Saturday, 29 June 2013
Thursday, 27 June 2013
இந்தியாவைப் பிடித்த சாபக்கேடுகளில் முதல் இடம் பிடிப்பது ஊடகங்கள்...!!!
ஊடக விபச்சாரம் என்றால் என்ன? என்று தெரியாதவர்கள் கீழ்கண்ட உண்மை நிகழ்வைக் கண்டு தெளிவு கொள்ளலாம்..!!!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலும் அதன் சுற்றுபகுதிகளிலும் சில மாதங்களுக்கு முன்பு வீதியில் அலைந்து திரியும் நாய்களின் உடலில் காயங்கள் ஏற்பட்டு இறந்து காணப்பட்டது.
இந்த தெரு நாய்கள் காயம்பட்டு இறந்த நிகழ்வை ஊடகங்கள் எப்படி கொண்டாடி தீர்த்தன என்று தெரிந்து கொண்டால் ஊடகம் என்ற பெயரில் பத்திரிக்கைகள் நடத்தும் எழுத்து விபச்சாரத்தினைப் பற்றி நன்கு புரிந்து கொள்ளலாம்.
நாய்களின் உடம்பில் ஏற்பட்ட காயங்கள் வெட்டு காயங்கள் என்றும் இதன் பின்னணியில் தேச விரோத அமைப்புகளுக்குத் தொடர்புகள் இருக்கிறது என்றும் ஆயுத பயிற்சியின் போது நாய்களுக்குக் காயங்கள் ஏற்பட்டு அவைகள் இறந்திருக்கின்றன என்றும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டது.
காவல் துறை அதிகாரிகளும், உளவுத்துறை அதிகாரிகளும் தந்த தகவலின் அடிப்படையில் என்ற அடிக்கோட்டுடன் செய்திகளை வெளியிட்டு இருந்தார்கள்.(அதாவது பெயர் சொல்லாத விரும்பாத அதிகாரி தெரிவித்ததாவதுனு அடிச்சி உடுவானுங்க பாருங்க அதான் அது)
குறிப்பாக போப்புலர் பிரண்டை குறிவைத்து ஊடகங்கள் அவதூறு பிரச்சாரங்களை முன்வைத்தது.
நாய்களுக்கு வெட்டு காயங்கள் ஏற்பட்ட சம்பவங்களுக்குப் பின்னணியில் இசுலாமிய அமைப்புகளுக்குத் தொடர்பு இருக்கிறது என்பதனை மத்திய உளவுபிரிவு உறுதி செய்து இருக்கிறது என்று ”மாத்ரு பூமி” போன்ற பிரபல பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டு இருந்தன.
அதாவது மனிதர்களை வெட்டிக்கொல்ல நாய்களைக் கொண்டு பயிற்சி எடுக்கிறார்கள் இசுலாமியர்கள் என்பதே ஊடகங்கள் சொல்ல வந்த செய்தி...!!!
ஆனால் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி உண்மை நிலையை அறிந்த போது இந்த எழுத்து விபச்சாரர்களின் முகமூடிகள் கிழிந்து தொங்கியது மட்டுமல்லாமல் இந்த ஊடக விபச்சாரர்களின் மேல் காறி துப்பவும் தோன்றுகிறது..
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி பெற்ற தகவல்கள்...!
மலப்புரம் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் ஆட்சி துறை பிரிவு டி.எஸ்.பி யும் மக்கள் தகவல் தொடர்பு துறை அதிகாரியுமாகிய ஆர்.பிரதிப் குமார் கூறியதாவது...
* தெரு நாய்களுக்குக் காயங்கள் ஏற்பட்ட சம்பவத்தின் பின்னனியில் தீவிரவாத குழுக்களுக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறாகும். இது குறித்த விசாரணையில் அது பொய் என்று நிரூப்பிக்கப் பட்டுள்ளது.
* பத்திரிக்கைகள் கூறியது போன்று பதினாறு வழக்குகள் பதியப்பட்டு இருப்பதாக கூறப்படுவதும் தவறாகும். வழக்குகள் ஏதும் பதியப்படவில்லை.
* மத்திய - மாநில அரசுகளுக்கும், உள்துறை அமைச்சகத்திற்கும், உளவுப்பிரிவு அமைப்புகளுக்கும் காவல் துறை பல்வேறு அறிக்கைகளை சமர்பித்து இருக்கிறது என்று பத்திரிக்கைகள் எழுதி இருந்தன....இது முற்றிலும் தவறாகும்.
இந்நிகழ்வு குறித்து உள்துறை அமைச்சகத்திற்கோ, உளவு பிரிவு அமைப்புகளுக்கோ, நீதிமன்றத்திற்கோ காவல் துறையின் சார்பாக ஒரு அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.
* நாய்களுக்குக் காயம் ஏற்பட்டது கன்னி மாசத்தில் நாய்கள் இன பெருக்கத்திற்காக இணை சேரும் போது நகங்கள் கொண்டு உண்டாகிய காயம் என்று இறந்த நாய்களின் உடல்களைப் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் உறுதி செய்து இருக்கிறார்கள்.
* இது குறித்து குற்றப்பிரிவு காவல்துறை, குற்றப்பிரிவு டி.எஸ்.பி. அபிலாஷ் தலைமையில் விசாரணை செய்து நாய்கள் காயம் பட்டு இறந்ததன் பின்னணியில் ஒரு மர்மமும் இல்லை என்று உறுதி செய்து இருக்கிறார்கள்.
நாய்களின் உடம்பில் காயம் ஏற்பட்டதை இசுலாமிய தீவிரவாததோடு தொடர்புபடுத்தி எழுதிய பத்திரிக்கைகள்:
http://indiatoday.intoday.in/ story/stray-dogs-kerala- malabar-region-extremist- elements/1/228871.html
இன்று உண்மை வெளி வந்து இருக்கும் நிலையில் ஒரு பத்திரிக்கையும் செய்தி வெளியிடவில்லை..
தேஜஸ் என்கிற மலையாள பத்திரிக்கை மட்டுமே செய்தி வெளியிட்டு இருக்கிறது.
##இது தான் இந்திய ஊடக துறைகளின் சனநாயக கடமை ஆற்றும் லட்சணம்...?!
இவிங்களை சொல்லி குத்தமில்லை. இவிங்க பத்திரிக்கைகளையும் காசு கொடுத்து வாங்கி படிக்கிறாங்க பாரு அவிங்களை சொல்லணும்....இந்தியாவைப் பிடித்து உலுக்கும் சாபக்கேடுகளில் முதன்மை இடத்தை பிடிப்பது எழுத்து விபச்சாரம் என்பதனை மெய்பிக்கும் உண்மை நிகழ்வு இது.##
- Social Media
நன்றி : இந்நேரம்.com
அமெரிக்க இரும்புத்திரையை அம்பலப்படுத்தும் ஸ்னோடன் !
திரு எட்வர்ட் ஜோசப் ஸ்னோடன். அமெரிக்கரான இவர் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து சர்வதேச கவனம் பெறுவார். விரைவில் அமெரிக்காவின் மிக முக்கிய எதிரி என அறிவிக்கப்படுவார். பின் லாடனை விட மோசமான தீவிரவாதியாகவும், அமெரிக்க மக்களின் உயிர் பறிக்கும் அரக்கனாகவோ அல்லது பெண் பித்தர், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் குற்றம் சாட்டப்படலாம்.
ஏன் என்றால் அவர் செய்த செயல் அப்படிப்பட்டது! அமெரிக்கா தன் சொந்த நாட்டு மக்களையே வேவு பார்த்தை வீதியில் போட்டு உடைத்தவர்; அமெரிக்க அரசு கைபிசைந்து கொண்டு மக்கள் முன் தலை குனிந்து நிற்கும் நிலையை ஏற்படுத்தியவர். சென்ற வாரம், அமெரிக்க அரசு ”தேசிய பாதுகாப்பு” என்னும் பெயரில் அமெரிக்காவிலிருந்து வெளிநாடுகளுக்கு செய்யப்படும் தொலைபேசி, செல்பேசி உரையாடல்களை வேவு பார்த்தது, பலரின் மின்னஞசல்களையும், பிற ஆவணங்களையும் இணைய சேவை நிறுவனங்களில் இருந்து எடுத்து சேமித்தது ஆகியவற்றை நிரூபிக்கும் ஆவணங்கள் ஊடகங்களில் வெளியாகின.
அமெரிக்க மற்றும் உலக மக்கள் தினமும் தொலைபேசி, செல்பேசிகளில் பேசிக்கொள்ளும் உரையாடல்கள் முதல் அவர்களது இணையத் தகவல் பரிமாற்றங்கள் என சகலத்தையும் வேவு பார்த்துள்ளனர் அமெரிக்க உளவுத் துறையினர். இதற்காக தனிபிரிவுகளை ஏற்படுத்தி பல மில்லியன் டாலர்களை செலவு செய்து இந்த வேலைகளை செய்துள்ளனர்
ஸ்னோடன் 2003-ம் ஆண்டு ஈராக்கில் ‘ஜனநாயகத்தை நிலைநாட்டும் கடமையில் பங்கேற்கும்’ கனவுகளுடன் சிறப்பு ராணுவப் படைகளுக்கான பயிற்சித் திட்டத்தில் சேர்ந்தார். ஆனால், சீக்கிரமே அவர் ராணுவத்தின் உண்மை முகத்தை தெரிந்து கொண்டார். “பயிற்சியாளர்களில் பெரும்பகுதியினர் மக்களுக்கு உதவும் நோக்கம் கொண்டவர்கள் இல்லை, ஈராக் மக்களை கொல்வதைப் பற்றி மட்டும்தான் பேசினார்கள்” என்கிறார் அவர். பயிற்சி காலத்தில் ஒரு விபத்தில் கால்கள் முறிந்ததால் ராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தில் இருக்கும் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் ரகசிய அலுவலகத்தில் பாதுகாவலராக சேர்ந்திருக்கிறார். பின்னர் அமெரிக்க உளவுத் துறையின் தகவல் தொழில் நுட்ப பாதுகாப்பு துறையின் கீழ் ஜெனீவாவில் பணி புரிந்திருக்கிறார்.
அவரை முதலில் சுவிஸ் வங்கிகளை வேவு பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள். அவரும் கணினி உதவியுடன் பல்வேறு ஆவணங்கள், உரையாடல்களை சேகரித்துக் கொடுக்கும் வேலை செய்துள்ளார். இது சரிதான், ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் முதல் பல்வேறு சமூக விரோதிகளை தான் நம் கண்காணிக்கிறோம் என்று பெருமிதம் கொண்டார். ஆனால் மெல்ல அவர் சேகரிக்கும் தகவல்களும் ஆவணங்களும் சாதாரண அமெரிக்க குடிமக்களின் உரையாடல்கள் மற்றும் மின்னஞ்சல் தகவல்கள் என தெரிய வந்தபோது அதிர்ச்சியடைந்தார்; குற்றவுணர்வு கொண்டார். இதனால் அமெரிக்க அதிபரை குற்றவாளி என நினைத்தார். புஷ் நிர்வாகம் செய்யும் தவறுகள் தான் இவை, அடுத்து சில மாதங்களில் எப்படியும் புஷ் மாறி வேறு ஒரு அதிபர் வரும் போது தவறுகள் சரிசெய்யப்படும் என சமாதானம் செய்து கொண்டார்.
2009-ம் ஆண்டு ஜப்பானில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் அலுவலகத்தில் ஒரு ஒப்பந்த ஊழியராக சேர்ந்தார். ஒபாமா அதிபர் ஆன ஆரம்ப நாட்களில் இந்த வேலைகள் தொடர்ந்தாலும் இத்தகைய கொள்கைகள் மெல்ல மாற்றப்படும் என காத்திருந்தார். ஆனால் ஒபாமா பதவி காலத்தில் இந்த தகவல்கள் சேகரிப்பு விஸ்தரிக்கப்பட்டது. முன்பு குறுகிய அளவில் இருந்த வேவு பார்க்கும் வேலை அமெரிக்க மக்கள் மீது முழுவதுமே திரும்பியது. அதிபர் மாற்றம் ஒன்றுமே செய்யவில்லை, எத்தனை அதிபர் மாறினாலும் அமெரிக்க நிர்வாகம் மக்களுக்கு எதிரானது என்பதை கண்டுணர்ந்தார்.
‘அப்பாவி மக்களை வேவு பார்ப்பது தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது; அரசு நிர்வாகம் வெளிப்படையாக இருக்க வேண்டும்; அமெரிக்க நிர்வாகம் வெளிப்படையானது; இங்கு மக்களுக்கு கருத்து சுதந்திரம் பொங்கி வழிகிறது’ என அமெரிக்க அரசின் சகல முழக்கங்களும் பொய்யானவை என்பது ஸ்னோடனை கடும் குற்றணர்வு அடைய செய்தது.
கடைசியாக ஹவாயில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆணையத்தில் பூஸ் அலன் என்ற ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியராக வேலை செய்திருக்கிறார். அமெரிக்க அரசின் ‘பெரிய அண்ணன் கண்காணிப்பு’ அடக்குமுறையை மக்களுக்கு எப்படி தெரியப்படுத்தலாம் என யோசிக்கிறார். அமெரிக்காவில் மக்கள் மீதான நிறுவனங்களின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடுபவர்கள் விசில் ப்ளோவர்ஸ் என அழைக்கப்படும் அம்பலப்படுத்துபவர்கள். இவர்கள் மக்களுக்கு தெரியாமல் அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் செய்யும் ஊழல்களை, தமக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை பொருட்படுத்தாமல், மக்களுக்கு அம்பலபடுத்துகிறவர்கள். ஒபாமா ஆட்சியில் இந்த அம்பலப்படுத்துபவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர்; அழிக்கப்பட்டனர்.
அதனால் ஸ்னோடன் அமெரிக்காவின் மிக முக்கிய உளவுநிறுவனமான சிஐஏ-வின் கீழ் இயங்கும் தனிப்பிரிவின் பல ஆயிரம் ஆவணங்களை வெளியில் கொண்டு வருவதன் பின் உள்ள ஆபத்தை நன்கு உணர்ந்திருந்தார். தான் வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க நேரிடலாம் என்பதை புரிந்து கொண்டிருந்தார். ஆனால், ஸ்னோடனுக்கு விக்கிலீக்ஸ் ஆதர்சமாக இருந்தது. அமெரிக்க ராணுவம் ஈராக்கில் செய்யும் அட்டூழியங்களை விக்கிலீக்ஸ் உதவியுடன் வெளிகொண்டு வந்த ப்ராட்லி மேனிங் என்பவரின் செய்கை அவருக்கு வழிகாட்டியது. ப்ராட்லி மேனிங் அமெரிக்க அரசால் கைது செய்யப்பட்டு அல்கைதாவிற்க்கு உதவியதாக ஒரு பொய் வழக்கில் விசாரிக்கப்பட்டு வருகிறார். மரண தண்டனை வழங்கக் கூடிய வழக்கு அது.
ஸ்னோடன் அமெரிக்க அரசு மக்களை வேவு பார்ப்பது தொடர்பான தகவல்களை சேமித்தார். ஆயிரக்கணக்கான உரையாடல்கள் பதிவுகளையும் ஆவணங்களையும் தனது அறைக்கு கொண்டு வந்தார். தான் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என இரண்டு வாரம் விடுப்பெடுத்துக் கொண்டார். தகவல்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஹாங்காங் சென்று அங்கிருந்தபடி தகவல்களை வெளி உலகிற்கு அம்பலப்படுத்தினார்.
முதலில் தன் பெயரை அவர் வெளியிடவில்லை, அமெரிக்க அரசு உலகம் முழுவதிலும் மக்களை வேவு பார்க்கும் வேலையை செய்வதை ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டன. பரபரப்பு பற்றிக்கொண்டது. அமெரிக்காவின் உளவுத்துறையும் உள்துறையும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் அவமானப்பட்டு நின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமா, இப்படி வேவு பார்ப்பது தேசிய பாதுகாப்பிற்கு தேவையானது என்று சப்பைக்கட்டு கட்டினார்.
ஒரு வாரத்திற்கு பிறகு இந்த ஆவணங்களை வெளிக்கொண்டு வந்தது யார் என்ற கேள்விக்கு விடை தரும் விதமாக ஸ்னோடன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அவர் மிக தெளிவாகவே இருக்கிறார் அவரின் கருத்தும் மிக தெளிவாகவே இருக்கிறது, ”நான் யாரையும் புண்படுத்தவோ, நாட்டை காட்டிகொடுக்கவோ இந்த வேலையை செய்யவில்லை, நான் கவனமாக ஆவணங்களை பரிசோதித்து யாருக்கும் ஆபத்து ஏற்படுத்தாத தகவல்களையும் ஆவணங்களையும் மட்டுமே வெளியிட்டுள்ளேன். ஆனால் என்னுடைய நோக்கம் அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான்” என்கிறார்.
ஆனால், மக்களை பாதுகாப்பதற்காக மக்களை வேவு பார்க்கிறோம் என்கிறது அமெரிக்க அரசு.
தொடர்ச்சியாக பல கொலைகளையும், திட்டமிட்ட நம்பிக்கை துரோகங்களையும் செய்யும் கிரிமினல் ஒரு கட்டத்தில் யாரையுமே நம்பாமல் அனைவரையும் சந்தேகப்பட்டு மனநோயாளி போல் தன்னை காப்பாற்றி கொள்ள அலைவது இயல்பு தான். மூன்றாம் உலக நாடுகளில் தனக்கு வேண்டாத அதிபர்களை தீர்த்துக் கட்டுவது, வெளியுறவுத் துறை அதிகாரிகளை அவர்கள் இருக்கும் நாடுகளில் வேவு பார்க்கச் செய்வது, தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்களை சீர்குலைவு செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்வது, ஆட்சிக் கவிழ்ப்பு, சதி, அழிவு என சகல கிரிமினல் வேலைகளை செய்து வரும் சிஐஏ-வும் அமெரிக்க அரசும், இன்று யாரை நம்புவது என தெரியாமல் அனைவரையுமே சந்தேகப்படுவது இயல்பு தான். ஆனால் மக்கள் ஒரு ரவுடியின் மனநோயை ஆதரிக்க முடியுமா?
சோஷலிச நாடுகள் வெளிப்படையாக தம் வர்க்க சார்பை அறிவிக்கின்றன; ”எந்த ஒரு அரசும் ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கான எந்திரம்தான்; சோஷலிச அரசு என்பது பெரும்பான்மையினரான உழைக்கும் வர்க்க மக்கள், சிறுபான்மையினரான சுரண்டல் வர்க்கங்களை ஒடுக்குவது” என வெளிப்படையாக அறிவித்து விட்டு ஆட்சி நடத்துகின்றன. சோவியத் அரசு, பெரும்பான்மை உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக சுரண்டல் வர்க்கங்களுக்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்படும் என வெளிப்படையாகவே அறிவித்திருந்தது.
சோவியத் யூனியனின் இந்த கொள்கையை மக்கள் முன் திரித்துக் கூறி ‘சோவியத் யூனியனில் கருத்து சுதந்திரம் இல்லை, வெளிப்படையான நிர்வாகம் இல்லை, கம்யூனிஸமே தனிமனித சுதந்திரத்திற்கும் கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானது, ஆனால் அமெரிக்கா மாதிரியான முதலாளித்துவ அரசுகளோ தனி மனித சுதந்திரத்தை பேணி பாதுகாக்கின்றன. கருத்து சுதந்திரத்திற்கு முழு ஆதரவு தருகின்றன, வெளிப்படையான நிர்வாகம் நடத்துகின்றன’ என தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் செய்து வந்தன மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள்.
ஆனால், ஜனநாயகம் என்று சொல்லப்படும் முதலாளித்துவ அமைப்பில் அரசு மேலும் மேலும் உளவு பார்க்கும் வேலையை அதிகரித்து வருகிறது. தமது நலன்களை பாதுகாப்பதற்காக, தாம் போலியாக முன் வைக்கும் கருத்துரிமை, தனி மனித சுதந்திரம் போன்றவற்றை வெளிப்படையாக பலி கொடுக்கின்றன முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள். ஸ்னோடன் போன்ற நேர்மையான குடிமக்கள் இந்த போலித்தனத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் போது தேள் கொட்டிய திருடன் போல விழிக்கிறது அமெரிக்க அரசு.
- ஆதவன்
Tuesday, 28 May 2013
திருமண சான்றிதழ் மற்றும் சர்டிபிகேட் எதுவேண்டுமானாலும் ஆன்லைனில் வாங்கலாம்
To get your EC copies, Marriage Certificates,Certified Documents,Chit, Society Documents, Land Value Guidelines in ONLINE or HOME DELIVERY BY COURIER from Government for Rs 1 and Rs 25.
நல்ல செய்தி, பொதுவாகவே ஈஸீ(EC - Encumbrance Certificate) எனப்படும் என்கும்பரன்ஸ் சர்டிஃபிக்கட் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆஃபிஸுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம். இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?
ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு. இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர்,கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி ஆலுவுலகங்களூக்கு இது பொருந்தும். அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.
அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்க்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.
அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது
உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப்பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும் (2012 வரை அப்டேட் செய்யபட்டது)
Links to extract EC in English - http://www.tnreginet.net/
Links to extract EC in Tamil - http://www.tnreginet.net/
Links to extract Registered Documents -
http://www.tnreginet.net/
Links to extract Marriage Certificate
http://www.tnreginet.net/
Links to CHECK Registered Chit Companies - http://www.tnreginet.net/
Links to CHECK Registered Society - http://www.tnreginet.net/
Links to CHECK the Land Value Guideline (updated till 2012)
http://www.tnreginet.net/
Please SHARE if the info is worth enough...........
Sunday, 26 May 2013
தகவல் அறியும் உரிமை சட்டம்
அஸ்ஸலாமு அழைக்கும்,
நம் சகோதரர்கள் அனைவரும் இந்த தகவல் அறியும் சட்டத்தை அறிந்து கொள்ள ஏதுவாக இந்த சட்டம் குறித்த பயனுள்ள தமிழ் விளக்க புத்தகத்தை (PDF வடிவில்) தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பை சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .
Monday, 20 May 2013
மோடி பலூனை ஊதுவது யார்?
தலைவனுக்காகக் காத்திருக்கும் தேசம், மோடிக்காகக் காத்திருக்கும் இந்தியா, மோடி தயார்! இந்தியா தயாரா? இப்படி ஊதிப் பெருக்கப்படும் மோடி பலூனுக்குக் காற்று கொடுப்பவர்கள் யார்? இந்தியத் தொழில் துறை மோடியைத் தூக்கிவைத்துக் கொண்டாடக் காரணம் என்ன?
ஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கும் அந்த உண்மையைத் தலைமைத் தணிக்கைக் கணக்காயர் அலுவலகம் (CAG) வீதிக்குக் கொண்டுவந்து இருக்கிறது.லஞ்சம், ஊழல் மற்றும் விதிமீறல் காரணங்களால் 2009 - 2011 இரு நிதியாண்டுகளில் மட்டும் ரூ. 17 ஆயிரம் கோடி குஜராத் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்கிறது தலைமைத் தணிக்கைக் கணக்காயரின் அறிக்கை. அரசின் இந்த இழப்புகளைப் பெரும் பகுதி ஏப்பம் விட்டு செரித்திருப்பவை பெருநிறுவனங்கள். குஜராத் மாநில பெட்ரோநெட் நிறுவனத்துக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் இடையேயான எரிவாயு உடன்படிக்கையில் செய்யப்பட்ட விதிமீறல்களால் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 52.27 கோடி பலன் அடைந்துள்ளது. இதேபோல, மாநில அரசின் குஜராத் யுர்ஜா விகாஸ் நிகாம் நிறுவனம், அதானி பவர் நிறுவனத்துடன் செய்துகொண்ட மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட திமீறல்களால், அதானி நிறுவனம் ரூ.160.26 கோடி பலன் அடைந்துள்ளது. சூரத்தில் எஸ்ஸார் உருக்கு நிறுவனம் ஆக்கிரமித்திருந்த 7.24 லட்சம் சதுர மீட்டர் நிலத்தை சதுர மீட்டர் ரூ. 700 என்கிற மட்டி விலைக்கு எஸ்ஸார் நிறுவனத்துக்கே உரித்தாக்கி இருக்கிறது மோடி அரசு. இதேபோல், ஃபோர்டு இந்தியா, லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனங்களுக்கு அரசு நிலத்தைக் கொடுத்ததிலும் விதிமீறல்கள் நடந்திருக்கின்றன என்கிறது அந்த அறிக்கை.
ஒரு மாநில அரசு மீது ரூ. 17 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு குற்றஞ்சாட்டப்படுவது பெரிய செய்தி. அதுவும் கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்றும் தலைசிறந்த நிர்வாகி என்றும் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் ஒருவர் மீதான நாட்டின் உயர்ந்த தணிக்கை அமைப்பின் இந்தக் குற்றச்சாட்டு பெரிய அளவில் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேசிய ஊடகங்கள் இந்தச் செய்தியை இரு பத்திகளுக்குள் அடக்கம் செய்தன.
மோடி அரசு மீதான குற்றச்சாட்டுகள் புதிதல்ல. அதானி குழுமத்துடன் மோடி அரசுக்குள்ள தொடர்புகள் தொடர்ந்து விவாதத்தில் இருக்கின்றன. கடந்த ஆண்டு இறுதியில் அரவிந்த் கேஜ்ரிவால் அம்பலப்படுத்திய குஜராத் மாநில பெட்ரோலிய நிறுவனம் - ஜியோ குளோபல் நிறுவனம் இடையேயான ஒப்பந்தம் கிட்டத்தட்ட இரண்டாம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஞாபகப்படுத்தக் கூடியவை (ஒப்பந்தத்தின்போது வெறும் 64 டாலர் - அன்றைய மதிப்பில் ரூ. 3200 சொத்து மதிப்பைக் கொண்ட ஜியோ குளோபல் நிறுவனம் பின்னர் 10 ஆயிரம் கோடி நிறுவனமானதை அம்பலப்படுத்தினார் கேஜ்ரிவால்). ஆனால், ராபர்ட் வதேராவின் முறைகேடுகளைப் புரட்டி எடுத்த ஊடகங்கள் மோடியின் செய்தியை அன்றோடு அடக்கம் செய்தன.
நான் வளர்ச்சியின் பிரதிநிதி என்கிறார் மோடி. ஆனால், எது வளர்ச்சி என்பதற்கு நம்மிடம் சரியான வரையறைகள் இல்லை. குஜராத் அரசு சமூகத் துறைகளில் ஒழுங்காகச் செயல்படவில்லை என்பது தொடர்ந்து அவ்வப்போது வெவ்வேறு புள்ளிவிவரங்கள் வாயிலாக வெளிவந்துகொண்டிருக்கும் ஓர் உண்மை. 2011-ல் வெளியான மத்தியத் திட்டக் குழு அறிக்கை குஜராத் மாநிலத்தில் நிலவும் வறுமையை வெளிக்கொண்டுவந்தது - மாநிலத்தில் 44.6 சதவிகிதக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்கள். 2012-ல் வெளியான தலைமைத் தணிக்கைக் கணக்காயர் அறிக்கை தண்ணீர் விஷயத்தில் அரசு காட்டும் அலட்சியத்தைப் பட்டியலிட்டது. “குடிநீர்க் கொள்கை சரியாக வரையறுக்கப்படவில்லை. தேசிய நதி நீர்ப் பாதுகாப்புத் திட்டம், எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆற்றுநீர் மாசுபடுவது சம்பந்தமாக அரசு அக்கறை காட்டவில்லை. சபர்மதி ஆற்று நீரைத் தூய்மைப்படுத்தும் திட்டமும் முறையாகக் கண்காணிக்கப்படவில்லை” என்று கடந்த ஆண்டு அறிக்கை சொன்னது. குஜராத்தில் நிலத்தடி நீர்மட்டம் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 6 மீட்டர் கீழே செல்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன் 30 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் கிடைத்த இடங்களில், இப்போது தண்ணீருக்கு 152 மீட்டருக்கும் கீழே செல்ல வேண்டியிருக்கிறது. அரசு இந்தப் பிரச்சினையில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் சூழலியலாளர்கள். முந்தைய அரசுகளைப் போலவே இந்தப் பிரச்சினையை மோடி அரசும் அலட்சியப்படுத்துகிறது.
குஜராத் மக்கள்தொகையில் 10 சதவிகிதம் வகிக்கும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக்கூட கடந்த தேர்தலில் மோடி நிறுத்தவில்லை என்பது இந்தக் கட்டுரைக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருக்கலாம். ஆனால், நகர்ப்புற முஸ்லிம்கள் ஏழைகளாக உலவும் 4 மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று என்பது இந்தக் கட்டுரையோடு தொடர்புடையது. மோடி தன்னுடைய வளர்ச்சியின் அடையாளமாகக் கொண்டாடிய சனாந்த் தொகுதியில் (டாடா நானோ ஆலை அமைக்கப்பட்ட இடம்) பாஜக தோற்றது இந்தக் கட்டுரையோடு தொடர்புடையது.
குஜராத்தை வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பேசும் பலரும் தட்டாமல் குறிப்பிடுவது குஜராத்தின் எரிசக்தித் துறை வளர்ச்சி. உண்மையில், மோடி அரசின் பல முறைகேடுகள் குடிகொண்டிருக்கும் துறை இது. மின்சார உற்பத்தியில் குஜராத் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று குரல் கொடுப்போர் பலர் பேசாத ஒரு விஷயம், குஜராத்தின் மொத்த மின் உற்பத்தித் திறனான 16,945 மெகா வாட்டில் தனியார் பங்களிப்பு மட்டும் 6,864 மெகாவாட் என்பது. அதாவது, கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு தனியாருடையது. தவிர, நாட்டிலேயே மின்சாரத்தை அதிக விலைக்கு விற்கும் மாநிலங்களில் ஒன்று குஜராத். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கான குறைந்தபட்ச தேவை 50 யூனிட். குஜராத்தில் வறுமைக்கோட்டுக் கீழ் வாழும் ஒரு குடும்பமே இந்த மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 2.95 கொடுக்க வேண்டும். தமிழகத்துடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட மூன்று மடங்கு இது (தமிழகத்தில் ஒரு யூனிட் ரூ. 1.10) . நாட்டிலேயே சூரிய மின் சக்தியை முன்னெடுப்பதிலும் குஜராத் முன்னணியில் இருக்கிறது. ஆனால், வால்மார்ட்டும் மான்சாண்டோவும் அந்தச் சூரிய மின் சக்தி உபகரணங்களின் பின்னணியில் இருக்கின்றன; சூழலுக்குப் பெரும் நஞ்சான கேட்மியம் டெலுராய்டைக் காற்றிலும் நிலத்திலும் நீரிலும் எதிர் காலத்தில் குஜராத் சுமக்க இந்தத் திட்டம் வழிவகுக்கும் என்கிறார் மின்சாரம் தொடர்பாகத் தொடர்ந்து பேசி வரும் சமூகச் செயல்பாட்டாளர் காந்தி. குஜராத் தொடர்பாக ஊதப்படும் ஒவ்வொரு துறையின் வளர்ச்சியின் பின்னணியிலும் இப்படி சங்கடப்படுத்தும் உண்மைகள் உண்டு. எப்படி ஏனைய இந்திய மாநிலங்களின் வளர்ச்சிக் கதைகளுக்குப் பின்னணியிலும் சங்கடப்படுத்தும் உண்மைகள் உண்டோ அப்படி. ஆனால், குஜராத்தில் மட்டும் இந்தச் சங்கதிகள் ஒரு நாள் செய்தியோடு அடக்கமாகிவிடுகின்றன. ஏன்?
நம்முடைய முதலாளிகளுக்கு இன்று மோடி தேவைப்படுகிறார். மன்மோகன் சிங் அரசு பன்னாட்டு நிறுவனங்களின் கையாள் என்று நாம் குற்றஞ்சாட்டுகிறோம், ஆனால், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் மன்மோகன் சிங் போதுமானவராக இல்லை அல்லது அவருடைய தேவைக்கான காலம் முடிந்துவிட்டது. இப்போது அவர்களுடைய தேவை இன்னும் துரிதமாகவும் துணிச்சலாகவும் சுதந்திரமாகச் செயல்படும் ஒருவர்தான். முக்கியமாக, இந்தியாவில் முதலீடு செய்ய சட்டரீதியாக மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் சின்னச் சின்ன நடைமுறைகளைக்கூட உடைத்து எறியவும் இந்திய வனங்களில் புகுந்து சூறையாட ஏதுவாக அங்குள்ள எதிர்ப்புகளை வேர் அறுக்கவும் ஓர் ஆள் தேவைப்படுகிறார். இந்தியாவில் செம்மையான செயல்பாட்டுக்கு கார்ப்பரேட் துறைதான் முன்னோடி என்பதை வெளிப்படையாகச் சொல்லும் மோடி அதற்குச் சரியான தேர்வாக இருப்பார் என்று அவர்கள் நம்புகிறார்கள். குஜராத்தில் ஒரு நிறுவனம் நினைத்தவுடன் தொழில் தொடங்குவதற்கான எல்லாச் சாத்தியங்களையும் ஓடியாடிச் செய்யும் மோடி அதற்குப் பொருத்தமானவர் என்று அவர்களும் நம்புகிறார்கள். மத்திய அரசு இப்போது முன்மொழிந்திருக்கும் தேசிய முதலீட்டு வாரியத்துக்கு முன்னோடி மோடியின் குஜராத் பாணிதான். உங்கள் ஊரில், ரூ. 1000 கோடிக்கு மேல் ஒரு தொழிலை ஆரம்பிப்பது என்று ஒரு பன்னாட்டு நிறுவனம் முடிவெடுத்துவிட்டால் போதும். உள்ளூர் மக்கள் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு எதைப் பற்றியும் அந்நிறுவனம் கவலைப்பட வேண்டியது இல்லை. தேசிய முதலீட்டு வாரியத்தின் அனுமதி மட்டும் அதற்குப் போதும். யாரும் அந்த நிறுவனத்தைக் கேள்வி கேட்க முடியாது . . . உள்ளூர் மக்களில் தொடங்கி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் வரை எவரும் கேள்வி கேட்க முடியாது. இப்படி ஓர் அணுகுமுறையைத்தான் அரசிடமிருந்து எல்லா விஷயங்களிலும் முதலாளிகள் எதிர்பார்க்கிறார்கள். காங்கிரஸ் அதைச் செய்கிறது. ஆனால், தாமதமாகச் செய்கிறது. யோசித்து இழுத்தடித்துச் செய்கிறது. முதலாளிகள் துணிச்சலான துரித சேவையை விரும்புகிறார்கள். காங்கிரஸுக்குக் காலம் கடந்து கொண்டிருக்கிறது.
இந்தக் கட்டுரையை எழுதும் நாளில் குஜராத்தின் கப்ரதா பகுதி கிராம மக்கள் அதிகாலை 3.30 மணிக்கே எழுந்து 5 கி.மீ. தூரம் நடந்து வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்கள் - இரு குடங்கள் குடிநீருக்காக. “கப்ரதா பகுதியில் உள்ள முப்பது சொச்ச கிராம மக்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. எவ்வளவோ பேசிப் பார்த்தாயிற்று அரசாங்கத்திடம்; ஒன்றும் நடக்கவில்லை’’ என்கிறார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான ஜிட்டு சௌத்ரி. மக்கள் தண்ணீருக்காகக் கிடையாய்க் கிடக்கிறார்கள். அவர்கள் கிடக்கட்டும்! முதலாளிகள் முடிவெடுத்துவிட்டார்கள். மோடிக்காகக் காத்திருக்கிறது இந்தியா!
நன்றி: சமஸ், | படம்: Reuters
Saturday, 18 May 2013
தாய் நலம்; சேய்...?
பிறந்த ஒரு நாளுக்குள் இறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் ஓராண்டுக்கு 3,09,000 ஆக உள்ளது என்கின்றது அன்னையர் தினத்தையொட்டி வெளியான ஓர் ஆய்வு அறிக்கை. உலக அளவில் பார்க்கும்போது, பிறந்த 24 மணி நேரத்தில் இறக்கும் குழந்தைகளில் 29% இந்தியாவில்தான் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஒரு தாய்க்கு, கருவுற்ற மூன்றாவது மாதம் முதலாகவே முறையான ஆலோசனை அளித்து, வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கருவளர்ச்சிக்குத் தேவையான சத்துணவு வழங்கும் திட்டம் எல்லா மாநிலங்களிலும் பல வகையாக, பல பெயர்களில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், இவை நல்லமுறையில் செயல்படுத்தப்படவில்லை என்பதைத்தான் இந்த மரணங்கள் உணர்த்துகின்றன.
இந்தியாவில் பச்சிளம் குழந்தைகள் (பிறந்த 7 நாள்களுக்குள்) மரணமடைவது மத்தியப் பிரதேசத்தில் அதிகமாக இருக்கிறது. ஆயிரம் குழந்தைகளில் 32 பச்சிளம் குழந்தைகள் இறக்கின்றன. அடுத்த நிலையில் உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் அதிகம்.
தமிழ்நாட்டில் இத்தகைய மோசமான சூழ்நிலை இல்லை என்பதற்காக நாம் மகிழ்ச்சி அடையலாம். தமிழ்நாட்டில் பச்சிளம் குழந்தைகள் மரணம் ஆயிரத்துக்கு 11. ஆனாலும் நம்மைவிட கேரள மாநிலம் சிறப்பான இடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் ஆயிரத்தில் 5 பச்சிளம் குழந்தைகள் மட்டுமே இறக்கின்றன.
அதிக மக்கள்தொகை கொண்ட இந்திய நாட்டில் இத்தகைய மரண எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என்று சமாதானமாகச் சொல்லப்பட்டாலும்கூட, இந்தியாவில் கருவுற்ற தாய்மார்களுக்குச் சரியான சத்துணவு, ஆலோசனை, சிகிச்சை, முறையான பேறுகால மருத்துவம் ஆகியன அளிக்கப்படுவதில் ஏற்படும் குறைபாடுகள்தான் இதற்கான முழுமுதல் காரணம்.
இத்தகைய மரணங்கள் வீட்டுக்குள் பிரசவம் நடைபெறுவதால்தான் அதிக எண்ணிக்கையில் நிகழ்கின்றன என்றும், கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரசவம் நடைபெறும்போது, குழந்தைக்கும் தாய்க்கும் டாக்டர்கள் உடனடியாகக் கவனம் செலுத்துவதால் இத்தகைய மரணங்கள் பெருமளவு குறையும் என்றும் உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதனால், மகப்பேறு மருத்துவமனைகள் நகராட்சி அளவில் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன. தாய்மார்களை மருத்துவமனைக்கு அழைத்துவரும் பணியை கிராம சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டார்கள். இந்தப் பணியில் தொய்வு இருக்கிறது என்பதைத்தான் இத்தகைய மரணங்கள் உணர்த்துகின்றன.
2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, மருத்துவமனையில் பிரசவம் நடைபெறுவது ஒடிசாவில் 42%, பிகாரில் 23%, அசாமில் 36%, உத்தரப்பிரதேசம் 18%, மத்தியப்பிரதேசம் 37%, ஜார்க்கண்ட் 7%, சத்தீஸ்கர் 30% என்பதாக இருந்தபோது, தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் பிரசவம் நடப்பது 79% ஆக இருந்தது. இருப்பினும் கேரளம் நம்மைவிட முந்திக்கொண்டது. அங்கே 99% பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்துமாவு வழங்கும் பணியில் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள். அரசு மருத்துவமனையில் ஆலோசனை பெறும், பிள்ளை பெறும் தாய்மார்களுக்கு தமிழக அரசு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ், ரூ.12,000 வழங்குகிறது. பிரசவத்துக்கு முன்பாக ரூ.4,000மும் பிரசவத்துக்குப் பிறகு இரு கட்டங்களில் தலா ரூ.4,000மும் வழங்கப்படுகிறது.
ஆனால், தற்போது தமிழ்நாட்டில் நடைபெறும் பச்சிளம் குழந்தைத் திருட்டு சம்பவங்களைப் பார்க்கும்போது, மருத்துவமனைப் பிரசவ எண்ணிக்கை குறைந்து போகுமோ என்கின்ற அச்சம் ஏற்படுகிறது.
கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்கள் தற்போது அரசு மருத்துவமனையைத் தேடிவரக் காரணம், அரசு வழங்கும் நிதியுதவி மற்றும் வளைகாப்புப் பலன்கள், பெண்குழந்தை பிறந்தால் கிடைக்கும் அரசு நிதியுதவி ஆகியவற்றை இழக்கக்கூடாது என்பதற்காகத்தான். ஆனால், அரசு மருத்துவமனையில் குழந்தைகள் திருடுபோகும் என்றாலோ, எலிகள் கடிக்கும் என்றாலோ அவர்கள் அரசு மருத்துவமனையைத் தவிர்க்கவே முயலுவார்கள்.
ஆண் குழந்தை பிறந்தால் ரூ.1,000 பெண் குழந்தை பிறந்தால் ரூ.500 லஞ்சம் கேட்பதும், தராவிட்டால் குழந்தையை மாற்றிவிடுவோம் என்று மிரட்டுவதும் பல அரசு மருத்துவமனைகளில் இருப்பதாகப் புகார்கள் உள்ளன. ஒரு சில ஊழியர்களின் தவறுகள் பரவலாக ஏழை எளியவர்கள் மத்தியில் அரசு மருத்துவமனை என்றாலே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அவர்களுக்குத் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வசதி இல்லை. ஆகவே மீண்டும் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் நிலை ஏற்படுமோ என்ற சூழல் உள்ளது. அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு, முறையாக நிர்வாகம் செய்யப்பட்டால்தான் இந்த பயம் அகலும்.
தமிழ்நாட்டில் மருத்துவமனைப் பிரசவங்கள், கேரளத்தைப்போல 99% ஆக உயர வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மகப்பேறு மருத்துவமனைகளில் நிலவும் குழந்தைத் திருட்டு, லஞ்சம், எலி, நாய்கள் தொல்லை இல்லாத நிலையை உறுதி செய்ய வேண்டும். தாய்மை உணர்வோடு பிரசவங்கள் அங்கே நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
உலக அளவில் மூன்றில் இரண்டு சிசு மரணம் பத்து நாடுகளில் நடைபெறுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தியாவும், சீனாவும்கூட இந்தப் பட்டியலில் இருப்பதுதான் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. பிரசவத்தில் குழந்தைகள் மரணமடைவதைத் தடுப்பது, தாய் சேய் நலத்தைப் பாதுகா
ப்பது போன்ற பிரச்னைகளைக்கூட முழுமையாகவும் முறையாகவும் செய்ய முடியாவிட்டால், பொருளாதார வல்லரசாக மாறுவதால் என்ன பயன் இருக்க முடியும்?
நன்றி:ALAVUDEEN
16:10



