இப்போதைக்கு அமெரிக்க அதிபர்
ஒபாமாவின் மிக பெரிய எரிச்சல்
அமெரிக்க நிறுவனம் ஒன்றின் சட்ட விரோத
உளவு நடவடிக்கைகளை ஆதாரபூர்வமாக
அம்பலப்படுத்தியுள்ள எட்வர்ட்
ஸ்னோடெனும், அமெரிக்க மிரட்டல்கள்
எதற்கும் அஞ்சாமல் அவருக்கு அடைக்கலம்
கொடுக்கத் தயார் என
அறிவித்துள்ள லத்தீன் அமெரிக்க
இடதுசாரி அரசுகளுந்தான்.
ஏற்கனவே வெனிசூலா,
பொலிவியா, நிகரகுவா ஆகிய
மூன்று நாடுகளும் அடைக்கலம் அளிக்கத்
தயார் என அறிவித்துள்ளன. விக்கி லீக்ஸ்
மூலம் அமெரிக்க அய்ரோப்பிய நாடுகளின்
அறமற்ற அரசியல்
நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி ஆத்திரமுண்டாக்கிய
ஜூலியன் அசாஞ்சேவுக்கு கடந்த
ஓண்டு காலமாக லண்டனில் உள்ள
தனது தூதராலயத்தில் அடைக்கலமளித்துள்ள
ஈக்வடாரும்கூட ஸ்னோடெனுக்கும்
அடைக்கலமளிக்கும் என நம்பப்படுகிறது.
அப்படியெல்லாம் செய்தால் 40
பில்லியன் டாலர் வணிக
முன்னுரிமை ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவதாக
அமெரிக்கா அறிவித்ததும்,
நீயென்ன
ரத்து செய்வது நானே அதைச்
செய்துவிடுகிறேன் எனச்
சொல்லி சென்ற ஜூன் 27
அன்று அந்த
ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார்
ஈக்வடார் அதிபர் ரபேல் கொரியா.
அது மட்டுமல்ல அமெரிக்க அரசின் மனித
உரிமை மீறல்களை வெளிப்படுத்தும்
முயற்சிகளுக்கு 23 மில்லியன் டாலர்
நன்கொடையையும் அறிவித்துக்
கடுப்பேத்தியுள்ளார்.
இந்தியா போன்ற அமெரிக்க
அடிவருடி நாடுகளைத் தவிர பிற நாடுகள்
அனைத்தும் அமெரிக்காவைக்
கண்டித்துள்ளன. தனது நாட்டால் "தேடப்படும்
ஒரு குற்றவாளியை ஹாங்காங் வழியாக
ரஷ்யாவிற்கு பத்திரமாகத் தப்ப
வைத்ததற்காக" அமெரிக்கா, சீனாவைக்
கண்டிக்கப் போக, அது, நாங்கள்
எல்லாவற்றையும் சட்ட விதிகளின்
அடிப்படையில்தான் செய்துள்ளோம், திருடிக்
கொண்டு ஓடுகிற ஒருவன் 'திருடனைப்
பிடி, திருடனைப் பிடி' எனக் கத்துவது போலக்
கூவுவதை நீ முதலில் நிறுத்து எனத் திருப்பிச்
சீறியுள்ளது.
அஎரிக்கா ஏதோ சீனா, ரஷ்யா,
இந்தியா போன்ற
நாடுகளை உளவு பார்ப்பது மட்டுமல்ல, அதன்
நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளான பிரிட்டன்,
ஜெர்மனி முதலான நாடுகளையும்
விட்டு வைக்க வில்லை. அமெரிக்காவில்
உள்ள அய்ரோப்பிய நாடுகளின்
தூதராலயங்களின் தகவல்
பரிமாற்றங்களும் கூட முழுமையாகப்
பதிவு செய்யப்பட்டுள்ளதை ஸ்நோடென்
வெளிப்படுத்தியுள்ளார். அய்ரோப்பிய
யூனியன் ஆணையர் விவியேன் ரெடிங்,
"பங்காளிகள் ஒருவரை ஒருவர்
உளவு பார்க்கக் கூடாது" என இதைக்
கண்டித்துள்ளதோடு, அமெரிக்காவுக்கும்
ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே இந்த மாதம்
நடக்க உள்ள வர்த்தக ஒப்பந்தப்
பேச்சு வார்த்தைகளும் கூட
ரத்து செய்யப்படலாம் என
எச்சரித்துள்ளார். சென்ற மாதம்
ஒபாமா ஜெர்மனி சென்ற
போது அவருக்கு எதிராக மிகப் பெரிய
ஆர்பாட்டங்கள் நடந்தன. ஒபாமாவின்
புகழ் பெற்ற தேர்தல் முழக்கமான "Yes,
We Can" (ஆம், நம்மால் முடியும்) என்பதை, "Yes,
We Scan" (ஆம்,நாம் வேவு பார்ப்போம்)
என்பதாக மாற்றி எழுதப்பட்ட வாசகங்கள்
அடங்கிய அட்டைகள் அவர் சென்ற
இடமெல்லாம் அவரை வரவேற்றன.
ஜெர்மன் சான்சலர்
ஆஞ்செலா மார்கெலிடம்,
"தப்பா நினைச்சுக்காதீங்க.
இப்படியெல்லாம்
வேவு பார்த்ததால்தான் மிகப் பெரிய
50 பயங்கரவாதத்
தாக்குதல்களை எங்களால் தடுக்க முடிஞ்சது"
என ஒபாமா அசடு வழிய நேர்ந்தது. ஆனால்
அந்த 50 தாக்குதல்கள் என்ன
என்பதை அவரால் சொல்ல
இயலவில்லை என்பதைப் பத்திரிக்கைகள்
சுட்டிக்காட்டின. இந்திய வெளியுறவுத்
துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்,
"அமெரிக்கா எங்களை உளவு பார்த்ததாகவெல்லாம்
சொல்ல இயலாது.
இது சும்மா கணினி ஆய்வுதான் (computer
analysis)" என அடக்கி வாசித்து விசுவாசம்
காட்டியதற்குக் கடுமையான
எதிர்ப்பு இந்தியா முழுவதும் எழுந்துள்ளது.
அமெரிக்கா இவ்வாறு உளவு பார்த்த
நாடுகளின் வரிசையில்
இந்தியா 5வது நாடாக உள்ளது. சீனா,
ரஷ்யாவைக் காட்டிலும் முன்னால் உள்ளது.
இந்தியத் தகவல்
பரிமாற்றத்தை வேவு பார்த்துச் சேகரித்த
தரவுகளின் அளவு 6.3 பில்லியன் துண்டுகள்.
ஒரு பில்லியன் என்பது 100 கோடி. ஒன்றுக்குப்
பக்கத்தில் ஒன்பது சுழிகளைப் போட வேண்டும்.
ஒட்டுமொத்தமாக 2 மில்லியன்
ஜி.பி (20,000,00 GB) அளவுத்
தகவல்களை அமெரிக்கா ஒவ்வொரு மணி நேரமும்
(கவனிக்க ஒவ்வொரு மணி நேரமும்)
தோண்டி எடுத்துக் கொண்டுள்ள
செய்தியை வெளிச்சமிட்டுக்
காட்டியதால்தான் ஸ்னோடென்
மீது அமெரிக்காவுக்கு இத்தனை ஆத்திரம்.
நமது மின்னஞ்சல்கள், டெக்ஸ்ட்
மெசேஜ்கள், ஒலி வடிவ உரையாடல்கள்,
காணொளிப் பாரிமாற்றங்கள்
என நவீன தொழில் நுட்பம் என்ன
தகவல் பரிமாற்றச்
சாத்தியங்களை எல்லாம் உருவாக்கித்
தந்துள்ளதோ, அத்தனைக்குள்ளும்
ஊடு புகுந்து பார்த்து, பதிவு செய்து,
தோண்டி (Data Mining),
அது 'மகா தரவுகளை' (Meta Data)
உருவாக்கி வைத்துக் கொள்கிறது.
ஒரு மகத்தான தகவல் பெருக்க
வெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளதாக நாம்
பெருமை கொள்கிறோம்.
அது உண்மையும் கூட. சென்ற
நூற்றாண்டுத் தொடக்கத்தில் நாம்
கற்பனை செய்துகூடப் பார்த்திராத
அளவு தகவல் பரிமாற்றச்
சாத்தியத்தை இந்த நூற்றாண்டுத்
தொடக்கத்தில் நாம் அநுபவித்துக்
கொண்டுள்ளோம். இந்தத் தகவல்
பெருக்கம் சமூக அமைப்பைப் பெரிய
அளவில் ஜனநாயகப் படுத்தியுள்ளது.
இந்தியா போன்ற ஒரு பின் தங்கிய
நாட்டிலேயே 90 கோடிப் பேர் மொபைல்
இணைப்புகளைப் பெற்றுள்ளனர். 16
கோடி இன்டெர்நெட்
தொடர்புகள் உள்ளன. 8.5 கோடிப் பேர்
முகநூல் முதலான சமூக ஊடகங்களில்
உள்ளனர். இஹற்காக நவீன
தொழில்நுட்பங்களுக்கு நன்றி சொல்லும்
அதே நேரத்தில் இதற்கு நாம் விலையாக
அந்தரங்கங்களின் புனிதத்தை இழந்துள்ளோம்.
அந்தரங்கக்ங்களைக்
காத்துக்கொள்வது (Right to Privacy)
ஜனநாயக அரசின்
குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள
ஒரு அடிப்படை உரிமை. அமெரிக்க அரசின்
புகபெற்ற நான்காவது திருத்தம்,
வேவு பார்ப்பது, ஒட்டுக் கேட்பது என்கிற
வடிவங்களில் குடிமக்களின் அந்தரங்கங்களில்
அரசு பிரவேசிக்கும் உரிமையைத் தடை செய்கிறது.
எனினும்
இன்று அமெரிக்கா வெளி நாட்டு மக்களின்
தகவல் பரிமாற்றங்களை மட்டுமல்ல,
சொந்த
நாட்டு மக்களையே உளவு பார்த்துள்ளதை ஸ்னோடென்
வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவுக்குள் இதற்குப்
பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஒபாமாவின் ஆதரவுத்
தொகுதி ஒரே அடியாக வீழ்ந்துள்ளது.
எந்தத் தொழில் நுட்பம் நமக்கு இந்தத்
தகவல் பெருக்க வாய்ப்பைக்
கையளித்துள்ளதோ அதே தொழில்நுட்பந்தான்
நமது தகவல் பரிமாற்றங்களுக்குள்
அத்துமீறி நுழையும் வாய்ப்பை அதிகார
மையங்களுக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது. நவீன
தகவல் தொழில் நுட்பத்தின்ன
ஆதாரமாக உள்ள ஒளி இழை வலைப் பின்னல்
(Optical Fibre Network)
அடர்ந்து செறிந்து நிற்கும் அமெரிக்க
மண்ணிலிருந்து கொண்டு உலக
நாடுகளுக்கிடையே பரிமாற்றிக்கொள்ளப்
பெறும் தகவல்களை ஒட்டுக் கேட்பது மிக
எளிது.
நவீன மின்னணுத்
தொடர்பு உருவான
அதே காலத்திலேயே இதைக்
கண்காணித்து ஊடறுக்கும் நோக்குடன்
உருவாக்கபட்டதுதான் (1952)
அமெரிக்காவின் என்.எஸ்.ஏ எனப்படும்
'தேசிய பாதுகாப்பு முகமை'.
தொடர்ந்து இது துணைக்கோள்கள்
(satellites) முதலான
தொழில்நுட்பங்களை எல்லாம்
பயன்படுத்தித் தனது பிரும்மாண்டமான
வேவுத் தொழிலை விரித்துக்
கொண்டே போனது. இந்த
உளவு அமைப்பிற்கு ஒப்பந்த அடிப்படையில்
தொழில்நுட்பப் பணிகளிச்
செய்து வரும் 'பூஸ் ஆலன் ஹாமில்டன்'
எனும் நிறுவனத்தில் தொழில் நுட்பத்
துறையில்
பணி செய்து கொண்டிருந்த
ஒரு ஊழியர்தான் எட்வர்ட் ஸ்நோடென்
(29). மனச்சாட்சியுள்ள அந்த இளைஞனால்
அங்கு நடப்பவற்றைச் சகித்துக்
கொள்ள இயலவில்லை.
இவ்வாறு என்.எஸ்.ஏ சேகரிக்கும்
உளவு விவரங்களை நான்கு லேப் டாப்களில்
பதிந்துகொண்டு சென்ற மே 20
அன்று ஹாங்காங்கில் வந்திறங்கினார்
ஸ்னோடென்.
அங்கிருந்துகொண்டு 'கார்டியன்'
இதழைத்
தொடர்புகொண்டவுடன்
நியூயார்க்கிலிருந்து பறந்தோடி வந்தனர்
அவ்விதழின் செய்தி ஆசிரியர்கள்.
'ப்ரிசம்' (PRISM) என்கிற ஒரு உளவுத் திட்டத்தின்
கீழ் சொந்த நாட்டு மக்கள்
உளவு பார்க்கப்படும் அதிர்ச்சியான
செய்தியைத் தாங்கி வந்தது ஜூன் 6 ந்தேதிய
கார்டியன் இதழ். முதலில் Verax
(உண்மை விளம்பி) என்கிற பெயரில்
அவை வெளியிடப்பட்டன.
மூன்று நாட்களுக்குப் பின் கார்டியன் இதழ்
அது ஸ்னோடென்தான்
என்பதை அவரது ஒப்புதலுடன்
வெளிப்படுத்தியது. "நான் செய்கிற,
சொல்கிற ஒவ்வொன்றும்
பதிவு செய்யப்படும் ஒரு நாட்டில் நான்
வாழ விரும்பவில்லை" என ஸ்நோடென்
அறிவித்தார். 'எல்லையற்ற
தகவலாளி' (Boundless Informant)
என்பது இன்னொரு உளவுத் திட்டம்.
மார்ச் 2013ல் மட்டும் இத் திட்டத்தின் மூலம் 97
பில்லியன் தகவல்கள் திரட்டப்பட்டன்.
அமெரிக்க என்.எஸ்.ஏவும் பிரிட்டனின்
ஜி.சி.எச்.கியூ வும் (GCHQ) சேர்ந்து 2009ல்
லண்டனில் நடைபெற்ற G 20 மாநாட்டில்
இப்படி வேவு பார்த்ததும் பின்னர்
கார்டியனில் வெளியிடப்பட்டது.
1961ம் ஆண்டு இயற்றப்பட்ட
'நாடுகளுக்கிடையேயான அயலுறவுக்
கொள்கை குறித்த
ஐ.நா ஒப்பந்த'த்தின் 22ம் பிரிவின்படி,
இப்படி தூதராலயங்களை வேவு பார்ப்பது குற்றம்.
தூதராலயத்தின் தலைமை அதிகாரியின்
ஒப்புதலின்றி அதனுள் யாரும் நுழைவது தவறு.
தவிரவும் தூதராலயங்களைப் பாதுகாப்பது,
அவை அமைந்துள்ள நாட்டு அரசின்
பொறுப்பு.. வெனிசூலா அதிபர்
நிகோலஸ் மடுரோ சொல்லியிருப்பது போல
கொஞ்சம்
கற்பனை செய்து பாருங்கள்,
வெனிசூலா அல்லது பொலிவியா போன்ற
ஒரு நாடு இப்படித் தன் நாட்டில் உள்ள
அமெரிக்கத்
தூதராலயத்தை வேவு பார்த்திருந்தால் என்ன
நடந்திருக்கும்? வலுவான
நாட்டுக்கொரு நீதி, எளிய
நாடுகளுக்கு இன்னொரு நீதி என்கிற
எத்தனை போலித்தனமான உலகில் நாம்
வாழ்ந்து கொண்டுள்ளோம்.
கூகிள், யாகூ, மைக்ரொ சாஃப்டின்
ஹாட் மெயில் இப்படி எந்த
நிறுவனமாயினும் அரசு கோரும்
தகவல்களை ஒப்புவிக்க வேண்டும்
என்கிறது அமெரிக்க அரசின்
ஃபிசா சட்டம் (Foreign Intelligence Surveillance
Act). வேண்டுமானால் அந் நிறுவனம்
ஃபிசா நீதிமன்றத்தில் புகார்
செய்யலாம். ஆனால்
ஃபிசா நீதிமன்றம் இத்தகைய
புகார்களை ஊக்குவிப்பதில்லை. 1980
தொடங்கி இப்படி அனுப்பப்பட்ட
33,900 ஆணைகளில் வெறும் 11
ஆணைகளைத்தான் இதுவரை இந் நீதிமன்றம்
ரத்து செய்துள்ளது.
அரசு கேட்கும்போது இந்நிறுவனங்களும் முகநூல்
முதலான சமூக ஊடகங்களும் பெரிதாக
முரண்படுவதுமில்லை.
தமது வாடிக்கையாளர்களின்
அந்தரங்கங்களைத் திறந்துவிடுவதில்
அவை எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை.
ஹைதராபாத் குண்டு வெடிப்பை ஒட்டி 2013
பிப்ரவரி மாதத்தில் இந்திய அரசின் 'தேசியப்
புலனாய்வு மையம்' (NIA) அது குறித்த தகவல்
அளிப்போருக்குப் பத்து லட்ச ரூபாய்
வெகுமதி அளிக்கப்படும் என அறிவித்தது.
தகவல் அனுப்புவதற்கு ஒரு மின்னஞ்சல் (e
mail) முகவரியும் வெளியிடப்பட்டது. இந்த
இரகசியத் தகவல் அமெரிக்க அரசின்
கண்களுக்குத் தப்பாது என்கிற
உண்மை இந்திய அரசுக்குத் தெரியாதா,
இல்லை தெரிந்தாலும்
பரவாயில்லை என்பதுதான் அதன்
கருத்தா என்பது அமெரிக்க
விசுவாசி மன்மோகனுக்குத்தான்
வெளிச்சம்.
எப்படியாவது ஸ்னோடெனைக்
கொண்டுவந்து,
ஏற்கனவே இவ்வாறு அமெரிக்க இரகசிய
வேலைகளை வெளிப்படுத்திய
பிராட்லி மேனிங்கை எட்டடிக்கு ஆறடி அளவிலுள்ள
அறையில் தனிமைச் சிறையில் அடைத்து வைத்துள்ளதைப்
போல அடைத்து வைக்க அமெரிக்க
அரசு வெறித்தனத்துடன் முயற்சித்துக்
கொண்டுள்ளது. சீனா, ரஷ்யா,
வெனிசூலா, கியூபா,
பொலிவியா முதலான
நாடுகளிலிருந்து அவற்றின் அரசுகளுடன்
முரண்பட்டு வந்துள்ள
பல்லாயிரக்கணக்கானோருக்கு அடைக்கலம்
கொடுத்து வைத்துள்ள
நாடு அமெரிகா என்பது குறிப்பிடத்தக்கது.
1976ல் கியூபாவின் பயணிகள் விமானத்தைச்
சுட்டு வீழ்த்திய
லூயி பொசாடா கேரில்ஸ் போன்ற
பயங்கரவாதிகளுக்கு வெளிப்படையாகவே அடைக்கலம்
கொடுத்து வைத்திருந்த
உங்களுக்கு ஸ்னோடெனுக்கு அடைக்கலம்
கொடுக்கக் கூடாது எனச்
சொல்ல என்ன
யோக்கியதை இருக்கிறது எனக் கேட்டுள்ளார்
வெனிசூலா அதிபர் மடுரா.
நாடுகடத்தி ஒப்படைக்கும் (Extardition Treaty)
ஒப்பந்தம் செய்து கொள்ளாத
நாடுகள் அமெரிக்காவின்
வேண்டுகோளை ஏற்று ஸ்னோடெனைப்
பிடித்து ஒப்படைக்க வேண்டியதில்லை.
அப்படியே ஒப்பந்தம் இருந்தாலும் கூட மரண
தண்டனை உள்ள ஒரு நாட்டிற்கு இப்படி மரண
தண்டனைக்குரிய குற்றம் சாட்டப்பட்டுள்ள
ஒருவரைப் பிடித்தனுப்பத் தேவையில்லை.
உளவு பார்த்ததை வெளிப்படுத்திய
ஸ்னோடென்
மீது இன்று அமெரிக்கா உளவு பார்த்ததாகக்
குற்றம் சாட்டியுள்ளது மிகப் பெரிய
வேடிக்கை. அமெரிக்காவில்
உளவு பார்ப்பது மரண தண்டனைக்குரிய
குற்றமல்ல. ஆனால்
இப்படி உளவு பார்த்ததன் விளைவாக
யாரேனும் கொல்லப்பட்டதாக
அரசு குற்றம் சாட்டினால் அதற்கு மரண
தண்டனை உண்டு,
அமெரிக்கா எதைத்தான்
செய்யாது?
அதேபோல அரசியல் காரணங்களுக்காகக்
குற்றம் சாட்டப்பட்டவர்களைப்
பிடித்தனுப்பவேண்டிய கடமையும்
அரசுகளுக்கு இல்லை, ஸ்நோடென்
மீது இன்று வைக்கப்படும் குற்றச் சாட்டு இந்த
வகைப்பட்டதுதான்.
இதே காரணங்களுக்காக
ஒருவருக்கு அகதி நிலை அளித்து அடைக்கலம்
அளிக்கவும் அகதிகள் குறித்த
ஐ.நா உடன்பாட்டில் இடமுண்டு.
மாஸ்கோ விமான நிலையம் ஒன்றில் ட்ரான்சிட்
பயணிகள் தங்குவதற்கான பக்தியில்
ஒளிந்துள்ள ஸ்னோடென்
வெளிநாடுகள் எதற்கும் விமானம்
ஏறிவிடாமல் தடுக்க
அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்து இன்னொரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது ஒபாமா அரசு.
எனினும் இப்படியான தருணங்களில்
முறையான பாஸ்போர்ட் இல்லாவிட்டாலும்
அடைக்கலம் அளிக்கும்
வெளிநாடொன்றுக்குப் பயணம்
செய்ய அனுமதிப்பதற்கும் பன்னாட்டுச்
சட்டத்தில் இடமிருக்கிறது என்கின்றனர் சட்ட
வல்லுனர்கள். அமெரிக்காவை விரோதித்துக்
கொண்டு இதை புடின்
செய்வாரா எனத் தெரியவில்லை.
அமெரிக்க அரசுக்கு ஊறு விளைவுக்கும்
வேலைகளை நிறுத்திக் கொள்வதாக
வாக்களித்தால் தற்காலிகமாக
ரஷ்யாவில் தங்கிக் கொள்ளலாம்
என புடின் சொன்னதை ஸ்நோடென்
ஏற்றுக்கொண்டுள்ளதாக
இன்று அறிவித்துள்ளார். புடின் என்ன
செய்யப் போகிறாரோ தெரியவில்லை.
இன்டெர்நெட் இல்லாத உலகில்
இனி வாழ இயலாது என்பது உண்மை. உலக
அளவிலான தகவல்
தொடர்பு மட்டுமின்றி உலக
அளவிலான அறிவுச் சேகரமும்
இன்று பேரளவில் இணையத்தையே நம்பியுள்ளது.
இன்றைய நிலையில் இணைய
உலகை 'ஐகான்' (Internet Corporation for
Assigned Names and Numbers) என்கிற
அமைப்புதான் நிர்வகித்து வருகிறது.
அமெரிக்க அரசின் வணிக அமைச்சகம்
அளித்துள்ள உரிமத்தின் அடிப்படையில்தான்
இது இயங்குகிறது. இப்படி இல்லாமல்
ஐ.நா அவையின்
பன்னாட்டு அமைப்பொன்றின் கீழ்
இதைக் கொண்டு வரவேண்டும் என
இந்தியா போன்ற சில நாடுகள் எடுக்கிற
முயற்சியை அமெரிக்கா முரட்டுத்தனமாக
முறியடித்து வருகிறது. சென்ற
ஆண்டு துபையில் நடை பெற்ற
தொலைத்
தொடர்புகளுக்கான
பன்னாட்டு மாநாட்டில் 'சைபெர்
பாதுகாப்பு' முதலான சில இணைய
அம்சங்களையேனும்
பன்னாட்டு தொலைத்
தொடர்பு ஒன்றியத்தின்
கட்டுப்பாட்டுக்குள் (ITU) கொண்டு வர
மேற்கொள்ளப்பட்ட முயற்சியையும்
அமெரிக்க நிறுவனங்களும்,
அமெரிக்க அரசும் சேர்ந்து முறியடித்தன.
இப்படியான ஒரு பன்னாட்டு நிர்வாகத்தின்
கீழ் இணையம் கொண்டுவரப்படாத
வரை நாம் இணயப் பாவிப்பின் ஊடாகப்
பரிமாறிக்கொள்ளும் தகவல்கள்
ஒவ்வொன்றும் அமெரிக்க ரசின்
கழுகுக் கண்களுக்குத் தப்பாது என்பதை நாம்
மறந்துவிடலாகாது. அதேபோல
அமெரிக்கக் காதுகளுக்குக் கேட்காமல்
நாம் தொலைபேசியிலும் உரையாடிவிட
இயலாது.
நன்றி: அ.மார்க்ஸ்
0 comments:
Post a Comment