ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Tuesday, 2 July 2013

சேவை பெறும் உரிமைச் சட்ட முன்வரைவு

அரசுத் துறைகளில் குறித்தகாலத்தில் பொருள் மற்றும் சேவை பெறும் உரிமை மற்றும் குறைதீர் சட்ட முன்வடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைச் சுருக்கமாக "சேவை பெறும் உரிமைச் சட்ட முன்வரைவு' எனலாம். இந்தச் சட்ட முன்வரைவின் உள்ளார்ந்த நோக்கம் ஒருவகையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு இணையானது.
மத்திய, மாநில அரசுத் துறைகள், அரசு நிதியுதவி பெறும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் ஆகியன அனைத்தும் இந்தச் சட்ட வரம்புக்குள் வருகின்றன. சேவைக் குறைபாடு உண்மை என்று கண்டறியப்பட்டால், ரூ.250 முதல் ரூ.50,000 வரை அபராதம், துறை நடவடிக்கை எல்லாவற்றையும் இந்தச் சட்டம் உறுதி செய்கிறது.
இப்போதும்கூட, பல அரசுத் துறைகளில் ஒவ்வொரு சேவைக்கும் ஒரு கால அளவு வைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு மாதத்தில் கடவுச்சிட்டை (பாஸ்போர்ட்) அளிக்க வேண்டும் என்பதை பாஸ்போர்ட் அலுவலகம் லட்சியமாகக் கொண்டுள்ளது. ஆனால், இது சட்டம் அல்ல. இதில் குறை ஏற்பட்டால் நாம் கேள்வி கேட்க முடியாது. இந்த மசோதா சட்டமானால், பொதுமக்கள் கேள்வி கேட்க முடியும்.
வேறுபல மத்திய, மாநில அரசுத்துறை நிறுவனங்களும்கூட தங்களது ஒவ்வொரு சேவைக்கும் ஒரு காலஅளவை நிர்ணயித்துள்ளன. ஆனாலும்கூட இதை நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கக் காரணம், அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் ஊழியர்கள் இல்லை என்பதும், அத்தகைய ஊழியர்களைத் தண்டிக்க முடியாத அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகள்தான்.
வருங்கால வைப்புநிதி அலுவலகமும், வருமான வரி அலுவலகமும் தங்களது இணைய முகவரியில் இத்தகைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன. விண்ணப்பித்தவர்கள் 30 நாள்களுக்குள் தங்களுக்குப் பதில் கிடைக்காவிட்டால், அந்த இணைய முகவரியில் குறிப்பிட்டுள்ள அதிகாரிக்கு இணையத்தின் மூலமே தெரிவிக்கலாம். அவர்களும், "புகார் கவனத்துக்கு வந்தது, பார்க்கிறோம்' என்று பதில் அளித்து உறுதிசெய்கிறார்கள்.
அடுத்த சில நாள்களில், அத்துறையிலிருந்து வரும் பதில், நம் மீது குறை சொல்வதாகத்தான் இருக்கிறதே தவிர, ஊழியர்களின் தவறை ஏற்றுக்கொள்வதாக இருப்பதில்லை. ஒரு இன்றியமையாச் சான்று இணைக்கப்படாவிட்டால், அதை விண்ணப்பித்த சில நாள்களிலேயே தெரிவித்திருக்கலாமே? புகார் கொடுத்த பிறகு தெரிவிக்கும்போது, அந்தச் சான்றை அந்த ஊழியரே கிழித்துப்போட்டுவிட்டு பதில் தருகிறார் என்று நாம் சொன்னால் அதை யார் நம்புவார்கள்?
ஒவ்வொரு விண்ணப்பம் பெறும்போதும், இன்னின்ன சான்றுகளுடன், முழுமையாக அளிக்கப்பட்டது என்று ஒவ்வொரு துறையும் ரசீது வழங்க வேண்டும் என்பதை இந்தச் சட்ட முன்வரைவு கட்டாயப்படுத்தவில்லை எனும்போதே, எந்த அளவுக்கு இந்தச் சட்டம் பயனளிக்கப் போகிறது என்பது தெரிகிறது.
மத்திய அரசு கொண்டு வரும் பல சட்டத்திருத்தங்களின் நோக்கம் நல்லவையாக இருந்தாலும், சட்டத்தில் நிறைய நெளிவுசுளிவுகள் வைத்து, குற்றம் செய்யும் அரசு ஊழியர்களைப் பாதுகாப்பதாகவே அமைந்துவிடுவதால், அந்தச் சட்டங்களுக்கு எல்லாம் உள்நோக்கம் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
சேவை பெறும் உரிமைச் சட்ட முன்வடிவு இரண்டு விஷயங்களைக் கட்டாயமாக்குகிறது. அதாவது, ஒவ்வொரு அரசு ஊழியர் அல்லது துறை செய்ய வேண்டிய கடமை என்ன, அந்தக் கடமையைச் செய்துமுடிக்கக் குறைந்தபட்சம் எத்தனை அலுவலக வேலைநாள்கள் தேவையாக இருக்கும் என்பதை மக்கள் சாசனமாக அறிவிக்க வேண்டும்; அத்துடன், ஒவ்வொரு மாநில அரசும், மத்திய அரசும் தனித்தனியாக பொதுமக்கள் குறைதீர் ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்பவைதான் அவை.
ஒரு அலுவலர் 30 வேலைநாள்களில் பணியை முடிக்கவில்லை என்று புகார் சொன்னாலும், அவர் அந்த வேலைநாள்களில் மாற்றுப்பணியில் இருந்தார், அவரது பொறுப்பில் யாரும் நியமிக்கப்படவில்லை என்று துறைத் தலைவர் கூறினால் அதை இந்தச் சேவை உரிமை மற்றும் குறைதீர் ஆணையம் ஏற்பதைத் தவிர வேறுவழியில்லை. வேறு ஒருவரைப் பணியில் அமர்த்தி விரைந்து முடித்துக் கொடுக்க முடியாதா என்று ஆணையம் கண்டனம் செய்யலாம், அவ்வளவே!
ஒவ்வொரு சேவையை எத்தனை நாளைக்குள் அளிக்க வேண்டும் என்பதை மக்கள் சாசனமாக அளிப்பது மட்டுமே போதாது. ஒவ்வொரு அரசு ஊழியரும் அன்றைய தினம் என்ன பணி செய்தார், எத்தனை கோப்புகளைப் பார்த்தார், எத்தனை விண்ணப்பங்களைப் பரிசீலித்தார் என்பதைப் பணிநிரல் பதிவேட்டில் பதிவது கட்டாயம் என்றாக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் நாற்காலிகள் காலியாகவும், கேன்டீன் மரத்தடியில் எப்போதும் கூட்டமும் இருக்கும் நிலை அப்போதுதான் மாறும்.
தகவல் பெறும் உரிமைச் சட்டம், கல்வி பெறும் உரிமைச் சட்டம், தொழிற்போட்டி நெறிப்படுத்தும் ஆணையம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், நிலம் கையகப்படுத்தும் சட்டம் என்பன போன்ற பல நல்ல சட்டங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒன்பதாண்டு ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது உண்மை. ஆனால், இந்தச் சட்டங்கள் அனைத்தும் முனைமழுங்கிய கத்திகளாக வலம் வருகின்ற அவல நிலை காணப்படுவதும் உண்மை. சற்று ஏதேனும் உயிர்ப்பு இருக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தையும்கூட நீர்த்துப் போக வைக்க அரசு வழிமுறைகளைத் தேடிக் கொண்டிருக்கிறது.
அடுத்த பொதுத் தேர்தலில் வாக்காளர்களைச் சந்திக்கும்போது நாங்கள் இன்னின்ன சட்டங்களைக் கொண்டு வந்து இந்திய ஜனநாயகத்திற்கு வலு சேர்த்திருக்கிறோம் என்று சொல்லி மக்களை ஏமாற்றத்தான் இந்தச் சட்டங்கள் உதவுகின்றனவே அன்றி, குறிக்கோளை நிறைவேற்றுகின்றனவா என்றால் இல்லை. ஆனால்தான் என்ன? அடுத்து ஒரு நேர்மையான அரசு பதவிக்கு வருமேயானால், சட்டத்தின் ஓட்டைகளை அடைத்து, முறையாகச் செயல்பட வழிகோலக் கூடாதா? அந்த வகையில் இந்தச் சட்டத்தை வரவேற்கலாம்!

-- 


ALAVUDEEN

1 comments:

swaminathan said...

what you are telling is correct.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR