“உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். வளமான மேன்மையான நகரமும் உண்டு; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்” (சூரா ஸபா:15-வது வசனம்)
சிறந்த மனிதர், சிறந்த சமூகம், சிறந்த தேசம், கருணையான இறைவன் என்ற இஸ்லாத்தின் சித்தாந்தத்தை விவரிக்கும் திருக்குர்ஆன் வசனத்தை தான் மேலே கண்டோம்.
சிறந்த மனிதர்களை உருவாக்குவதுதான் இஸ்லாமிய மார்க்க பாடங்களின் சாராம்சம். மனிதனை சுத்திகரித்து வாழ்க்கையை பரிசுத்தப்படுத்தும் விதமாகவே இஸ்லாத்தில் நம்பிக்கையும், கோட்பாடுகளும், வணக்க வழிபாடுகளும் அமைந்துள்ளன.
படைத்து பரிபாலனம் செய்து பாதுகாத்து வரும் இறைவனை நேசித்தும், அவனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தியும் அவனது கட்டளைகளுக்கு கீழ்படிந்தும் அவனை அஞ்சியும் வாழவேண்டும் என்பதே இஸ்லாம் மனிதர்களுக்கு போதிக்கிறது.
அன்பு, பயம், பக்தி ஆகிய அடிப்படைகளில் ஊன்றிய நம்பிக்கையின் அடித்தளத்தில் வாழ்க்கையை கட்டியெழுப்புவதே இஸ்லாத்தின் திட்டமாகும். அன்பு கலந்த பக்தி, பக்தி கலந்த பயம் – இஸ்லாத்தின் முழக்கமான தக்வாவின் பொருள் இது.
இஸ்லாத்தின் இறுதி தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) தக்வாவிற்கு இவ்வாறு விளக்கமளிக்கிறார்: “அல்லாஹ்விற்கு கட்டுப்படுங்கள். கட்டளைகளை மீறாதீர்கள். அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். மறந்துவிடாதீர்கள். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள். நன்றி மறவாதீர்கள்” (இப்னு கஸீர்)
இறை நினைவும், நன்றியுணர்வும், கட்டுப்படுதலும் ஒன்றிணைந்த ‘தக்வா’ என்ற சிறப்பு குணத்தை பெறுவதற்காக கடமையாக்கப்பட்ட நோன்பு எனும் வணக்க வழிபாட்டை கடைப்பிடிக்கும் ரமலான் மாதத்தை முஸ்லிம் உலகம் அடைந்துள்ளது. வாழ்க்கை பயணத்தில் தக்வாவை பயணப்பொருளாக எடுத்துச்செல்ல இறைவன் கட்டளையிடுகிறான். அதர்மம் மற்றும் பாவத்தின் கறை படியாத பரிசுத்தமான வாழ்க்கையை சாத்தியமாக்குவது எச்சரிக்கை உணர்வுடன் கூடிய இறை நம்பிக்கையாகும்.
ஒரு முறை அலீ (ரலி) அவர்களிடம் தக்வா என்றால் என்ன என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள் இரத்தினச் சுருக்கமாக பதிலளித்தார்கள். அல்லாஹ்வை அஞ்சுவது, திருக்குர்ஆன் வழியில் நடப்பது, இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவது, மரணத்தை எதிர்நோக்கி தயாராக இருப்பது என பதிலளித்தார்கள்.
சுவர்க்க பாதையை நோக்கி மனிதனை வழி நடத்தும் நம்பிக்கையின் முக்கிய பகுதியான தக்வாவை குறித்து நபித்தோழர்கள் இருவர் நடத்திய உரையாடல் மூலம் அறியலாம்.
உமர் பின் கத்தாப்(ரலி) ஒரு நாள் உபை இப்னு கஃப்(ரலி) அவர்களிடம் வினவினார்கள்: ‘தக்வா என்றால் என்ன?.’
உபை இப்னு கஃப்(ரலி): ‘உமரே கற்களும், முட்களும் நிறைந்த பாதையில் வெற்றுக் கால்களுடன் நடந்து வரும் பொழுது எவ்வாறு கவனமாக காலடிகளை எடுத்து வைத்து நடக்கமுடியும்?
உமர்(ரலி): ஒவ்வொரு அடியையும் ஜாக்கிரதையாக, ஒவ்வொரு காலடியும் மிக கவனமாக… மிக கவனமாக… காலடிகளை எடுத்து வைக்கும்பொழுது கால்களில் முட்கள் செருகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உபை இப்னு கஃப்(ரலி): இந்த ஜாக்கிரதையும் கவனமும் தான் தக்வா
ரமலான் மாதத்தில் நோன்பை பேணுவதன் மூலம் அடையும் தக்வாவின் பொருளை மேற்கண்ட விளக்கங்களில் இருந்து புரிந்துகொள்ளலாம்.
ரமலான் மாதத்தில் நோன்பை பேணுவதன் மூலம் அடையும் தக்வாவின் பொருளை மேற்கண்ட விளக்கங்களில் இருந்து புரிந்துகொள்ளலாம்.
ஒரு மாதம் நீண்ட நோன்பு காலம் நிரந்தரமான, சோர்வில்லாத மனக் கட்டுப்பாட்டிற்கான கருவியாகும். பகல் முழுவதும் உணவு, பானங்களை தவிர்த்து, உடல் இச்சைகளை நிராகரித்து நோன்பை கடைப்பிடிக்கும் நம்பிக்கையாளர், இரவுகளில் தொழுகையிலும், பிரார்த்தனைகளிலும், இறைவனை நினைவுக் கூர்வதிலும் மூழ்கிவிடுகிறார். இரவுகளையும், பகல் பொழுதுகளையும் நன்மைகளால் நிரப்பி ஆன்மீக் மேன்மையில் தனது அடியான் ஜொலிக்கும் பொழுது இறைவன் மகிழ்ச்சி அடைகிறான்.
நோன்பின் மூலம் அடையப்பெறும் மகத்தான விழுமியங்கள் குறித்து ஷஹீத் செய்யத் குதுப் அவர்கள் தனது ஃபீ ழிலாலில் குர்ஆனில் இவ்வாறு விளக்குகிறார்: “ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.” (அல்குர்ஆன் 2:183).
நோன்பின் உன்னதமான லட்சியம் இங்கே விளக்கப்படுகிறது. அதுதான் இறையச்சம். தக்வா-இறையச்சம்தான் உள்ளங்களை விழிப்படையச் செய்து உயிரூட்டுகிறது. இறைவனின் திருப்தியை அடைவதையே குறிக்கோளாக கொண்டு எதையும் துறக்கும் எண்ணத்துடனும், கீழ்படிதலுடனும் கடைப்பிடிக்கப்படும் நோன்பின் பரிசுத்தம் என்பது உள்ளத்தில் ஊசலாடும் எண்ணங்கள் கூட களங்கமடையக் கூடாது என்பதில் அழுத்தமாக இருக்கிறது. இங்குதான் தக்வா உள்ளத்தின் காவலாளியாக மாறுகிறது.
இறைவனின் சன்னிதியில் பக்தியின் மகிமையை உணர்ந்தவர்கள்தாம் திருக்குர்ஆன் கூறும் சிறந்த சமுதாயம். அந்த பரிசுத்த ஆத்மாக்கள் சென்றடைவது இந்த மகத்தான லட்சிய அடையாளத்திலாகும். இந்த நோன்பு அவர்களுக்கு லட்சியத்தை அடைவதற்கான வழியாகும். அவர்களின் கண் முன்னால் மின்னும் ஆன்மீக மேன்மையின் ஒளிக் கோபுரத்தில் நோன்பு எனும் படிக்கட்டுகளின் மூலமாக அவர்கள் ஏறிச் செல்வார்கள்’ (ஃபீ ழிலாலில் குர்ஆன் 2:168)
ரமலானை பொறுமையின் மாதமாக நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்து கூறினார்கள். ஆசைகளையும், பேராசைகளையும் கட்டுப்படுத்தும் மன உறுதியின் பிறப்பிடமே பொறுமையும், சகிப்புத் தன்மையுமாகும்.
ரமலானில் நோன்பு மூலம் கிடைக்கும் பயிற்சியின் காரணமாக நம்பிக்கையாளர் இறைக்கட்டளைகளின் வரம்புகளை மீறாமல் ஒழுக்கத்துடன் வாழக் கற்றுக்கொள்கிறார். “இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக் காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.” (அல்குர்ஆன் 2:187).
வணக்கங்களின் முக்கிய அம்சங்களை உட்கொள்ளும் முக்கிய அனுஷ்டானம்தான் நோன்பு. தூக்கம் அண்டாத எப்பொழுதும் விழித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ், தன்னை கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான் என்ற உணர்வை நோன்பு ஏற்படுத்துகிறது. இதில் பொறுமை உண்டு, தியாகம் உண்டு, சமர்ப்பணம் உண்டு. இதர கடமைகளுக்கு இல்லாத பிரதிபலனும் உண்டு.
அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அது (நோன்பு) எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். (காரணம்) அவனுடைய இச்சையையும், உணவையும் எனக்காக விட்டுவிடுகின்றான்.” (நூல்:முஸ்லிம்).
உணவையும், பானத்தையும், இச்சைகளையும் விலக்குவது மட்டும் நோன்பு அல்ல. நமது சொல், செயல்களிலும், உள்ளத்திலும் நோன்பின் ஆன்மா வெளிப்பட வேண்டும். உடல் மற்றும் உள்ளத்தின் பரிசுத்தம் தான் நோன்பின் லட்சியம்.
“யார் பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ, அவர் பசித்திருப்பதாலும், தாகித்திருப்பதாலும் அல்லாஹ்வுக்கு எத்தகையத் தேவையுமில்லை” (நூல்: புகாரி)
ரமலான் மாதத்தின் சிறப்பையும், அம்மாதத்தில் நோன்பு நோற்பதன் முக்கியத்துவம் குறித்தும் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்: “ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).” (அல்குர்ஆன் 2:185).
ரமலானில் நோன்பு நோற்பது அல்லாஹ் அருளிய பரிசுத்த திருக்குர்ஆன் என்ற மகத்தான அருட்கொடைக்கு நன்றி தெரிவிப்பதாகும். நம்மை படைத்து பரிபாலித்து பாதுகாத்து நேர்வழியையும் காட்டிய இறைவனுக்கு நாம் நன்றி தெரிவிக்கும் சரியான முறை அவன் நம்மைப் படைத்த நோக்கத்தை நிறைவேற்ற நாம் முழு மனதுடன் தயாராகவேண்டும் என்பதாகும்.
திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டதன் நோக்கம் இறைவனின் திருப்தியை அடைவதற்கான வழிமுறையை கண்டறிந்து அதன் அடிப்படையில் வாழ்வதும், உலகை அவ்வழியின் மூலமாக வழி நடத்துவதுமாகும். திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதத்தில் நோன்பு நோற்பது வெறும் ஒரு ஆன்மீக கடமையோ, வழிபாடோ மட்டுமல்ல.
திருக்குர்ஆன் எனும் மகத்தான அருட்கொடையை நமக்கு இறக்கி அருள்புரிந்த அல்லாஹ்வுக்கு செலுத்தும் நன்றியாகும்.
மனித சமூக வாழ்வின் துவக்கம் முதல் இறுதி வரை மாபெரும் மாற்றத்தை எக்காலத்திலும் உருவாக்கிக்கொண்டிருக்கும் புரட்சி வேதம்தான் திருக்குர்ஆன். மனித சமூகத்திற்கு ஓர் பூரணமான விடுதலையை திருக்குர்ஆன் லட்சியமாக கொண்டுள்ளது. சாத்தானிய சக்திகளிடமிருந்து விடுதலை, ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை, மனோ இச்சையில் இருந்து விடுதலை, உலகியல் வாழ்வின் அதி மோகத்தில் இருந்து விடுதலை ஆன்மீகத்தின் அபத்தமான பயணத்தில் இருந்து விடுதலை மரணத்திற்கு பிந்தைய வாழ்வில் நரகில் இருந்து விடுதலை – இவ்வாறு திருக்குர்ஆன் சமர்ப்பிக்கும் விடுதலை கொள்கை உலகியல் மற்றும் மரணத்திற்கு பிந்தைய வாழ்வின் வெற்றிக்கு அடித்தளமாகும்.
திருக்குர்ஆன் அறிவுப்பூர்வமாக புரட்சியை சாதிக்கிறது. பரிசுத்த திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டதுதான் ரமலானின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. திருக்குர்ஆன் கூறும் புரட்சிகர கொள்கையை செயல்ரீதியாக மாற்றுவதற்கான திறன் படைத்த குழுவினர் நோன்பு என்ற வழிபாட்டின் மூலம் வார்த்தெடுக்கப்படுகின்றார்கள்.
திருக்குர்ஆன் அருளப்பட்டதன் வருடாந்திர நிகழ்வை நாம் இவ்வாறு கொண்டாட பணிக்கப்பட்டுள்ளோம். இவ்வாறு வார்த்தெடுக்கப்பட்ட குழுவினரரால் சரித்திரத்தின் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன.
ஆபத்தில் சிக்கிய ஒருவரை காணும்பொழுது உள்ளத்தில் தோன்றும் ஒரு பரிதவிப்புதான் பச்சாதாபம். எறும்புகளிடம் கூட கருணை காண்பித்த மார்க்கம் இஸ்லாம். ஹிஜ்ரி ஐந்தில் பட்டினியால் வாடிய எதிரிகளுக்கு கூட உணவை அனுப்பிக் கொடுத்தார்கள் நபி(ஸல்). ரமலானை ‘பச்சாதாபத்தின் மாதம்’ என நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்தார்கள்.
துயருறும் மக்களின் வேதனையை உணருபவன் தான் நோன்பாளி. பசியின் ருசியையும், தானத்தின் ஆனந்தத்தையும் காருண்யத்தின் பிரார்த்தனைகளையும் நோன்பாளி சொந்தமாக்குகிறான். ரமலானில் அனைவருடனும் நல்லிணக்கத்தோடு நடந்துகொள்ள வேண்டும். வீசும் காற்றை விட வேகமாக நபி(ஸல்) அவர்கள் தானம் செய்துள்ளார்கள்.
துஆ(பிரார்த்தனை) மூலம் அமைதியும், அனுபவமும் நுகராதவருக்கு சுகபாக்கியங்கள் என்ன என்பது தெரியாது. தனக்கு புகலிடமாக இறைவனை ஆக்கியவன் தோட்டத்தில் நடை பயிலுவதைப் போல ஆறுதலடைகிறான்.
“பிரார்த்தனை விசுவாசியின் ஆயுதமாகும். தீனின் தூண் ஆகும். வானங்கள், பூமிக்கு இடையே ஒளியாகும்” (ஹாகிம்)பிரார்த்தனை என்ற பரிசுத்த கயிறினால் நம்பிக்கையாளர்கள் தனது இறைவனுடன் நெருக்கமாவார்கள்.
நோன்பின் வசனங்களை பற்றி குறிப்பிடும் அல்லாஹ் அதற்கு அடுத்ததாக(2:186) பிரார்த்தனையைக் குறித்து கூறுகிறான்.
தொழுகை இறைவனுடன் நடத்தும் உரையாடல் என்பது நபிமொழி. பிரார்த்தனை வேளைகள் இறைவனுடன் உரையாடும் விலைமதிப்பற்ற அனுபவங்களை நோன்பாளிக்கு அளிக்கிறது. குறிப்பாக ரமலானின் இரவுகளில். நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் லயித்துப் போவார்கள். எந்த அளவுக்கு என்றால் கால் வீங்குவது கூட தெரியாமல் இரவுகளில் நின்று வணங்குவார்கள். நபித் தோழர்களோ தொழுகையில் லயித்துவிட்டால் தன்னை சுற்றி நடப்பதை கூட மறந்துவிடுவார்கள். நோன்பாளி ரமலான் இரவுகளில் தொழுகையை நீட்டுகிறார். இரவின் கடைசிப் பகுதிகளில் அவர் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக்கோரி மண்டாடுவார். ஆனால், தொழுகையின் வெளிப்புற அசைவுகளிலும், எண்ணிக்கையிலும் மட்டும் ஒருவர் கவனம் செலுத்தினால் அவரால் தொழுகையின் அனுபவத்தை பெற இயலாது.
ருக்வும், ஸுஜூதும் முறையாக நிறைவேற்றாதவனின் தொழுகை வானை நோக்கி உயராது. பழையத் துணிக்கட்டு போல அவனது முகத்தில் வீசியெறியப்படும். உள்ளச்சம் இல்லாத தொழுகையை ஜடம் என்று சிலர் வர்ணிக்கின்றனர்.
ரமலானின் கடைசி 10 தினங்களின் ஒற்றை இரவுகளில் ஆயிரம் மாதங்களை விட சிறந்த புனித லைலத்துல் கத்ர் இரவை தேடுமாறு நபி(ஸல்) அவர்கள் நம்மை பணித்துள்ளார்கள்.
‘அல்லாஹ்வின் திருத்தூதர், நபி(ஸல்) அவர்கள் (ரமளானின்) பிந்திய பத்து இரவுகள் வந்ததும் வணக்கத்தில் ஈடுபட முழுமையாக ஆயத்தமாகி விடுவார்கள். இரவை வணக்கத்தில் கழிப்பார்கள். தனது குடும்பத்தையும் விழிக்கச் செய்வார்கள்’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம்
‘நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசி பத்து நாட்களில் அவர்கள் மரணிக்கும்வரை இஃதிகாஃப் (பள்ளியில் தங்கி) இருந்தார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)
ஒரு நம்பிக்கையாளனின் இரத்தில் கலந்ததுதான் போராட்டம். தீமை உலகை ஆளுகையில் போராட்ட உணர்வை வெளிப்படுத்தாதவன் நம்பிக்கையாளன் அல்லன். ஷைத்தானோடு போர் பிரகடனம் செய்த நோன்பாளியால் அதர்மத்தின் முன்னால் மெளனியாக நிற்க முடியாது. ஒன்றும் செய்யவியலாதி நிர்கதியான சூழலில் கூட அவனுடைய உள்ளத்தில் அதர்மத்திற்கு எதிரான போராட்ட உணர்வு ஜொலித்துக்கொண்டே இருக்கும்.
ஹஸனுல் பன்னாஹ்(ரஹ்) அவர்களின் வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் போராட்ட வீதியிலே இரத்த சாட்சியம் ஒரு விசுவாசியின் மதுர மனோகரமான மோகம் ஆகும். இந்த போராட்ட உணர்வும், இரத்தசாட்சிய எண்ணமும் நோன்பாளியிடம் நூறு சதவீதம் உற்பத்தியாகிறது.
ரமலான் வரும்பொழுதெல்லாம் பத்ரையும், மக்கா வெற்றியையும் சுமந்துகொண்டே வருகிறது. இம்மாதத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உலகின் போக்கை மாற்றிய ஏராளமான சம்பவங்கள் நடந்தேறின. சிலுவைப் போர் வீரர்களுக்கு எதிரான ஹத்தீன் போர், தார்தாரியர்களுக்கு எதிரான ஐன் ஜாலூத் போர், கான்ஸ்டாண்டி நோபிள் வெற்றி, இஸ்ரேலுக்கு எதிரான போர் என ஏராளமான சம்பவங்களுக்கு ரமலான் சாட்சியம் வகிக்கிறது.
ஆகவே நோன்பு என்பது ஒரு ஆன்மீக சித்திரவதை அல்ல. வாழ்க்கையின் மகத்தான லட்சியங்களை அடைவதற்கும், தம் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்றவும் இறை நம்பிக்கையாளர்களை வார்த்தெடுப்பதும், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பக்குவப்படுத்துவதுமாகும்.
ரமலான் மாதத்தில் நிறைவேற்ற நமக்கு இடப்பட்டுள்ள கட்டளைகளை உதாசீனப்படுத்திவிடக் கூடாது. ஓய்வில்லாத வணக்கங்கள்தாம் இம்மாதத்தின் அடையாள முத்திரை. ரமலானை யார் இறையச்சத்திற்கான பயிற்சி பாசறையாக பயன்படுத்தி அந்த லட்சியத்தை அடைகின்றார்களோ அவர்கள் ரய்யான் எனும் சுவன வாசல் வழியாக நுழைவார்கள்.
ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள்: புகாரீ
சுவனம் செல்வதற்கான வழிகள் ரமலானில் எளிதாக இருக்கும் வேளையில் அதனை கண்டும் காணாமல் இருப்பவர் அறிவாளியா? வாருங்கள் புனித ரமலானில் சுவனத்தில் நுழைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம்!
நன்றி:thoothu online
0 comments:
Post a Comment