ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Tuesday, 10 December 2013

வகுப்பு ஒற்றுமையை வளர்ப்போம்

வகுப்பு ஒற்றுமையை வளர்ப்போம்

நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகும் வகுப்பு மோதல்கள்
நடப்பது நமக்குப் பெருமையல்ல. அவற்றைத் தடுக்க வேண்டியதும், நடைபெறாமல்
பார்த்துக்கொள்ள வேண்டியதும் மத்திய, மாநில அரசுகளின் கடமை மட்டும் அல்ல,
மக்களுடைய கடமையும் ஆகும். வகுப்புக் கலவரங்கள், ஜாதி மோதல்கள்
போன்றவையெல்லாம் தானாக ஏற்படுவதில்லை. ஒரு சில சக்திகளின்
தூண்டுதல்களால்தான் ஏற்படுகின்றன. இவற்றைத் தடுக்க முற்படுவதில் தவறேதும்
இல்லை.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த மோதல்கள் நடப்பதில்லை. ஒரு சில
மாநிலங்களில், குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் இந்த மோதல்கள்
நடக்கின்றன. இந்த மோதல்கள் நடப்பதற்கு முன்னதாகவே சிலருடைய பேச்சுகளும்
எழுத்துகளும்
இதற்குத் தூபம்போடும் வகையில் அமைகின்றன. கலவரங்களைத் தூண்டுகிறவர்களையும்
அதில் தீவிரம் காட்டுகிறவர்களையும் கைதுசெய்வதும் தண்டிப்பதும் மிகமிக
முக்கியம். பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதும் அவசியம்.
மதக் கலவரங்களை அடக்க இப்போது கையாளப்படும் உத்திகளும் சட்டங்களும்
போதவில்லை என்று மத்திய அரசு நினைத்தால் அதில் தவறில்லை. ஆனால், 'சட்டம்-
ஒழுங்கு' பராமரிப்பும், 'பொது அமைதி' பராமரிப்பும் மாநில அரசுகளின் கடமை
என்று மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலில் சேர்த்த பிறகு, புதிய மசோதா
தொடர்பாக மாநில அரசுகளிடம் விரிவாக ஆலோசனை நடத்திக் கருத்தொற்றுமை
கண்டிருக்க வேண்டும். மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிட்டு, அவற்றைப்
பலவீனப்படுத்த வகைசெய்யும் சட்டங்களை மாநில அரசுகள் எப்படி ஏற்க முடியும்?
சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உத்தேசச் சட்டம் குறித்து முதலில்
பேசப்பட்டபோதே இந்தச் சட்டத்துக்கான வரைவு மசோதாவில் சில வாக்கியங்கள்
தவறாகப் பொருள்கொள்ளக்கூடிய வகையில் இருப்பதாகவும், இதை அமல்படுத்த
வேண்டியவர்கள் அவரவர் நோக்கில் இதற்கு விளக்கம் தரக்கூடும் என்றும்
கூறப்பட்டது. அத்துடன் வகுப்புக் கலவரங்களைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளைத்
தண்டிப்பதற்காக இதில் சேர்க்கப்பட்டுள்ள பிரிவுகளும் அதிகாரிகளை,
ஆட்சியாளர்கள் பழிவாங்கும் நோக்கோடு தண்டிக்க வழிசெய்துவிடும் என்றும்
சுட்டிக்காட்டப்பட்டது. இந்த மசோதாவை அவசர கதியில் நிறைவேற்றக் கூடாது
என்று தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா மாநில முதலமைச்சர்கள்
வலியுறுத்தியிருப்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்போதுள்ள சட்டங்களையே முறையாகப் பயன்படுத்தியும், கலவரச் சூழல்
ஏற்படுவதை உளவுத் துறை மூலம் முன்கூட்டியே அறிந்து முளையிலேயே கிள்ளி
எறிந்தும்
நடவடிக்கை எடுக்கலாம்.
இந்தியாவில் உள்ள பெரு நகரங்களிலும் சிறு நகரங்களிலும் சேரிகள் போன்ற
ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் வசிப்போரில் கணிசமானவர்கள்
தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள், சிறுபான்மைச் சமூகத்தவர் என்று பல்வேறு
கணக்கெடுப்புகள் தொடர்ந்து கூறிவருகின்றன. வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்து
மக்களுக்குக் கழிப்பிட வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், காற்றோட்டமும்
மின்சார வசதியும் உள்ள கௌரவமான குடியிருப்பு, குழந்தைகளுக்கு இலவசக்
கல்வி, குறைந்தபட்ச ஊதியம் பெறும் வகையிலான வேலைவாய்ப்பு ஆகியவற்றை
அளித்தால்,
மக்களிடம் அமைதியும் ஒற்றுமையும் ஏற்படும். கலவரத் தடுப்பு
மசோதாக்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை இதுபோன்ற வளர்ச்சித்
திட்டங்களுக்கும் மத்திய அரசு அளிக்க வேண்டும்.

sources:The Hindu Tamil

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR