ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Wednesday, 7 August 2013

ஸதகத்துல் ஃபித்ர்


1) முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை சுதந்திரமானவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரீத்தம் பழம் ஆகியவற்றை கொடுக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
2) நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் ஸதகத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். (ஆதாரம்: அபூதாவூத்)
3) ரமளானின் இறுதியில் உங்கள் நோன்பு தர்மத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறி, இத்தர்மத்தை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: அபூதாவூத், நஸாயி)
4) நபி (ஸல்) அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி, ”தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்” என்ற வாசகத்தை கூறச் சொன்னார்கள். (ஆதாரம்: திர்மிதி)
விளக்கம்: ரமளான் மாத வழிபாடுகளில் ஸதகத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மமும் ஒன்றாகும். இஸ்லாத்தில் இரு பெருநாட்களில் நோன்புப் பெருநாளும் ஒன்று. வருடம் முழுவதும் வறுமையில் வாடி வதங்கி உணவிற்கு வழியின்றி திண்டாடும் நம் முஸ்லிம் சகோதரர்கள் எத்தனை எத்தனையோ பேர்!!! இவர்கள் பெருநாளில் மட்டுமாவது தம் வறுமையை மறந்து மகிழ்வாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் நம் ஏழைச் சகோதரர்களின் துயர் துடைக்க இஸ்லாம் இத்தர்மத்தை கடமையாக்கியுள்ளது. இத்தர்மம் ஏழைகளின் உணவாகப் பயன்படுவதோடு, இத்தர்மம் செய்தவர், நோன்பு நோற்றிருக்கும் போது செய்த தவறுகளுக்குப் பரிகாரமாகவும் அமைகின்றது. இது இரக்கப்பட்டு நாம் விரும்பிய அளவு கொடுக்கும் தர்மமல்ல. மாறாக ”தகுதியுள்ள ஒவ்வொருவரும் இதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என வலியுறுத்தப்பட்ட கட்டளையாகும்” ஏழைகளின் துயர்துடைக்கவும் சகோதர வாம்சையை நினைவூட்டவும் கடமையாக்கப்பட்டுள்ளது. இத்தர்மத்தை நாம் அனைவரும் முறையாக நிறைவேற்றுவோமாக!
சட்டங்கள்: இது முஸ்லிம்களான ஆண், பெண், சிறியோர், பெரியோர், ஆகிய அனைவர் மீதும் கடமையாகும். எனவே குடும்பப் பொறுப்பாளர் அவர் குடும்பத்திலுள்ள அனைவருக்காகவும் இத்தர்மத்தைக் கொடுக்க வேண்டும். பெருநாள் அன்று தன்னுடைய செலவு போக, மீதப் பொருள் மற்றும் தானியம் இருப்பின், அவர்கள் இத்தர்மத்தைக் கொடுக்க தகுதி பெறுவார்கள். பெருநாள் அன்று உண்ண தானியம் இல்லாதவர்கள், இத்தர்மத்தைப் பெற்றுக் கொள்ள தகுதி பெறுவார்கள்.
அளவு: நடுத்தரமான அளவுடைய ஒருவரின் இரண்டு கைகள் நிறைய அள்ளும் அளவு, ஒரு முத்து எனப்படும். இவ்வாறு நான்கு மடங்கு சேர்ந்தது ஒரு ஸாவு எனப்படும். நபி (ஸல்) அவர்கள் ஒரு ஸாவு ஸதகத்துல் ஃபித்ர் கொடுத்துள்ளனர். இதன் எடை தானியத்திற்கேற்ப வேறுபடும். எனவே, கை அளவை அடிப்படையாகக் கொள்வதே பேணுதலாகும். இன்றைய நிறுவையின் படி, கிட்டத்தட்ட இரண்டரைக் கிலோ அரிசி வழங்குவது அதன் அளவாகும்.
நேரம்: இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்கு முன்னர் பங்கீடு செய்து விட வேண்டும். தொழுகைக்குப் பிறகு கொடுத்தவர் இக்கடமையை நிறைவேற்றியவராகமாட்டார். ஷவ்வால் மாதத்தின் பிறை கண்டதிலிருந்து பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன் இத்தர்மத்தை கொடுத்துவிட வேண்டும். பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் இத்தர்மத்தை பங்கீடு செய்வதில் தவறில்லை.
 *எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும்அல்லது நாங்கள் தவறு
செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா!
எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது
சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க
முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப்
பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை
புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள்
வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)*

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR