா மீது உங்களுக்கு நம்பிக்கை
உண்டா? செய்திகள் நிஜம் என்று
நம்புகிறீர்களா?
ஆமிர்: ஓரளவு நம்புகிறேன். மீடியாவை
மொத்தமாக குற்றம்
சொல்ல மாட்டேன். இந்த சமூகத்தின்
ஒரு அங்கம்தானே ஊடகர்களும். சமூகத்தில்
நடக்கும் நல்லது கெட்டது சினிமா
ஊடகத்தை எப்படி பாதிக்கிறதோ அப்படித்தான்
செய்தி ஊடகத்திலும் தாக்கத்தை
ஏற்படுத்துகிறது. ஏராளமான இளைஞர்கள்
மீடியாவில் சமூக பொறுப்போடு
செயல்படுவதை பார்க்கிறேன். ஆனால்
எல்லாரும் அப்படி என என்னால்
சொல்ல முடியாது.
அனந்த்: முன்பெல்லாம்
ஒவ்வொரு பிரச்னையையும் அக்குவேறு
ஆணி வேறாக அலசி நுணுக்கமாக எடுத்து
சொல்வது பத்திரிகைகளின் பணியாக
இருந்தது. இன்று மக்களுக்கு
அதையெல்லாம் தெரிந்து
கொள்ள நேரம் இருக்கிறதா?
ஆமிர்: மாஸ் கம்யூனிகேஷனில்,
வெகுஜன தொடர்பில்
அதுதான் பெரிய சிக்கல். நானும் அதை
உணர்ந்திருக்கிறேன். ஆனால் அனுபவத்தில்
அதற்கு தீர்வும் கண்டிருக்கிறேன்.
உணர்வுபூர்வமாக மக்களை அணுகி ஒரு
விஷயத்தை பகிர்ந்து கொள்ளும்போது,
அதிலுள்ள நுணுக்கங்களை பற்றி விரிவாக
தெரிந்துகொள்ள அவர்கள்
விரும்புவது இல்லை. மூளைக்கு எட்ட வேண்டும்
என்று சேதி சொல்ல
மெனக்கிடுவதை விட, மக்களின் இதயத்தை
தொட முயன்றால் சேதி சீக்கிரம்
சேர்ந்து விடுகிறது என்பதை பார்த்து விட்டேன். என்
படங்களின் வெற்றி அந்த வழியில்
கிடைத்ததுதான்.
அனந்த்: படங்கள் மட்டுமல்ல. உங்கள் டீவி
நிகழ்ச்சி ‘சத்ய மேவ ஜெயதே’ கூட
வழக்கமாக யாரும் தொட
விரும்பாத சப்ஜெக்டாக இருந்தது
எப்படி?
ஆமிர்: மனசுக்கு பிடித்ததை செய்யணும்.
இதயம் சொல்றதை கேட்கணும்.
இதுதான் என் வழி. நான் எடுத்த பல
படங்களும் சரி, சத்யமேவ ஜெயதே
நிகழ்ச்சியும் சரி. அய்யோ, இதெல்லாம்
சரிப்பட்டு வராது; யாரும் பார்க்க
மாட்டாங்க என்றுதான் நண்பர்களும்
நலம் விரும்பிகளும் பயமுறுத்தினார்கள்.
வேண்டுமென்றே அல்ல. நான் தோற்றுவிட
கூடாது, நஷ்டத்தில் விழக்கூடாது என்று
நினைத்து அப்படி சொன்னார்கள்.
ஆனால் மக்கள் ஏற்றுக்
கொள்வார்கள் என்று நான்
நம்பினேன். அதுதான் நடந்தது.
அனந்த்: அப்படி இன்னும் இன்னும்
அதிகமான மக்கள் புத்திசாலித்தனமான
படங்களை பார்க்க வர வேண்டும் என்று
விரும்புகிறேன். அப்படி பார்க்கும்போதுதான்
பயங்கரவாதம் போன்ற முக்கியமான
பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியும்.
சாதாரணமாக அதை இஸ்லாம்
மதத்துடன் இணைத்து பார்க்கும் போக்குதானே
நிலவுகிறது?
ஆமிர்: பயங்கரவாதத்துக்கும் மதத்துக்கும்
சம்மந்தமே இல்லை. எந்த மதமும் வன்முறையை
போதிக்கவில்லை. ஆகவே எந்த மதத்தை
சேர்ந்தவர்கள் பயங்கரவாதத்தில்
ஈடுபட்டாலும், அவர்கள் அந்த மதத்தை
சார்ந்தவர்கள் அல்ல என்றுதான் எடுத்துக்
கொள்ள வேண்டும். முஸ்லிம்
தீவிரவாதி, இந்து தீவிரவாதி
என்றெல்லாம் மதத்துடன் இணைத்து
குறிப்பிடுவதே தவறு.
அனந்த்: நமது பிரதமர் மோடி நேற்று சிங்கப்பூரில்
பேசியதை அப்படியே வழி மொழிவது
போலிருக்கிறது நீங்கள் சொல்வது.
ஆனால் உண்மையில் பயங்கரவாதம்,
தீவிரவாதம் என்று சொல்லும்போதே
முஸ்லிம் தீவிரவாதிகளும் இஸ்லாமும் அங்கு
வந்துவிடுவதை பார்க்கிறோம். பாரிஸ் சம்பவம்
லேட்டஸ்ட் உதாரணம். அமைதியை விரும்பும்
பெரும்பான்மை முஸ்லிம்கள் இந்த மத
தீவிரவாதிகளுக்கு எதிராக இன்னும்
பலமாக குரல் கொடுத்தால்
நல்லது என்று உங்களுக்கு தோன்றியிருக்கிறதா?
ஆமிர்: மிகப்பெரும்பான்மையான
முஸ்லிம்கள் அத்தகைய சம்பவங்களை பார்த்து
மிகவும் கவலைப்படுகிறார்கள். அவர்கள்
அப்செட் ஆகிறார்கள். அன் ஈசியாக
உணர்கிறார்கள். இப்போது நிறைய முஸ்லிம்
அமைப்புகள் பயங்கரவாதத்துக்கு எதிராக,
ஐஎஸ் போன்ற அமைப்புகளை கண்டித்து
பேசுகிறார்கள். குறிப்பாக நமது நாட்டில்.
அனந்த்: அமைதியை விரும்பும் மிதவாத
முஸ்லிம்களின் குரலாக உங்களை
போன்றவர்களின் குரல் கேட்குமானால் அது
நல்லதுதானே?
ஆமிர்: முஸ்லிம்களை நான் பிரதிநிதித்துவ
படுத்துவதாக நீங்கள் சொல்வதே
எனக்கு சங்கடமாக இருக்கிறது. நான்
நானாகவே இருக்கக்கூடாதா? எதற்கு
மற்றவர்கள் சார்பில் பேச வேண்டும். அப்படி
பேசுவதானால் ஏன் முஸ்லிம்களுக்காக
மட்டும் பேச வேண்டும்? ஒவ்வொரு
இந்தியனின் குரலையும் நான் ஏன் பிரதிபலிக்க
கூடாது? பிறப்பால் நான் முஸ்லிம்.
ஆனால் நான் எதிரொலிப்பது என்
நாட்டின் குரல். என் நாட்டு மக்கள்
அனைவரின் குரல். அவர்கள் அத்தனை
பேருக்காகவும் நான் எழுந்து நிற்பேன். குரல்
எழுப்புவேன்.
ஜெனரல் அருண் குமார் சகானி
(தென் மேற்கு ராணுவ பிரிவு தளபதி):
தகவல்களும் செய்திகளுமே நமது
வாழ்க்கைமுறையை தீர்மானிக்கும்
காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இதில்
சினிமாவின் பங்களிப்பு முக்கியமானது.
சமீபத்தில் பஜ்ரன்கி பைஜான் படம் வந்தது.
இந்தியா பாகிஸ்தான் மக்கள் மனதில்
பரஸ்பரம் நல்ல எண்ணங்களை உருவாக்க
அது ரொம்ப உதவியது. நம்மை
சுற்றிலும் 7 நாடுகள் இருக்கின்றன. அந்த
மக்கள் அவர்களின் வாழ்க்கை பிரச்னைகள்,
கலாசாரம் இதெல்லாம்
பிரதிபலிக்கும் வகையில் படம் எடுத்தால் ஒருவரை
ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு
பரஸ்பரம் நல்லெண்ணம் வளர்ந்து
எல்லோரும் நட்போடு வாழமுடியும்தானே?
ஆமிர்: சமூகத்தில் ஒவ்வொரு துறைக்கும்
ஒரு ரோல் இருக்கிறது. ராணுவம் எல்லையை
காக்கிறது. போலீஸ் சட்டம் ஒழுங்கை
பார்க்கிறது. வக்கீல் நியாயம் பெற
உழைக்கிறார். டாக்டர் உயிரை காப்பாற்ற
பாடுபடுகிறார். இப்படி.. நாட்டை
மேம்படுத்துவது என்று வரும்போது சாலை
அமைக்கலாம், கட்டிடம் கட்டலாம்,
ஆஸ்பத்திரி அமைக்கலாம், ஆனால்
அதெல்லாம் ஹார்ட்வேர் மாதிரி.
சாஃப்ட்வேர் யார் தருவது?
பிரமாதமான சாலை, சக்தி வாய்ந்த
வாகனங்கள் எல்லாம் ஓகே.
திடீரென்று ஒருவன் எதிரே ராங் சைடில்
வருகிறானே, என்ன செய்வது? அவன்
ஏன் அப்படி சிந்திக்கிறான்? அங்கேதான்
மனித மூளையில் உதிக்கும் எண்ணங்கள் என்ற
சாஃப்ட்வேராக எழுந்து நிற்கிறது. எனவே
இன்று சரி செய்ய வேண்டியது அந்த
பிரச்னை, இந்த பிரச்னை எல்லாம் கிடையாது.
மக்களாகிய நம்மை முதலில் சரி செய்ய
வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதை
சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல்
படைப்பாளிகளுக்கு இருக்கிறது.
ஒரு நாட்டை கட்டமைப்பது என்பது
சிமென்டையும் இரும்பையும் வைத்தல்ல.
மனிதர்களை கொண்டு, பிரஜைகளை
கொண்டுதான் ஒரு நாட்டை
கட்டியெழுப்ப முடியும்.
படைப்பாளிகள்தான் மக்கள் மனதில்
அத்தகைய மாற்றத்தை உருவாக்க இயலும்.
சசி தரூர் (முன்னாள் அமைச்சர்): உங்கள்
கருத்து முற்றிலும் சரியானது. ஜெனரல்
சகானி சொன்னதுபோல பக்கத்து
நாட்டு மக்களை பற்றி மட்டுமல்ல, இங்கேயே
நம்மிடையே வாழும் மற்ற இன மொழி
மத பிரிவினருடனும் நமக்கு
நல்லெண்ணம் ஏற்பட படைப்பாளிகள்
பாடுபட வேண்டும். பைஜான் போல அமர் அக்பர்
ஆண்டனி போல படங்கள் அதிகம் தேவை.
மக்களிடையே இருக்கும் வேறுபாடுகளை
வெளிச்சமிட்டு காட்டி விரோதத்தை
வளர்க்காமல், பொதுவன
குணாதிசயங்களை ஒற்றுமைகளை கோடிட்டு காட்டி
நட்பை வளர்க்க படங்கள் உதவலாம். எழுத்து
உதவலாம். மனிதர்கள் மனதில் மற்றவர்களை
பற்றிய கசப்பு மேலிடுவது தவிர்க்க்ப்பட
வேண்டும். ஒட்டுமொத்த சூழலையும்
கெடுப்பது அந்த கசப்பும் விரோதமும்தான்.
ஆமிர் இதை நன்றாக புரிந்து
கொண்டிருக்கிறார். மற்றவர்களும்
அப்படி செயல்பட்டால் நல்லது?
ஆமிர்: எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
படைப்பாளிகளும் இதே சமூகத்தில் இருந்துதானே
வருகிறார்கள். அதனால் சமூகத்தில் நிலவும்
அத்தனை உணர்வுகளும் பாரபட்சங்களும்
கோபதாபங்களும் அவர்கள் மனதிலும்
குடியிருக்கத்தான் செய்யும். முடிந்தவரி
அந்த நெகடிவ் எண்ணங்களை களைந்துவீச
ஒவ்வொருவரும் அவரவர் வழியில்
முயன்று கொண்டிருப்பார்கள்.
பார்க்கலாம்...
நஜ்மா ஹெப்துல்லா (முன்னாள்
அமைச்சர்): ஆமிர், நமது நாடு பிரிவினைக்கு பிறகு
கூடிய அரசியல் நிர்ணய சபையில் உங்கள்
கொள்ளு தாத்தா (மவ்லானா
அபுல் கலாம் ஆசாத்) பேசும்போது ஒரு விஷயம்
சொன்னார். ’ஒரு நாட்டின்
முன்னேற்றம் அங்கே எத்தனை நிறுவனங்கள்
உருவாகி உள்ளன, எத்தனை கட்டிடங்கள்
கட்டப்பட்டுள்ளன, எத்தனை சாலைகள்
போடப்பட்டுள்ளன என்பதை கொண்டு
அளவிடப் படுவது இல்லை; அந்த நாட்டின்
மக்கள் எப்படிப்பட்ட மனநிலையில்
இருக்கிறார்கள் என்பதை பொறுத்த
விஷயம் அது’ என்று அவர் கூறினார். அதை
நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?
ஆமிர்: நிச்சயமாக. அதைத்தான் நானும்
சொல்லிக் கொண்டிருந்தேன்.
நான் மும்பையில் வாழ்கிறேன்.
ஒவொரு நாளும் எத்தனையோ டிராபிக்
சிக்னலில் என் கார் நிற்கிறது, கண்ணாடி
வழியாக நன் பார்ப்பது என்ன என்றால்,
எவருமே டிராபிக் சிக்னலை மதிப்பது இல்லை. ’அட
பாவிகளா, சிக்னல் நம்முடைய
நன்மைக்காகத்தானே, நம்முடைய
பாதுகாப்புக்குதானே வைத்திருக்கிறார்கள்.
அதை மதித்து நடப்பது நமக்குதானே நல்லது?’
என்று எனக்குள் தோன்றும். ஆனால்
என்னால் மற்றவர்களை என்ன செய்ய
முடியும்?
அப்போது நான் மற்ற நாடுகளை நினைத்து
பார்ப்பேன். ஒரு ஜெர்மனி, ஒரு
ஜப்பான்.. இதெல்லாம் இரண்டாம்
உலக போரில் சிக்கி சின்னாபின்னமான
நாடுகள். ஆனால் மிக குறுகிய காலத்தில்
அந்த நாடுகள் என்னமாய் விசுவரூபம்
எடுத்து எழுந்து நிற்கின்றன, பாருங்கள். எதை
எடுத்தாலும் எனக்கு என்னுடைய என் குடும்பம்
என் நலன் என்று பார்த்தால் அது
சாத்தியம் ஆகியிருக்குமா? நிச்சயம்
ஆகியிருக்காது.
நாம் நல்லா இருப்பதோடு, மற்றவர்களும்
இந்த நாடும் நல்லா இருக்க வேண்டும், நம்
சந்ததிகள் நல்லபடி வாழ வேண்டும் என்ற
சிந்தனை இருந்தால் மட்டுமே அது போன்ற
வளர்ச்சி சாத்தியம். அப்படி ஒரு எண்ணத்தை
நமது மக்களின் மனதில் விதைக்க வேண்டியதன்
அவசியத்தை நான் என்றோ உணர்ந்திருக்கிறேன்.
சுதிர் சவுத்ரி (ஜீநியூஸ் எடிட்டர்): தாத்ரியில்
ஒரு அப்பாவி முஸ்லிம் கொலை
செய்யப்பட்டது கொடுமை,
அநியாயம், ஒப்புக் கொள்கிறேன்.
அதற்காக படைப்பாளிகள் கோபமாகி
விருதுகளை திருப்பி தருகிறார்கள். நோ ப்ராப்ளம்.
ஆனால், கஷ்மீரில் ஒரு ராணுவ அதிகாரி
அதே போலாநியாயமாக தன் உயிரை பறி
கொடுத்தார். அதை படைப்பாளிகள்
கண்டு கொள்ளவே இல்லை. டீவி,
பத்திரிகை விவாதங்களிலும் அப்படியே. அவர்
ஒரு இந்து. ஏன் இந்த இரட்டை வேடம்?
ஆமிர்: எந்த ஊர் மாநிலம் எந்த மதம்
என்றெல்லாம் பார்த்து
பயங்கரவாதம் பற்றி எவரும் கருத்து
சொல்லக் கூடாது. அபத்தம்.
ஆனால் நிஜத்தில் நாம் எல்லோருமே இரட்டை
வேடம் போடுபவர்கள். நாம் எந்த ஒரு
விஷயத்தையும் அல்லது மனிதனையும் நமக்கு
கிடைத்த இன்புட்ஸ் அடிப்படையிலேயே மதிப்பீடு
செய்கிறோம். எனக்கு நல்லவனாக
தெரிந்த ஒருவர் உங்களுக்கு
கெட்டவனாக தெரிகிறார். வைசி
வெர்சா.
நானும் அதை நினைப்பதுண்டு. அட, இந்த
ரோபோக்கள் மாதிரி நாமும் இருந்தால்
இப்படியெல்லாம் ஒவ்வொரு
விஷயத்திலும் வித்தியாசமாக நடப்போமா?
இந்த விஷயத்துக்கு இப்படித்தான் ரியாக்ட்
செய்ய வேண்டும் என்று ரோபோ மாதிரியே
ப்ரொக்ராம் செய்திருந்தால்
மனிதர்கள் எத்தனை முரண்பாடுகளை
தவிர்த்திருக்க முடியும்? ஊடகனோ
அரசியல்வாதியோ அதிகாரியோ அப்படி
இரட்டைவேடம் போட கூடாது, அப்படி நினைக்கவே
கூடாதுதான். ஆனால், நடக்கிறது.
பெரிய ஆறுதல் என்ன என்றால்,
அநேகமாக எல்லோருமே வன்முறைக்கு எதிராக
ஓரணியில் வந்து விட்டார்கள் என்பதுதான்.
ராஜிவ்: மனசுக்கு சரி என்று படும் விஷயத்தை
செய்வேன் என்கிறீர்கள். எது சரி, எது தப்பு
என்று எப்படி கண்டி பிடிப்பது?
ஆமிர்: மனம், மனசாட்சி, இதயம்.. எப்படி
வேண்டுமானாலும் சொல்லுங்கள்.
அது எதை சரி என்று சொல்கிறதோ அதை
செய்யுங்கள். வெளியே யார்
சொல்வதை விடவும் உள்ளே இருக்கிற
அவை சொல்வது சரியாகவே இருக்கும்.
எது சரி எது தப்புஎன்று சின்ன வயதில் இருந்தே
நீங்கள் படித்தும் கேட்டும் வளர்ந்திருப்பீர்கள்.
அதனால் உங்கள் உள் மனம் ஒரு நாளும்
பொய் சொல்லாது.
ராஜிவ்: ஒருவேளை அப்படி நீங்கள் நம்பி
செய்யும் விஷயம் கடைசியில் ஊத்திக்
கொண்டால், தப்பு என தெரிய
வந்தால் என்ன செய்வது?
ஆமிர்: உங்கள் முடிவால் பாதிக்கப்பட்டவர
்களிடம் முதலில் மன்னிப்பு கேளுங்கள். தவறன
முடிவு எடுத்து விட்டோம் என்பதை மனதாற ஏற்றுக்
கொள்ளுங்கள். அதன் விளைவுகளை சரி
செய்யமுயற்சி செய்யுங்கள்.
ராஜிவ்: நீங்கள் எப்போதாவது அப்படி
செய்திருக்கிறீர்களா?
ஆமிர்: பலமுறை செய்திருக்கிறேன்.
இர்ஃபான் (எகனாமிக் டைம்ஸ்): நான் ஒரு
செனலில் வேலை செய்தபோது
முக்கியமான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
செய்தியை சொல்லிக்
கொண்டிருந்தேன். திடீரென்று
ஆங்கர் குறுக்கிட்டு, ‘ஸ்டே வித் அஸ். ஒரு
வீட்டுக்குள் பாம்பு நுழைந்து விட்டது. அதை இப்போது
பார்ப்போம்’ என்று சீன் மாற்றினார். சுப்ரீம்
கோர்ட் செய்தியைவிட பாம்பு வந்ததை
எக்கச்சக்கமான மக்கள் பார்த்ததால்
சேனலுக்கு டிஆர்பி ஏறியது வேறு விஷயம்.
ஆனால் இப்படியான துவள வைக்கும்
சந்தர்ப்பங்களை எப்படி சமாளிப்பது?
ஆமிர்: உங்கள் செய்தி ஊடகத்தில்
நடப்பது பற்றி நான் கருத்து
சொல்வது கஷ்டம். என் விஷயம்
ஒன்று சொல்ல முடியும். தாரே
சமீன்பர் படம் உங்களுக்கு தெரியும்.
கற்றல் குறைபாடு, டிஸ்லெக்சியா உள்ள
ஒரு பள்ளி மாணவன் கதை. எனக்கு அந்தகதை
ரொம்ப பிடித்து விட்டது. ஆனால்
யாருமே ஏற்கவில்லை. இந்த மாதிரி
கதையெல்லாம் எடுபடாது; யாரும்
பார்க்கமாட்டார்கள் என்று என்னை
நோகடித்தார்கள். ஆனால் அது ஒரு நல்ல
சப்ஜெக்ட், எல்லாருக்கும் போய் சேர
வேண்டிய விஷயம் என்று என் மனசு
சொல்லிக் கொண்டே
இருந்தது. கடைசியில் பார்த்தால் படம் சூப்பர்
ஹிட். அது மட்டுமில்லை. லகான், ரங் தே பசந்தி,
சத்ய மேவ் ஜெயதே எல்லாமே கடும்
எதிர்ப்புக்கு மத்தியில் உருவான
படைப்புகள்தான். சந்தேகம் வராமல்
இருக்காது. இத்தனை பேர்
சொல்கிறார்களே என்று ஒரு தயக்கம்
வரும். ஆனால், நமது முயற்சியை தடுத்து
நிறுத்துமளவுக்கு அதற்குபலம் இருக்காது.
மனம்தான் முதலிலேயே ஏற்றுக்
கொண்டதே. மேலே இருந்து ஒருத்தன்
என்னை பார்த்துக் கொள்கிறான்
என்றநம்பிக்கை இந்த சந்தர்பங்களால்
ஏற்பட்டதுதான்.
தவ்லீன் சிங் (பத்தி எழுத்தாளர்): ஆமிர்
நீங்கள் என்னதான்
சொன்னாலும் பயங்கரவாதிகள்
கையில் குரான் வைத்திருக்கிறார்கள்.
அப்பாவிகளை சுட்டு கொன்றுவிட்டு
அல்லாவின் பெயரை முழக்கமிடுகிறார
்கள். பிறகு எப்படி இஸ்லாமுக்கும்
தீவிரவாதத்துக்கும் சம்மந்தமில்லை என்று கூற
முடியும்?
ஆமிர்: ஒருத்தன் கையில் குரான் இருப்பதாலோ
அவன் அல்லாவின் பெயரை
உச்சரிப்பதாலோ முஸ்லிம் ஆகிவிட
மாட்டான். இஸ்லாம் ஒருபோதும் வன்முறையை
போதிக்கவில்லை. அப்படி போதிப்பதாக
சொல்பவன் முஸ்லிம் அல்ல.
இஸ்லாம் பெயரால் கொலை
செய்பவன் நிச்சயமாக முஸ்லிமே அல்ல
என்று நான் திரும்பவும் சொல்கிறேன்.
மற்ற மதங்களுக்கும் இது பொருந்தும்.
சம்மந்தப்பட்டவன் சொல்லிக்
கொள்ளலாம், தான் இந்த மதத்தை
சார்ந்தவன், இந்த மதத்துக்காக
கொல்கிறேன் என்று. மற்றவர்கள் அதை
ஏற்கக்கூடாது, அங்கீகரிக்க கூடாது
என்பதுதான் என் வேண்டுகோள். எந்த
மதமாக இருந்தாலும் சரி, தீவிரமான
சிந்தனைகளை, மற்றவர்களுக்கு எதிரான
எண்ணங்களை என்னால் ஒரு போதும்
ஜீரணிக்கவே முடியாது.
- கதிர் / நம்ம அடையாளம் / 25.11.2015

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR