ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Monday, 10 March 2014

குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

****************************
> பொதுவாக ஒரு குழந்தை தாயின் கருவறையில் (கர்ப்பப்பையில் - Womb) 40 வாரங்கள் இருத்தல் வேண்டும். இதற்குக் குறைவாக அதாவது 37 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தைகளை குறைமாதக் குழந்தைகள் என்கிறோம்.
>
> நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களுக்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழந்தைகள் குறை மாதக்குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை.
>
> அதிலும் 28 வாரங்களில் அதாவது 7 மாதங்களில் ஒரு குழந்தை பிறக்குமானால், அந்தக் குழந்தை 1 கிலோவிற்கும் குறைவானதாகவே இருக்கும்.
>
> ஒருபெண் கர்ப்பம் தரித்த 2 அல்லது 3 மாதங்களிலேயே ஸ்கேன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு, குழந்தை பிறக்கும் உத்தேச தேதியை மகப்பேறு மருத்துவர்கள் கணிப்பார்கள். 
>
> அதாவது, மாதவிடாய் கடைசியாக எந்த தேதியில் ஏற்பட்டதோ அந்த நாளில் இருந்து 40 வாரங்கள் என்று கணக்கிடுவார்கள்.
>
> முழு அளவில் வளர்ச்சியடைந்து பிறக்கும் குழந்தைகள் குறைந்தது இரண்டரை கிலோ எடை இருத்தல் அவசியம். இந்த எடைக்குக் குறைவாக இருந்தாலே குறைமாதமாக எடுத்துக் கொள்ளலாம். சில நேரங்களில், முழு வளர்ச்சியடைந்த குழந்தைகளும் இரண்டரை கிலோவிற்கு குறைவான எடையுடன் பிறக்க நேரிடும். எனவே கருவுற்ற பெண்ணின் கடைசி மாதவிடாய் தேதி மூலமான கணக்கீடே குழந்தையின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும்.
>
> குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
>
> நுரையீரல் மூலம் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது சாதாரணமான ஒன்றாகும். குறைமாத குழந்தைகளுக்கு நுரையீரல் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருப்பதால், ஆக்ஸிஜன் தெரபி தேவைப்படும். சில குழந்தைகளுக்கு வென்டிலேட்டர் எனப்படும் உயிர்காக்கும் கருவி அவசியமாகும்.
>
> குறைமாதத்தில் பிறக்கும் சில குழந்தைகளுக்கு இதய நோயும் ஏற்படும் சாத்தியக்கூறுகள் உண்டு.
>
> ஒரு கிலோவிற்கும் குறைந்த எடையுடன் பிறக்கும் சில குழந்தைகளுக்கு மூளை நரம்புகளில் இரத்தக்கசிவு இருக்கக்கூடும். அதுபோன்ற குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை தேவைப்படலாம். 
>
> வேறுசில குழந்தைகளுக்கு மாறுகண் போன்ற பார்வை ஏற்படலாம். ஆனால், குழந்தைகள் வளர, வளர அவை சரியாகி விடும்.
>
> பெண்களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தாலும், தாய்க்கு நீண்ட கால நோய்களான இதய பாதிப்பு, சிறு நீரக பாதிப்பு மற்றும் நீரிழிவு நோய் இருந்தாலும், பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலையில் இருந்தாலும், உடலில் எடை மற்றும் உயரம் குறைவாக இருந்தாலும், கர்ப்ப காலங்களில் அதிகமான ரத்தப் போக்கு ஏற்பட்டாலும், அதிக வேலை மற்றும் மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களாலும் குறைமாதக் குழந்தைகள் பிறக்கின்றன.
>
> ஒரே பிரசவத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறக்கும் போதும் இது போன்ற குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. ஆயிரம் கிராமிற்கு குறைவாக பிறக்கும் குழந்தைகள், 27 முதல் 28 வாரங்களில் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாக்க இங்குபேட்டர், வென்டிலேட்டர் மற்றும் சர்பக்டென்ட் சிகிச்சைகளைப் பயன்படுத்தி உயிர் பிழைக்க வைக்க முடியும்.
>
> இந்தக்கருவிகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை. குழந்தை பிறந்தவுடனேயே தாய்ப்பால் அருந்த முழுத் தகுதி அடைகிறது. ஒருவேளை சிசேரியன் செய்த தாய்க்கு, தாய்ப்பால் உடனடியாக கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் எவ்வளவு சீக்கிரம் கொடுக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.
>
> கர்ப்பகாலத்தின் தொடக்கத்திலே கர்ப்பிணிகளை பரிசோதிக்கும் டாக்டர்கள் அவர்களது கர்ப்பத்தின் தன்மைக் கேற்ப ஹை ரிஸ்க் பிரக்னென்சி, லோ ரிஸ்க் பிரக்னென்சி என்று இருவகையாகப் பிரித்து, அதற்கு தக்கபடி மருந்து மற்றும் உணவுகளை பரிந்துரைக்கிறார்கள். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், வயது அதிகம், கர்ப்பத்தில் பாரம்ப ரியமாகவே நெருக்கடியை சந்திப்பவர்கள் 'உயர் பாதிப்பு கொண்டோர்' பட்டியலில் இடம்பெறுகிறார்கள். 
>
> இவர்களுக்குத்தான் பெரும்பாலும் குறைப்பிரசவ குழந்தைகள் பிறக்கின்றன. முழுவளர்ச்சிக் காலத்தை எட்டாமல், குறைப் பிரசவமாக குழந்தைகள் பிறக்க என்ன காரணம், திருமணமாகி 5-10 வருடங்கள் வரை தாய்மை அடையாத பெண்கள் அதன் பிறகு நவீன முறையிலான குழந்தையின்மைக்கான சிகிச்சைக்கு வருகிறார்கள். அப்போது அவர்கள் வயது கிட்டத்தட்ட 35 ஆகிவிடுகிறது.
>
> அதன் பிறகு ஐ.வி.எப். போன்ற நவீன குழந்தையின்மை சிகிச்சை முறைகளில் கர்ப்பமாகும் பெண்களுக்கு குறைப்பிரசவ வாய்ப்பு அதிகம். அதில் ஏற்படும் 'ரிஸ்க்'கை தவிர்ப்பதற்காக சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது. 
>
> வேலை மனஅழுத்தம்……. 
>
> தற்போது பெரும்பாலான பெண்கள் அலுவலகப் பணியாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கர்ப்பக்காலத்திலும் ஒன்பது மாதம் வரை வேலைக்கு செல்கிறார்கள். பாதுகாப்பாக சென்று, வேலையை ரசித்து, அமைதியாக செய்தால் பாதிப்பு இல்லை. ஆனால் இன்றைய இயந்திரமயமான வாழ்க்கையில் கர்ப்பிணிகள் வேலையில் அமைதியை இழந்து, மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். 
>
> பஸ்களிலும், ஆட்டோக்களிலும் பாதுகாப்பற்ற பயணத்தை மேற்கொள்கிறார்கள். மாடிப்படி ஏறி இறங்குகிறார்கள். முறையான உணவுப் பழக்கத்தையும் கையாளுவதில்லை. இதுவும் குறைப்பிரசவத்திற்கு காரணம். 
>
> கர்ப்பகால செக்ஸ்….. 
>
> பொதுவாக கர்ப்பகாலத்தில் செக்ஸ் தவிர்க்கப்படவேண்டியதில்லை. ஆனால் கர்ப்பிணியின் நிலையை உணர்ந்து, வயிற்றுக்கு பாதிப்பு ஏற்படாத அளவுக்கு சவுகரியமான 'பொஷிஷனில்' மேற்கொள்ளவேண்டும். ரத்தப்போக்கு இருந்தாலும், செக்சை தவிர்க்க வேண்டும். கர்ப்பகாலத்தில் 'பொறுப்பற்ற' முறையில் மேற்கொள்ளப்படும் செக்ஸ் செயல்பாடும் குறைப் பிரசவத்திற்கு காரணமாகும். 
>
> பயணம் தவிர்க்க……. 
>
> கர்ப்பகாலத்தில் தூர பயணத்தை தவிர்க்கவேண்டும். அதிக எடையை தூக்கக்கூடிய வேலை மற்றும் எடையை தூக்கக்கூடிய உடற்பயிற்சி செய்யாமல் இருக்க வேண்டும். மாடிப்படி ஏறி இறங்குவதை தவிர்க்க வேண்டும். உடல் இயக்கமே இல்லாமல் எப்போ தும் படுத்தே கிடப்பதையும் தவிர்க்கவேண்டும். 
>
> சத்துக் குறைபாடு…….. 
>
> பெண்களிடம் இருக்கும் சத்துக்குறைபாடும், குறைப் பிரசவத்திற்கான காரணமாகிறது. 150 செ.மீ.க்கு குறைவான உய ரமும், 50 கிலோவிற்கு குறைவான எடையும் கொண்ட கர்ப்பிணிகள் குறைப் பிரசவ குழந்தைகளை பெற்றெடுக்கும் சூழ்நிலை அதிகம். எதிர்காலத்தில் குறைப்பிரசவ குழந்தைகளை பெற்றெடுத்துவிடக்கூடாது என்று கருதும் பெண்கள் இப்போதே ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். தேவையான உடற்பயிற்சிகள் செய்து உடலுக்கு வலு ஏற்றிக்கொள்ளவும் வேண்டும். 
>
> சர்க்கரை நோயாளிகள்…. 
>
> சர்க்கரை நோய் கொண்ட கர்ப் பிணிகள் கர்ப்பகாலத்தில் மிக கவனமாக இருக்கவேண்டும். சரியான பராமரிப்பு, உணவு பழக்கம், மருந்துகளை சாப்பிட்டு சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கா விட்டால் குறைப் பிரசவமாகிவிடும். சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு கொண்ட கர்ப்பிணிகளும் உடலை கவனமாக பராமரிக்கவேண்டும். 
>
> அவர்கள் அரிசி, கிழங்கு வகை உணவுகளை கர்ப்பகாலத்தில் வெகுவாக குறைப்பது நல்லது. பலாப்பழம், மாம்பழம் தவிர்க்கவேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுவது நல்லது. உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும் குறைப்பிரசவம் தோன்றும். அதனால் கர்ப்பிணிகள் நிறைய தண்ணீர் பருகவேண்டும். மனதையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கவேண்டும். 
>
> எல்லாவற்றையும் சொல்லுங்கள்…….. 
>
> சரியான டாக்டரை தேர்ந்தெடுத்து, கர்ப்பமான தொடக்கத்தில் இருந்தே அவரிடம் பரிசோதனைக்கு செல்லுங்கள். எல்லாவற்றையும் அவரிடம் கூறுங்கள். காலந்தவறாது ஆலோசனைகளை பெற்று, பின் பற்றுங்கள். குறைப் பிரசவத்தை தடுக்க நவீன மருத்துவ முறைகள் நன்றாக கைகொடுக்கின்றன. அதை முழுமையாக பயன்படுத்தி, நிறை மாதத்தில் ஆரோக்கிய குழந்தைகளை பெற்றெடுப்பதற்கு தாய்மார்கள் முன்வரவேண்டும். 
>
> குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் தாய்ப்பாலை தானாக உறிஞ்சி பருகும் வரை டியூப் மூலமாக பால் கொடுத்தல் வேண்டும்.
>
> நாள் ஒன்றுக்கு எட்டு முதல் பத்து முறை தாய்ப்பாலை கொடுப்பதால் மார்பகப் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிறந்த குழந்தைகள், பாலை மட்டும் குடிக்காமல், காற்றையும் சேர்த்துக் குடிப்பதால் வாந்தி ஏற்படுகிறது. அதிக பாலை அருந்துவதாலும், அருந்திய பால் உணவுப் பாதையில் இருந்து மீண்டும் வாய்வழியே திரும்புவதாலும் வாந்தி ஏற்படுகிறது. 
>
> இதனால் பயப்படத் தேவையில்லை, குழந்தைகளின் எடை குறையாது. ஆனால், தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால் மருத்துவரை அணுகி உணவுப் பாதை அடைப்பு மற்றும் மூளைக் காய்ச்சல் உள்ளதா என்பதை பரிசோதித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
>
> பிறந்த குழந்தைகள் தினமும் ஐந்து முறைக்கு மேல் மலம் கழிக்கும். சில குழந்தைகள் பால் குடித்தவுடன் மலம் கழிக்கும். ஒரு சில குழந்தைகள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மலம் கழிக்கும். இவை அனைத்தும் இயற்கையான செயலே. 
>
> அதே நேரத்தில் தொடர்ச்சியாக 72 மணி நேரம் மலம் கழிக்கவில்லை என்றால், மருத்துவரின் அறிவுரைப்படி தைராய்டு பிரச்னை மற்றும் மலக்குடலில் சுருக்கம் போன்ற பிரச்னைகள் உள்ளதா என்பதை அறிந்து சிகிச்சை தர வேண்டும். 
>
> இதேபோல் குறைமாதக் குழந்தைகள் வளர்ந்து வரும் போது, அந்தக் குழந்தைகளின் பாதிப்புகளும் பெரும்பாலும் சரியாகி விடுவது இயல்பு.
>
> உலகில் ஒவ்வோர் ஆண்டும் பிறக்கும் குழந்தைகளில் கிட்டத்தட்ட 15 மில்லியன் குழந்தைகள் குறைமாதத்தில் பிறப்பதாக அனைத்துலக அறிக்கை ஒன்று கூறுகிறது.
>
> பச்சிளம் குழந்தைகள் இறப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது குறைமாதப் பிரசவமே என்று அந்த அறிக்கை கூறுகிறது.
>
> 2010ம் ஆண்டில் உலகில் 135 மில்லியன் குழந்தைகள் பிறந்ததாகவும் அந்தக் குழந்தைகளில் 15 மில்லியன் குழந்தைகள் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் என்றும் அந்தக் குழந்தைகளில் 1.1 மில்லியன் குழந்தைகள் இறந்து விட்டதாகவும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறியது.
>
>
> ALAVUDEEN

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR