ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Monday 30 June 2014

கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்

( கடந்த 13.06.2014 அன்று நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சியில் ஆற்றிய உரையிலிருந்து)

தற்போதைய சூழலில் நமது சமூகம் எதிர்நோக்கியுள்ள அபாயங்களுக்கு காரணம்
எதிரிகள் அல்ல. கருத்து வேறுபாடுகளால் நாம் பிளவுண்டதுதான் காரணமாகும்.
இந்த மார்க்கம் வெற்றியடையும், அனைத்து இடங்களையும் சென்றடையும் என்பதை
திருக்குர்ஆன் மற்றும் ஹதீத்களின் மூலமாக நாம் அறிந்துக் கொள்ள முடியும்.

9:32 தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள்
விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன்
ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.

61:9 (இணை வைத்து வணங்கும்) முஷரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா
மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும்,
சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான்.

இரவு,பகல் சென்றடையும் அனைத்துப் பகுதிகளையும் இம் மார்க்கம் சென்றடையும்
என்று நபிகள் நாயகம் ஸல் தெரிவித்தார்கள். அவ்வாறே அவர்கள் கூறும்போது
அல்லாஹ் எனக்கு உலகினைச் சுருக்கி காண்பித்தான் -அதனுடைய அனைத்துப்
பிரதேசங்களிலும் இஸ்லாம் இருப்பதைக் கண்டுக் கொண்டேன் எனக் கூறினார்கள்.

அவ்வாறே இந்த உம்மத்தினை பஞ்சத்தினாலோ அல்லது எதிரிகளினாலோ முற்றிலுமாக
அல்லாஹ் அழித்துவிட மாட்டான் எனவும் அல்லாஹ் நபிகள் நாயகம் ஸல்
அவர்களுக்கு வாக்களித்துள்ளான். எனவே அதுவத் தஃலியா - நமக்குள் உள்ள
பகைமைதான் பயப்பட வேண்டியவை என்பதை இது உணர்த்துகிறது.பிளவுகள்தான்
வேதனைகளைக் கொண்டு வரும்.

இந்ததலைப்பினை நாம் மூன்றாக பிரிக்கலாம்.

1. பிரிவின் வகைகள் - அன்வாவுல் ஹிலாப்
2. பிரிவின் காரணங்கள் - அஷ்பாவுல் ஹிலாப்
3. பிரிவின் ஒழுக்கங்கள் - அதபுலி ஹிலாப்

பிரிவின் வகைகளை கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்

a) அடிப்படைகளில் ஏற்படும் கருத்து வேறுபாடு
b) மார்க்கச் சட்டங்களில் ஏற்படும் கருத்து வேறுபாடு

11:118 உம் இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே
சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான். (அவன் அப்படி ஆக்கவில்லை.) எனவே, அவர்கள்
எப்போதும் பேதப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இந்த வசனத்திற்கு விளக்கமாக இமாம் ஷாதிபி ரஹ் அவர்கள் கீழ்கண்டவாறு
மனிதர்களை வகைப்படுத்துகிறார்கள். அடிப்படை விசயங்களில் கருத்து வேறுபாடு
கொண்டவர்கள் இஸ்லாத்தினை விட்டு வெளியேறியவார்கள் என அவர்கள்
குறிப்பிடுகிறார்கள்.

மனிதர்களை மூன்று வகையினராவர். முதலாம் வகையினர் முவஹ்ஹிதுகள் அல்லது
மூமின்கள். இதில் தங்களுக்கு தாங்களே அநீதம் இழைப்பவர்கள்,
நடுநிலையாளர்கள் மற்றும் நன்மையில் விரையக் கூடியவர்கள் ஆகியோர்
அடங்குவர். ஆய்ஷா ரழி அவர்களிடம் "தங்களுக்கு தாங்களே அநீதம்
இழைப்பவர்கள் யார்" எனக் கேட்ட போது அவர்கள் கூறினார்கள் - நானும்,
உங்களைப் போன்றவர்களும் என பதிலுரைத்தார்கள். அவ்வாறான பணிவினை அல்லாஹ்
நமக்குத் தந்தருள்வானாக...

இரண்டாம் வகையினர் காபிர்கள் மற்றும் முஷ்ரிக்குகள் ( இணை வைப்பவர்கள்
மற்றும் இறைவனை மறுப்பவர்கள்). இவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவராக
இருப்பர்.

12:106 மேலும் அவர்கள் இணைவைப்பர்களாக இருக்கிற நிலையிலல்லாமல் அவர்களில்
பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை.

மூன்றாமவர் மிகவும் கெட்டவர்கள், மோசமானவர்கள் - இவர்கள்தான்
முனாபிக்குகள் (நயவஞ்சகர்கள்). நிபாக்குல் அகீதா ( கொள்கையில்
முனாபிக்தனம்) மற்றும் செயல்களில் முனாபிக்தனம் ஏற்படலாம். கொள்கையில்
முனாபிக்காக உள்ளவர்கள் தோற்றத்தில் முஸ்லிம்களாக இருப்பார்கள், ஆனால்
உள்ளத்தில் காபிர்களாக இருப்பார்கள். அமல்களில் முனாபிக் உள்ளவர்களின்
குணங்கள் அபுஹூரைரா (ரழி) மற்றும் அப்துல்லாஹ் பின் உமர் (ரழி)
ஆகியவர்கள் அறிவிக்கும் ஹதீத்களின் அடிப்படையில் கீழ்கண்டவாறு இருக்கும்.

- பேசினால் பொய் பேசுவார்கள்
- நம்பினால் மோசடி செய்வார்கள்
- வாக்களித்தால் மாறு செய்வார்கள்
- அமானிதங்களை மோசடி செய்வார்கள்
- விவாதங்களின் போது வரம்பு மீறி நடந்துக் கொள்வார்கள்.

அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.



மார்க்க சட்டங்களில் கருத்து வேறுபாடு

இந்தக் கருத்து வேறுபாடுகளினால் பிளவுபடக் கூடாது என அல்லாஹ்
எச்சரித்துள்ளான். இவ்வாறு பிளவுபட்டால் நமது பலம் குன்றிவிடும்.

8:46 இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் -
நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி
விடுவீர்கள். உங்கள் பலம் குன்றிவிடும். (துன்பங்களைச் சகித்துக் கொண்டு)
நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன்
இருக்கின்றான்.

3:105 (இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார்
தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ,
அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள். அத்ததையோருக்குக் கடுமையான
வேதனை உண்டு.

6:159 நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி
பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன்
(நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம்
அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில்
அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறுவது போல் அதிகளவு மக்கள் இருந்தாலும்
வெள்ள நுரையினைப் போல் சக்தியற்று இருப்போம்.


கருத்து வேறுபாடுகளினால் சமூகம் பிளவுண்டால், சகோதரத்துவம் மற்றும்
ஒற்றுமை என்பதற்கே இடமில்லை என இப்னு தைமியா ரஹ் அவர்கள்
குறி்ப்பிடுகிறார்கள். எனவே நமக்குள்ளே உள்ள கருத்து முரண்பாடுகளினால்
நாம் பிளவுபட்டு விடக் கூடாது.

பல்வேறு ஆசிரியர்களைப் பின்பற்றுவதால், அறிஞர்களின் கருத்துக்களை
பின்பற்றுவதால் நமக்குள் கருத்து வேறுபாடுகள் வருகிறது என்றால் ஒரே
ஆசிரியரை, நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் பின்பற்றிய ஸஹாபாக்கள்
மத்தியிலும் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளனவே ஏன்?

காரணங்கள்

1. மனிதனின் இயற்கை குணம் - ஒவ்வொரு மனிதனின் உடல், நிறம், ஏன் கைரேகை
கூட வித்தியாசப்பட்டு இருப்பதைக் காண்கிறோம்.
30:22 மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும். உங்களுடைய
மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய
அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றறிந்தோருக்கு
அத்தாட்சிகள் இருக்கின்றன.
அவ்வாறே தனித்தனிக் கருத்துக்கள் கொள்வதும் மனிதனின் இயற்கைக் குணமாகும்.

2. ஆதாரங்கள் சென்றடையாமல் இருப்பது

ஒரு மார்க்கச் சட்டத்தில் அனைத்து அறிஞர்களுக்கும் அனைத்து ஆதாரங்களும்
கிடைத்திருக்கும் எனச் சொல்லிட முடியாது. சில அறிஞர்களுக்கு ஆதாரங்கள்
கிடைத்திடாமல் இருந்திருக்கலாம். எந்த அறிஞரிடம் ஒட்டு மொத்தமான ஸஹீஹான
ஆதாரங்கள் அனைத்தும் இருக்கின்றன என ஒருவர் நம்பினால் அவர் பாவத்தில்
இருக்கின்றார் என இப்னுதைமியா ரஹ் அவர்களின் கூற்று இங்கு
கவனிக்கத்தக்கது.

ஸஹாபாக்களுக்கு அனைத்து ஆதாரங்களும் முழுமையாக கிடைக்கவில்லை என்பதை
பார்க்கிறோம். ஷாம் தேசத்தில் காலரா நோய் ஏற்பட்ட போது உமர் ரழி
அவர்களும் அபு உபைதா ரழி அவர்களும் இரண்டு கருத்துக்களை
தெரிவிக்கின்றனர். ஷாம் தேசத்திற்கு போக வேண்டாம் என உமர் ரழி சொன்னபோது,
அபு உபைதா ரழி அவர்கள், அல்லாஹ்வின் கதரை விட்டு விரண்டோடிப்
போகப்போகிறீர்களா என கேட்டார்கள். அப்போது உமர் ரழி அவர்கள் ஆம், ஒரு
கதரிலிருந்து இன்னொரு கதருக்கு செல்கிறோம் எனத் தெரிவித்தார்கள். அப்போது
அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ப் ரழி அவர்கள் தெரிவித்தார்கள் - நபிகள்
நாயகம் ஸல் "காலரா நோய் ஒரு ஊரில் இருந்தால் அங்கிருப்பவர்கள் வெளியேற
வேண்டாம் என்றும், வெளியே இருப்பவர்கள் அந்த ஊருக்கு செல்லாதீர்கள் "
எனச் சொல்லியிருப்பதை கேட்டுள்ளேன் எனத் தெரிவித்தார்கள். இந்த ஹதீத்
இருப்பது அப்போதுதான் உமர் ரழி மற்றும் அபு உபைதா ரழி ஆகியோருக்குத்
தெரிய வருகிறது.

3. புரிந்துக் கொள்வதில் வேறுபாடு

ஹதீத்கள் மற்றும் குர்ஆன் வசனங்களைப் புரிந்துக் கொள்வதிலும் கருத்து
வேறுபாடு வரும் வாய்ப்புள்ளது. பனூ குரைழா என்ற யூதக் குழுவிற்கு எதிராக
படையை அனுப்பும்போது, நபிகள் நாயகம் ஸல் அவர்கள், அங்கு செல்லும் வரை
அஸர் தொழுகையைத் தொழ வேண்டாம் என கட்டளை பிறப்பித்தார்கள். அஸர்
தொழுகையின் வக்த் முடியும் நிலை வரும்போது தோழர்களில் ஒரு சாரார், நாம்
விரைவாகச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்
அவ்வாறு கட்டளையிட்டார்கள், ஆனால் இப்போது வக்த் முடிவடையப் போவதால்
தொழுகையை தொழ வேண்டும் என தொழுதார்கள். மற்றொரு சாரார், அது தூதரின்
கட்டளை என்பதால் வக்த் முடிந்தபிறகு தொழுதார்கள்.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இரு சாராரின் செயல்களையும் அங்கீகரித்ததோடு
மட்டுமல்லாது, பனூ குரைழாவுக்கு எதிரான போரில் இரு சாராரையும் ஒரே
அணிவகுப்பில் நிறுத்தினார்கள்.

அவ்வாறே நஸ்ர் அத்தியாயம் எதைப் பற்றிக் குறிப்பிடுகிறது என உமர் ரழி
அவர்கள் தோழர்களிடம் வினவியபோது, பெரும்பாலான தோழர்கள் அது மக்கா
வெற்றியினைக் குறிப்பதாக தெரிவித்தனர். ஆனால் இப்னு அப்பாஸ் ரழி அவர்கள்
அது, நபிகள் நாயகம் ஸல் அவர்களின் மரணத்தினைக் குறிப்பதாக
தெரிவித்தார்கள். இந்த கருத்தினை உமர் ரழி ஏற்றுக் கொண்டார்கள்.

அவ்வாறே நபிகள் நாயகம் ஸல் மிம்பரில் உரையாற்றும்போது, ஒரு அடியார்
மறுமையினைத் தேர்ந்தெடுத்து உலகஅலங்காரத்தினை விட்டு விட்டார் எனக்
கூறியபோது அபுபக்கர் சித்திக் ரழி அவர்கள் மட்டும் அழுகிறார்கள்.
அழுகையின் காரணத்தினைக் கேட்டபோது, இது நபிகள் நாயகம் ஸல் அவர்கள்
மரணத்தி்னை தேர்ந்தெடுக் கொண்டார்கள் என்பதைக் குறிக்கிறது என்று
விளக்கியபோதுதான் மற்ற தோழர்கள் அந்தக் கருத்தினைப் புரிந்துக்
கொண்டார்கள்.

4. ஆதாரம் நீக்கப்பட்டு விட்டது என்பது தெரியாமல் இருப்பது

ஒரு தடவை தொழுகையில் ஒரு தோழர் தும்மிய போது முஆவியா ரழி அவர்கள்
யர்ஹமுகல்லாஹ் எனக் கூறுகிறார்கள். அப்போது சில தோழர்கள் அவரைக்
கோபத்துடன் பார்த்தபோது "என்ன ஆனது உங்களுக்கு' எனக் கேட்கிறார்கள்.
அப்போது பக்கத்திலுள்ளவர் அவரைத் தட்டியதும் அமைதியாகிவிட்டார்.
தொழுகையில் பேசக் கூடாது என்று சட்டம் அருளப்பட்டது தெரியாதக்
காரணத்தினால் முஆவியா ரழி அவர்கள் தொழுகையில் பேசினார்கள்.

தொழுகை முடிந்ததும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள், முஆவியா ரழி அவர்களிடம்
அமைதியாக தோழரே, தொழுகை என்பது தஸ்பீஹ், தக்பீர் மற்றும் திலாவதுல்
குர்ஆன் ஆகும். எனவே தொழும்போது பேசாதீர்கள் எனத் தெரிவித்தார்கள்.
இதனைக் குறிப்பிட்டு முஆவியா ரழி அவர்கள், நபிகள் நாயகம் ஸல் போன்ற ஒரு
சிறந்த ஆசிரியரை இதற்கு முன்பும் யாரும் கண்டதில்லை இனியும்
காணப்போவதில்லை என சிலாகித்துக் கூறினார்கள்.

அவ்வாறே மது ஹராமாக்கப்பட்ட சட்டம் தெரியாத தோழர் தோல்பையில் நபிகள்
நாயகம் ஸல் அவர்களிடம் மதுவினைக் கொடுக்கிறார். மது குடிப்பது ஹராம்
என்றுத் தெரிந்த பின்னர் அதனை நான் விற்று விடுகிறேன் எனச் சொன்னபோது,
அதனை விற்பதும் ஹராம் என நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.

அல்லாஹ்வின் அருளினால் அறிஞர்களைக்கொண்டு அல்லாஹ் ஹதீத்களை ஒன்று சேர்த்தான்.

5. மறதி

மறதி என்பது அனைத்து மனிதருக்கும் உள்ளதாகும். நபிகள் நாயகம் ஸல் அவர்களே
தொழும்போது குர்ஆனில் ஒரு வசனத்தை மறந்து, அடுத்த வசனத்தினை ஓதினார்கள்.
தொழுகை முடிந்ததும் தோழர்கள் அதனைச் சுட்டிக்காட்டிய போது, உபை ரழி
அவர்களை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உபை அவர்களே நீங்கள் எனக்கு
எடுத்துக் கொடுத்திருக்கக் கூடாதா எனக் கேட்டார்கள்.

இவ்வாறான காரணங்களினால் கருத்து வேறுபாடுகள் வருவது தவிர்க்க
முடியாததாகும். இந்தக் காரணங்கள் அனைத்தும் அறிஞர்களுக்காக
கூறப்படுவதாகும். இஸ்லாத்தினைத் தெளிவாகக் கற்றுணர்ந்தவர்களுக்கு இது
பொருந்தும். நம்மைப் போன்ற சாமானியர்கள் இஸ்லாமியச் சட்டங்களில்
எந்தவிதமான கருத்துக்களும் கூறாமல் இருக்க வேண்டும். கல்வியில்லாதவர்கள்
கருத்து வேறுபாட்டில் மௌனமாகி விட்டால் கருத்து வேறுபாடும் மௌனமாகும்.

நமக்குத் தேவையான பத்வாக்களை தேடிப்பிடித்து கருத்துக் கூறுவது, அதனை
விவாதமாக்குவது, நமக்கு முரண்பாடான கருத்துடையவர்களை தரக்குறைவாகப்
பேசுவது போன்றவற்றிலிருந்து நாம் விலகி விட வேண்டும்.

கருத்து வேறுபாட்டின் ஒழுக்கங்கள்

1. மாற்றுக் கருத்துள்ள மனிதரை மதிப்பது - நமது கருத்துடன் வேறுபாடு
கொண்டுள்ள அறிஞர்களை நாம் மதித்து நடக்க வேண்டும். முன் சென்ற அறிஞர்கள்
தாங்கள் யாருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், அவர்களிடம்
சொல்லும்போது, "நாங்கள் உங்களை நேசிக்கிறோம் - அல்லாஹ்வுக்காக, நாங்கள்
உங்களை மதிக்கிறோம். ஆனால் தங்களின் இந்தக் கருத்தில் எங்களுக்கு
மாறுபாடு உண்டு" என அழகாக எடுத்துரைப்பார்கள். இழிவுபடுத்துவதிலிருந்து
நாம் விலகிக் கொள்ள வேண்டும்.

2. நல்லெண்ணம் கொள்வது - ஒருவர் ஒரு கருத்தினை சொல்லும்போது, நாமாக
அதற்கு தவறான காரணம் கற்பிக்கக் கூடாது. இன்ன ஜமாஅத்தில் இருப்பதால்
இவ்வாறு கூறுகிறார், பணம் வாங்கி விட்டார், வழிகேடர் என எந்த
வார்த்தைகளையும் பயன்படுத்தக் கூடாது.

49:12 முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக்
கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்.
(பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்.
அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில்
எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா?
(இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை
அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக்
கொள்பவன். மிக்க கிருபை செய்பவன்.

3. தனிப்பட்ட ஒரு மனிதரை மட்டு்ம் சார்ந்திருந்து முடிவெடுக்கக் கூடாது.
அவ்வாறு சார்ந்திருப்பது வழிகேட்டின் முதல் அடையாளமாகும். ஷியாக்கள்
இவ்வாறுதான் வழிகேட்டினை அடைந்தார்கள்.

மனிதரை வைத்து சத்தியத்தினை முடிவெடுக்கக் கூடாது, சத்தியத்தினை
வைத்துத்தான் மனிதரை முடிவெடுக்க வேண்டும்.

நாம் பல்வேறு இயக்கங்களாக இருப்பதில் தவறில்லை. நபிகள் நாயகம் ஸல்
அவர்கள் முஹாஜிர்,அன்ஸார் என்ற பெயர்களை அங்கீகரித்தார்கள். ஆனால் ஒரு
தடவை ஒரு சிறிய பிரச்னையில் முஹாஜிர்களே வாருங்கள், அன்ஸார்களே வாருங்கள்
எனப் பிரிந்த போது, அதனைக் கண்டித்து, ஜாஹிலிய்யாவின் இத்தகைய
வார்த்தைகளை விடுங்கள் எனக் கூறினார்கள். எனவே வேறுபாட்டினால் நாம்
பிளவுபட்டு விடக் கூடாது.

நம்மிடம் யாரும் உனது ஷேய்க் யார் எனக் கேட்டால், நபிகள் நாயகம் ஸல் எனக்
கூற வேண்டும். உனது ஜமாஅத் எது எனக் கேட்டால் முஸ்லிம் எனக் கூற
வேண்டும். அல்லாஹ் நம் அனைவரையும் அவனது வழியில் எப்போதும்
ஒன்றிணைப்பானாக...(ஆமீன்)
******அல்லாஹ் மிக்க அறிந்தவன்***********

நன்றி:அலாவுதீன்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR