ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Wednesday, 11 December 2013

ஆம் ஆத்மி கட்சி வெற்றி - இடதுசாரிகளின் சிந்தனைக்கு…

டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய நான்கு
மாநிலங்களுக்கான இந்த சட்டப் பேரவைத் தேர்தல்கள் ஏதாவது ஒரு
காரணத்துக்காக இந்தியத் தேர்தல் வரலாற்றில் இடம்பெறும் என்றால், அது
டெல்லி தேர்தலில் 'ஆம் ஆத்மி' கட்சி பெற்றுள்ள அசாதாரணமான வெற்றிக்காகவே
இருக்கும்.
ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் காங்கிரஸ் தழுவியிருக்கும் தோல்வியின் அளவு
அந்தக் கட்சிக்கே அதிர்ச்சியை அளித்திருக்கும். மக்களுக்கு ஆளும் கட்சி
மீது ஏற்படும் வழக்கமான அதிருப்தியின் காரணமாக ஏற்பட்ட தோல்வியாக
காங்கிரஸின் இந்த இரண்டு மாநிலங்களின் தோல்வியைக் கருத முடியாது.
ராஜஸ்தானின் 2008 சட்டப் பேரவைத் தேர்தலில் 199 தொகுதிகளில் 96 இடங்களைப்
பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, இந்த முறை 25 இடங்களைக்கூடக் கைப்பற்ற
முடியவில்லை என்பதும், டெல்லியின் மொத்தமுள்ள 70 தொகுதியில் 2008-ல் 43
இடங்களைப் பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றிருந்த காங்கிரஸ் இப்போது 8
இடங்களை மட்டுமே பெறுவது என்பதும், 2014-க் கான மக்களவைப் பொதுத்
தேர்தலில் காங்கிரஸின் நிலை என்னவாக இருக்கும் என்பதைக் கோடிட்டுக்
காட்டுகிறது.
சத்தீஸ்கர் ஆறுதல்
மத்தியப் பிரதேசத்திலும் படுதோல்வி என்றாலும் 2008-ல் பெற்ற இடங்களைவிடக்
குறைவு என்றாலும் 2008 தோல்விக்கும் 2013 தோல்விக்கும் இடையில் அதிக
வித்தியாசமில்லை. காங்கிரஸுக்குச் சற்று, சற்று மட்டுமே ஆறுதல் தரும்
விஷயமாக இருப்பது சத்தீஸ்கர் தேர்தல் முடிவு மட்டுமே. 2008 தேர்தலைவிட
இப்போது காங்கிரஸ் கூடுதலாகப் பெற முடிந்தபோதிலும் ஆட்சியமைப்பதற்கான
வாய்ப்பு பின்னரே தெளிவுபடும்.
இந்தத் தேர்தல் காங்கிரஸுக்கு குறிப்பாக, ராகுல் காந்தியின் தலைமைக்குக்
கிடைத்த பெருத்த அடி என்றாலும், அது பா.ஜ.க-வுக்கும் நரேந்திர மோடிக்கும்
கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்துவிடவில்லை. குறிப்பாக, மோடியின்
தலைமைக்குக் கிடைத்த வெற்றியாக இதைக் கொண்டாட முடியாது என்பதை பா.ஜ.க.
தலைவர்கள் அனைவருமே உணர்ந்திருக்கிறார்கள்.
நாடெங்கும் 'மோடி அலை' வீசுவதாக சங் பரிவாரமும் மோடி ஆதரவு ஊடகங்களும்
கடந்த ஓராண்டு காலமாகக் கூறிவந்த நிலையில், இந்தத் தேர்தலில் அதற்கான
ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது அவர்களுக்குப் பெருத்த
ஏமாற்றம்தான். முக்கியமாக டெல்லி தேர்தல், 'மோடி அலை எப்படியிருந்தது
என்பதற்கான ஓர் உரைகல். மோடி அலை என்று சொல்லப்படுவதே நகர்ப்புற, படித்த,
நடுத்தர வர்க்கத்தின் மீதான மோடியின் செல்வாக்கைத்தான். அது டெல்லி
தேர்தலில் இல்லை என்பது பா.ஜ.க-வுக்கு அதிர்ச்சிகரமான செய்திதான்.
மக்களுக்கு ஒரு நல்ல மாற்று கிடைக்குமெனில், வழக்கமாக தாங்கள் அளிக்கும்
வாக்குகளை மாற்றியளிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதையே ஆம் ஆத்மி
கட்சியின் பெரும் வெற்றி காட்டுகிறது.
ஓராண்டில் பெறுவெற்றி
மதம், சாதி, மொழி ஆகியவற்றின் அடிப்படையிலான வாக்கு வங்கி ஏதுமில்லாமல்,
ஆட்சிமுறையில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் என்ற வாக்குறுதியின்
அடிப்படையில் தொடங்கப்பட்டு, ஓராண்டுகூட ஆகாத ஒரு கட்சி, இத்தகைய மகத்தான
வெற்றி பெறும் என்று அந்தக் கட்சியைத் தவிர்த்து வேறு யாரும்
எதிர்பார்க்கவில்லை.
டெல்லி தேர்தலுக்கான பா.ஜ.க-வின் விளம்பரங்களில் தங்களது முதல்வர்
வேட்பாளரான ஹர்ஷவர்த்தனின் படம் அஞ்சல்தலை அளவுக்கும் மோடியின் ஆளுயரப்
படம் பிரம்மாண்டமாகவும் இடம்பெற்றிருந்தன. பா.ஜ.க. எந்த அளவுக்குத்
தங்கள் வெற்றிக்கு 'மோடி அலை'யை நம்பியிருக்கிறது என்பதற்கு இதுவோர்
உதாரணம்.
மோடியின் தீவிரமான பிரச்சாரத்துக்குப் பிறகும், சில வரலாற்று
நிகழ்வுகளின் காரணமாக காலங்காலமாக பா.ஜ.க. வலுவாக இருக்கும் டெல்லியில்,
ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கே பா.ஜ.க. திணற வேண்டிய நிலை.
மலைக்கவைக்கும் அடுக்கடுக்கான ஊழல்கள், விலைவாசி உயர்வு ஆகியவற்றின்
காரணமாக காங்கிரஸுக்கு எதிராக ஒரு பெரும் அலை வீசிய போதிலும், மோடியின்
தீவிரமான பிரச்சாரம்கூட பா.ஜ.க. பெரும் வெற்றி பெற உதவவில்லை.
வேண்டாம் காங்கிரஸ் ஆதரவு
ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பெறாவிட்டாலும் வாக்குவிகிதத்திலும் சரி,
வெற்றி பெற்ற இடங்களிலும் சரி பா.ஜ.க-வுக்கு மிக நெருக்கமாக வந்துள்ளது.
காங்கிரஸ் ஆதரவளிக்கும் பட்சத்தில் தாங்கள் ஆட்சியமைக்க முடியும்
என்றாலும் (அதற்கு காங்கிரஸும் தயாராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை)
அதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று ஆம் ஆத்மி கட்சி உறுதியாகக்
கூறிவிட்டது.
ஆனால், அ.ஆ.க-வின் இந்த வெற்றி அகில இந்திய அளவிலோ அல்லது பிற
மாநகரங்களிலோகூட சாத்தியமில்லை என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
அவற்றை விவாதிக்க இங்கு இடமில்லை. வரும் 2014 மக்களவைத் தேர்தலில்
அ.ஆ.க-வின் வெற்றி டெல்லியில் இதைப் போலவே இருக்குமா என்பதும் உறுதியானது
அல்ல. ஆ.ஆ.க-வுக்குக் கிடைத்த வாக்குகள் ஊழல் எதிர்ப்பு வாக்குகள்.
டெல்லியில் ஆ.ஆ.க. ஆட்சியமைக்க வாய்ப்புகள் அதிகம் என அந்தக் கட்சியினர்
மற்றும் ஆதரவாளர்கள் உறுதியாக இருந்தனர். அகில இந்திய அளவில் என்று
வருகிறபோது அந்த வாய்ப்பு பா.ஜ.க-வுக்கே இருக்கிறது என்பதால், இப்போது
ஆ.ஆ.க-வுக்கு வாக்களித்தவர்களில் கணிசமானவர்கள் வரும் மக்களவைத்
தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்கக் கூடும்.
மோடிக்கு சவால் இவர்கள்
மத்தியப் பிரதேசத்தில் மூன்றாம் முறையாக சிவராஜ் சிங் சௌகான் பெரும்
வெற்றி பெற்றிருப்பது, சத்தீஸ்கரில் மூன்றாம் முறையாக காங்கிரஸைவிட ஒரு
இடம் அதிகமாகப் பெறும் நிலையில் ரமண் சிங் இருப்பது, இப்போதைக்கு
இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இவர்கள் மோடிக்குச் சவாலாக வரும்
வாய்ப்புண்டு.
வரும் மக்களவைத் தேர்தலில் 180 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. பெற முடியாது
போய், ஆட்சியமைக்கப் பிற கட்சிகளை அதிகம் சார்ந்திருக்க வேண்டி வந்தால்,
அப்போது பா.ஜ.க-வில் மோடிக்கு மாற்றாக அமையக் கூடியவர் சௌகானாக இருக்க
வாய்ப்புகள் அதிகம். ஆக, காங்கிரஸின் தன்னிகரற்ற தலைவராக இந்திரா காந்தி
உருவானதைப் போல் பா.ஜ.க-வின் தன்னிகரற்ற தலைவராக மோடி உருவாவதற்கான
வாய்ப்புகள் குறைவு.
தாக்குதல் அனுதாபம்
சத்தீஸ்கர் தவிர்த்த, மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு ஏற்பட்ட
படுதோல்விக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியது அந்தக் கட்சியின் அகில
இந்தியத் தலைமையே. சத்தீஸ்கரில் பஸ்தர் பகுதியில் காங்கிரஸ் தலைவர்கள்
மீது மாவோயிஸ்ட்டுகள் நடத்திய கொலைவெறித் தாக்குதல் அந்தக் கட்சிக்கு
ஓரளவு உதவியிருக்கிறது. பழங்குடி மக்கள் பகுதியில் நடந்த அதிக அளவிலான
வாக்குப் பதிவு மற்றும் அந்தப் பகுதியில் காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள
அதிக இடங்கள் மாவோயிஸ்ட்டுகளின் செல்வாக்கு கணிசமாகச் சரிந்துள்ளதையே
காட்டுகிறது.
மாநில அளவில் வலுவான தலைவர்கள் உருவாவது தடுக்கப்பட்டு, காங்கிரஸ் கட்சி
முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தினரால் கட்டுப்படுத்தப்படுவதும், அளவு
கடந்த ஊழலும் அந்தக் கட்சியை மேலும் மேலும் அழிவுநிலைக்கு இட்டுச்
சென்றுகொண்டிருக்கிறது. காங்கிரஸின் தோல்வியைப் பற்றி, ஊடகவியலாளர்களிடம்
பேசிய ராகுல் ஆ.ஆ.க-விடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள விரும்புவதாகக்
கூறியிருக்கிறார். அப்படி கற்றுக்கொண்டால் காங்கிரஸின் மற்றும் அவரின்
எதிர்காலத்துக்கு மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்துக்கும் நல்லது.
இடதுசாரிகளின் அரசியல் உத்தி
ஆ.ஆ.க-வின் வெற்றி யாருக்குப் பாடமோஇல்லையோ இடதுசாரிக் கட்சிகளுக்கு
முக்கியமான பாடம். பொருளாதாரக் கொள்கைகளில் தங்களிடமிருந்து முற்றிலும்
வேறுபட்ட, அரசியல் நிர்பந்தங்கள் மற்றும் வாக்கு வங்கிகளுக்காக
மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்கும் கட்சிகளுடன் மாறி மாறிக்
கூட்டுவைப்பதன் மூலம் இந்தியாவில் தாங்கள் விரும்பும் மாற்றத்தைக்
கொண்டுவர முடியும். பெரும்பான்மையான மக்களைத் தங்கள் பக்கம் வென்றெடுக்க
முடியும் என்ற இடதுசாரிகளின் அரசியல் உத்தி, கடந்த 60 ஆண்டுகளில் எந்தப்
பலனையும் தந்திருக்கவில்லை.
தங்களது கொள்கைகளின் அடிப்படையில், தங்களை மாற்றாக மக்கள் முன்
நிறுத்துவதன் மூலம் மட்டுமே மக்களின் நம்பிக்கையை அவர்கள் வென்றெடுக்க
முடியும். இடதுசாரிக் கட்சிகளின் நீடித்த இருப்பு உடனடித் தேர்தல்
வெற்றிகளைப் பொருத்ததல்ல என்பதால், இதை இடதுசாரிகளால் சாதிக்க முடியும்.
மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள், பொது வாழ்விலும் தனி வாழ்விலும் நேர்மை
ஆகிய விஷயங்களில் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் இடதுசாரிகள்
டெல்லியில் ஆ.ஆ.க. சாதித்ததை அகில இந்திய அளவில் சாதிக்க முடியும்.
தி ஹிந்து

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR