தேர்தல் திருவிழா நிறைவடைந்த வேளையில் என்னுடைய இந்த தலைப்பு மிகவும்
வியப்பாக இருக்கும்.
இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் யாருக்கும் வாக்களிக்காதவர்களுக்காக
நோட்டா என்ற ஒன்றை அறிமுகபடுத்தியது .இந்த பட்டனை, எந்த வேட்பாளரையும்
விரும்பாத வாக்காளர்கள் வாக்கு சாவடி வரை வந்து இந்த நோட்டா என்ற பட்டனை
அழுத்த வேண்டும். இது ஒவ்வொரு தொகுதியிலும் சில ஆயிரங்கள் விழும் ஆனால்
1.50 கோடி எப்படி வரும் என்று ஒரு கேள்வி வரும். அதற்கு என்னுடைய
விளக்கமும் காரணமும்.
தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை வாக்கு சாவடிக்கு வந்து நோட்டா பட்டனை
அழுத்தும் போது அந்த ஓட்டு நோட்டா என்ற அங்கீகாரம் அடைகிறது. ஆனால்,
என்னுடைய கணக்கு வாக்கு சாவடிக்கே வராமல் விடுமுறையாக இருந்தும் வீட்டில்
பொழுதை கழிக்கும் ஒவொவொரு வாக்காளரும் நோட்டா தான். அந்த அடிப்படையில்
தமிழ் நாட்டில் 5.50 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள் ஆனால் ஓட்டு
போட்டவர்கள் 75% மட்டுமே. மீதம் 1.37 கோடி பேர் ஓட்டு போடவில்லை . அதோடு
அங்கீகாரம் பெற்ற நோட்டா 40 தொகுதிக்கும் குறைந்தது 40,000 நோட்டா
கண்டிப்பாக இருக்கும் ஆக மொத்தம் 1.50 கோடிக்கு மேல் கணக்கு வருகிறது
.இதில் நடக்க முடியாத அளவுக்கு நோயாளிகள், வெளிநாட்டில் இருப்பவர்கள்,
அவசரமாக வெளி ஊர் சென்றவர்களை கழித்தால் என்னுடைய நோட்டா கணக்கு 1.50
கோடியை மிஞ்சி விடும். இப்போது நோட்டா என்ற நிலைக்கு வாக்காளர்கள்
தள்ளப்பட்ட காரணங்களை ஆராய்வோம்.
நாம் தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் நாட்டில் வாக்காளர்களாக இருக்கலாம்
ஆனால், தொலைக்காட்சி முன்பு அமர்ந்தால் காஸ்மீரில் பேசும் ஒரு தேசிய
தலைவரின் உரையை கேட்கமுடியும். குஜராத்தில் ஒரு கட்சிகாரர் பேசுகிறார்.
மோடியை விமர்சிக்கும் ஒவ்வொருவரும் தேர்தல் முடிந்தவுடன் பாகிஸ்தான்
செல்ல வேண்டும் அவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்று இன்னொருவர்
உத்தரபிரதேசத்தில் பேசுகிறார் முசாபர் நகர் கலவரத்துக்கு பழிவாங்க இந்த
தேர்தல் சரியான ஆயுதம் என்று. இப்படி பல பல பேச்சுக்களை கேட்ட மக்கள்
அரசியல் கட்சிகளை வெறுத்து இருக்கலாம்.
பாகிஸ்தானை சேர்ந்த ஒரு குற்றவாளியை தூக்கிலிட்டு அந்த உடலை
பாகிஸ்தானுக்கு அனுப்ப முன் வந்த இந்த அரசு, ஒரு இந்தியனை தூக்கிலிட்டு,
அந்த செய்தியை அவனது குடும்பத்துக்கு தாமதமாக தெரிவித்ததோடு அவசர அவசரமாக
அந்த மனிதரை சிறை வளாகத்திலேயே சமாதி கட்டியதை மனித நேயம் உள்ள எந்த
சமூகமும் ஏற்றுக் கொள்ளாது. காரணம் குற்றம் நிருபிக்கப்படாத அவருக்கு
இந்த நிலை. மறுபுறம் பாரத பிரதமரையே கொன்றவர்கள் 20 வருடங்களுக்கு மேலாக
உயிரோடு இருக்கிறார்கள். அடுத்ததாக வானமே இடிந்தாலும் பேசாத பிரதமர். இது
போன்ற காரணங்களால் மக்கள் ஆளும் அரசை வெறுத்து இருக்கலாம். இது தேசிய
நிலவரம் .
தமிழகத்தில் முதல்வரை காணும் இடங்களில் எல்லாம் காலில் விழும்
அமைச்சர்கள், கூனிகுருகி நிற்கும் வேட்பாளர்கள் என்று தினம் தினம்
பார்த்த மக்கள், சுயமரியாதையை இழந்த இவர்களுக்கு ஓட்டு போட்டு நாம் ஏன்
சுயமரியாதையை இழக்க வேண்டும் என்று நினைத்து இருக்கலாம்.
இன்னொரு கட்சி இருக்கிறது 2ஜி முறைகேட்டில் இந்தியாவையே அதிர
வைத்தவருக்கு மீண்டும் சீட்டு. அமைச்சராக இருந்து தன்னுடைய அதிகாரத்தை
சுயநலத்துக்கு பயன்படுத்திய ஒருவருக்கு மீண்டும் சீட்டு. இப்படியான கேலி
கூத்துகளை மக்கள் விரும்பாமல் இருக்கலாம்.
இன்னொரு அரசியல்வாதி சொன்னார் நீங்கள் ஓட்டுக்கு 200 ருபாய் பணம்
வாங்கினால் (அதை ஐந்து வருடங்களுக்கு வகுத்தால் ஒரு நாளுக்கு 10 பைசா
வருகிறது) அது பிச்சையை விட கேவலம் என்று சொல்லாமல் சொன்னதால் மக்களுக்கு
ரோசம் வந்திருக்கலாம்.
ஆக மொத்தத்தில் பதிவாகியுள்ள 75% ஓட்டும் நோட்டாவாக ஆவதற்கு முன்னால்
ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் திருந்தி கொள்ளுங்கள் என்று
சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன்.
- நெயினார் முகம்மது (கலீல்), வீரசோழன்
0 comments:
Post a Comment