ஓர் உயிரினத்தைக் கொலை செய்தல் பாவம்.
ஓர் உயிரினத்தைக் கொடுமைப்படுத்துதல் பாவம்.
ஒருவன் மற்றொருவனுக்குத் தீங்கிழைத்தல் பாவம்.
உலகவாழ் மக்கள் பாவம் என்பதற்கு மேற்கண்டவாறு விளக்கம் அளிக்கின்றனர்.
பாவச்செயல் என்பதற்கு உலகிலுள்ள பெரும்பாலும் மற்ற மதங்கள் கொடுக்கும் விளக்கமும் இவ்வாறே உள்ளது.
ஒரு மனிதனுக்கோ அல்லது மற்ற உயிரினங்களுக்கோ தீங்கிழைத்தல் பாவம் என்பதை மற்ற மதங்கள் கூறுவதை விட இஸ்லாம் மிகத்தெளிவாகவே கூறி இருக்கிறது.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றியும், பாவத்தைப் பற்றியும், நான் கேட்டதற்கு, ''நல்ல ஒழுக்கமே நன்மை எனப்படும். பாவம் என்பது உன்னுடைய மனம் அச்சுறுத்துவதும், மக்களிடம் அதை வெளியாக்குவதை நீ வெறுப்பதுமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: இப்னு ஸம்ஆன்(ரலி) நூல்: முஸ்லிம்
மேலும் இது மட்டுமே பாவம் என்று கூறிமுடித்துக் கொள்ளாமல், மனிதனுடைய அறிவை மழுங்கடிக்கக் கூடிய, மனிதனுடைய அறிவுக்குப் பொருந்தாத மூட நம்பிக்கைச் செயல்கள் அனைத்தையும் பாவம் என்றே இஸ்லாம் தீர்ப்பளிக்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால் இறைவன் வெறுக்கின்ற அனைத்துச் செயல்களும் பாவம் என்பதே இஸ்லாமியத் தீர்வு.
இஸ்லாத்தில் மூட நம்பிக்கை என்ற பேச்சிற்கே இடமில்லை! இன்றுள்ள முஸ்லிம்களின் வாழ்க்கை முறையைக் காண்போருக்கு இஸ்லாத்தில் மூடநம்பிக்கை இருப்பதாகத் தோன்றும். உண்மையில் இஸ்லாத்தில் எவ்வித மூட நம்பிக்கையும் இல்லை. இஸ்லாமியச் சட்ட அமைப்பில் அவ்வாறு உள்ளதா என்பதை நன்றாக அறிந்த பின்பு தான் தீர்ப்புக் கூற வேண்டும்.
இன்றைய உலக வாழ் முஸ்லிம்கள் பிற மதக் கலாச்சாரங்களை யும் நடைமுறைகளையும் பார்த்துப் பழகிப் போய் இருக்கின்றனர். அவர்களிடம் இஸ்லாமிய அறிவு சரிவர இல்லாத காரணத்தால் புதிய புதிய சடங்குகளையும், வழிமுறைகளையும் மேற்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். உண்மையில் இவர்களின் வாழ்க்கை முறை இஸ்லாமிய வாழ்க்கை முறை அல்ல என்றே கூறமுடியும்.
ஏழு பாவங்கள் என்ற தலைப்பிட்டிருப்பதால் பாவங்கள் ஏழு மட்டும்தான் என்பது அர்த்தமல்ல. நாம் குறிப்பிட்டிருக்கும் இவை மட்டும்தான் பாவங்கள் என்று இஸ்லாம் குறிப்பிடவுமில்லை. பாவச் செயல்கள் பல இருக்கின்றன. அவற்றில் இந்த ஏழு பாவங்கள் மனித குலத்திற்கு அழிவை உண்டாக்கக் கூடியவையாக இருக்கின்றன. இந்த ஏழு பாவங்களில் ஒரு பாவத்தை மனிதன் செய்தாலும், அது அவனை அழித்து விடும் என்றுதான் இஸ்லாம் குறிப்பிடுகிறது. எனவேதான் எச்சரிக்கப்பட்ட இந்த ஏழு பாவங்கள் மட்டும் இங்கு இடம் பெறுகின்றன.
''அழிவை உண்டாக்கக்கூடிய ஏழு பாவங்களை விட்டுத் தவிர்த்துக் கொள்ளுங்கள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, (இதைக் கேட்ட நபித்தோழர்கள்) ''இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?'' என வினவினார்கள். அதற்கு,
1. இறைவனுக்கு இணைவைத்தல்
2. சூனியம் செய்தல்
3. அல்லாஹ் எந்த உயிரைக் கொலைச் செய்வதை தடுத்திருக்கிறானோ அந்த உயிரை நியாயமின்றிக் கொலை செய்தல்
4. வட்டியை உண்ணுதல்
5. அநாதைகளின் சொத்துக்களை விழுங்குதல்
6. போர் நடந்து கொண்டிருக்கும் தினத்தில் புறமுதுகு காட்டுதல்
7. இறைநம்பிக்கை உள்ள ஒழுக்கமான பெண்கள் மீது அவதூறு கூறுதல் என்று இறைத்தூதர் அவர்கள் பதிலளித் தார்கள்'' என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ள அந்த ஏழு பாவங்களையும் தெரிந்து மனிதன் செயல்பட வேண்டும். இதோ அந்த ஏழு பாவங்களும் ஏழு பகுதிகளாகப் பிரித்துத் தரப்படுகின்றன.
0 comments:
Post a Comment