ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Friday, 12 July 2013

சுவனத்தில் வாசல்கள் திறக்கின்ற​ன!


“உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். வளமான மேன்மையான நகரமும் உண்டு; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்” (சூரா ஸபா:15-வது வசனம்)
சிறந்த மனிதர், சிறந்த சமூகம், சிறந்த தேசம், கருணையான இறைவன் என்ற இஸ்லாத்தின் சித்தாந்தத்தை விவரிக்கும் திருக்குர்ஆன் வசனத்தை தான் மேலே கண்டோம்.
சிறந்த மனிதர்களை உருவாக்குவதுதான் இஸ்லாமிய மார்க்க பாடங்களின் சாராம்சம். மனிதனை சுத்திகரித்து வாழ்க்கையை பரிசுத்தப்படுத்தும் விதமாகவே இஸ்லாத்தில் நம்பிக்கையும், கோட்பாடுகளும், வணக்க வழிபாடுகளும் அமைந்துள்ளன.
படைத்து பரிபாலனம் செய்து பாதுகாத்து வரும் இறைவனை நேசித்தும், அவனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தியும் அவனது கட்டளைகளுக்கு கீழ்படிந்தும் அவனை அஞ்சியும் வாழவேண்டும் என்பதே இஸ்லாம் மனிதர்களுக்கு போதிக்கிறது.
அன்பு, பயம், பக்தி ஆகிய அடிப்படைகளில் ஊன்றிய நம்பிக்கையின் அடித்தளத்தில் வாழ்க்கையை கட்டியெழுப்புவதே இஸ்லாத்தின் திட்டமாகும். அன்பு கலந்த பக்தி, பக்தி கலந்த பயம் – இஸ்லாத்தின் முழக்கமான தக்வாவின் பொருள் இது.
இஸ்லாத்தின் இறுதி தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) தக்வாவிற்கு இவ்வாறு விளக்கமளிக்கிறார்: “அல்லாஹ்விற்கு கட்டுப்படுங்கள். கட்டளைகளை மீறாதீர்கள். அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். மறந்துவிடாதீர்கள். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள். நன்றி மறவாதீர்கள்” (இப்னு கஸீர்)
இறை நினைவும், நன்றியுணர்வும், கட்டுப்படுதலும் ஒன்றிணைந்த ‘தக்வா’ என்ற சிறப்பு குணத்தை பெறுவதற்காக கடமையாக்கப்பட்ட நோன்பு எனும் வணக்க வழிபாட்டை கடைப்பிடிக்கும் ரமலான் மாதத்தை முஸ்லிம் உலகம் அடைந்துள்ளது. வாழ்க்கை பயணத்தில் தக்வாவை பயணப்பொருளாக எடுத்துச்செல்ல இறைவன் கட்டளையிடுகிறான். அதர்மம் மற்றும் பாவத்தின் கறை படியாத பரிசுத்தமான வாழ்க்கையை சாத்தியமாக்குவது எச்சரிக்கை உணர்வுடன் கூடிய இறை நம்பிக்கையாகும்.
ஒரு முறை அலீ (ரலி) அவர்களிடம் தக்வா என்றால் என்ன என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள் இரத்தினச் சுருக்கமாக பதிலளித்தார்கள். அல்லாஹ்வை அஞ்சுவது, திருக்குர்ஆன் வழியில் நடப்பது, இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவது, மரணத்தை எதிர்நோக்கி தயாராக இருப்பது என பதிலளித்தார்கள்.
சுவர்க்க பாதையை நோக்கி மனிதனை வழி நடத்தும் நம்பிக்கையின் முக்கிய பகுதியான தக்வாவை குறித்து நபித்தோழர்கள் இருவர் நடத்திய உரையாடல் மூலம் அறியலாம்.
உமர் பின் கத்தாப்(ரலி) ஒரு நாள் உபை இப்னு கஃப்(ரலி) அவர்களிடம் வினவினார்கள்: ‘தக்வா என்றால் என்ன?.’
உபை இப்னு கஃப்(ரலி): ‘உமரே கற்களும், முட்களும் நிறைந்த பாதையில் வெற்றுக் கால்களுடன் நடந்து வரும் பொழுது எவ்வாறு கவனமாக காலடிகளை எடுத்து வைத்து நடக்கமுடியும்?
உமர்(ரலி): ஒவ்வொரு அடியையும் ஜாக்கிரதையாக, ஒவ்வொரு காலடியும் மிக கவனமாக… மிக கவனமாக… காலடிகளை எடுத்து வைக்கும்பொழுது கால்களில் முட்கள் செருகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உபை இப்னு கஃப்(ரலி): இந்த ஜாக்கிரதையும் கவனமும் தான் தக்வா
ரமலான் மாதத்தில் நோன்பை பேணுவதன் மூலம் அடையும் தக்வாவின் பொருளை மேற்கண்ட விளக்கங்களில் இருந்து புரிந்துகொள்ளலாம்.
ஒரு மாதம் நீண்ட நோன்பு காலம் நிரந்தரமான, சோர்வில்லாத மனக் கட்டுப்பாட்டிற்கான கருவியாகும். பகல் முழுவதும் உணவு, பானங்களை தவிர்த்து, உடல் இச்சைகளை நிராகரித்து நோன்பை கடைப்பிடிக்கும் நம்பிக்கையாளர், இரவுகளில் தொழுகையிலும், பிரார்த்தனைகளிலும், இறைவனை நினைவுக் கூர்வதிலும் மூழ்கிவிடுகிறார். இரவுகளையும், பகல் பொழுதுகளையும் நன்மைகளால் நிரப்பி ஆன்மீக் மேன்மையில் தனது அடியான் ஜொலிக்கும் பொழுது இறைவன் மகிழ்ச்சி அடைகிறான்.
நோன்பின் மூலம் அடையப்பெறும் மகத்தான விழுமியங்கள் குறித்து ஷஹீத் செய்யத் குதுப் அவர்கள் தனது ஃபீ ழிலாலில் குர்ஆனில் இவ்வாறு விளக்குகிறார்: “ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.” (அல்குர்ஆன் 2:183).
நோன்பின் உன்னதமான லட்சியம் இங்கே விளக்கப்படுகிறது. அதுதான் இறையச்சம். தக்வா-இறையச்சம்தான் உள்ளங்களை விழிப்படையச் செய்து உயிரூட்டுகிறது. இறைவனின் திருப்தியை அடைவதையே குறிக்கோளாக கொண்டு எதையும் துறக்கும் எண்ணத்துடனும், கீழ்படிதலுடனும் கடைப்பிடிக்கப்படும் நோன்பின் பரிசுத்தம் என்பது உள்ளத்தில் ஊசலாடும் எண்ணங்கள் கூட களங்கமடையக் கூடாது என்பதில் அழுத்தமாக இருக்கிறது. இங்குதான் தக்வா உள்ளத்தின் காவலாளியாக மாறுகிறது.
இறைவனின் சன்னிதியில் பக்தியின் மகிமையை உணர்ந்தவர்கள்தாம் திருக்குர்ஆன் கூறும் சிறந்த சமுதாயம். அந்த பரிசுத்த ஆத்மாக்கள் சென்றடைவது இந்த மகத்தான லட்சிய அடையாளத்திலாகும். இந்த நோன்பு அவர்களுக்கு லட்சியத்தை அடைவதற்கான வழியாகும். அவர்களின் கண் முன்னால் மின்னும் ஆன்மீக மேன்மையின் ஒளிக் கோபுரத்தில் நோன்பு எனும் படிக்கட்டுகளின் மூலமாக அவர்கள் ஏறிச் செல்வார்கள்’ (ஃபீ ழிலாலில் குர்ஆன் 2:168)
ரமலானை பொறுமையின் மாதமாக நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்து கூறினார்கள். ஆசைகளையும், பேராசைகளையும் கட்டுப்படுத்தும் மன உறுதியின் பிறப்பிடமே பொறுமையும், சகிப்புத் தன்மையுமாகும்.
ரமலானில் நோன்பு மூலம் கிடைக்கும் பயிற்சியின் காரணமாக நம்பிக்கையாளர் இறைக்கட்டளைகளின் வரம்புகளை மீறாமல் ஒழுக்கத்துடன் வாழக் கற்றுக்கொள்கிறார். “இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக் காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.” (அல்குர்ஆன் 2:187).
வணக்கங்களின் முக்கிய அம்சங்களை உட்கொள்ளும் முக்கிய அனுஷ்டானம்தான் நோன்பு. தூக்கம் அண்டாத எப்பொழுதும் விழித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ், தன்னை கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான் என்ற உணர்வை நோன்பு ஏற்படுத்துகிறது. இதில் பொறுமை உண்டு, தியாகம் உண்டு, சமர்ப்பணம் உண்டு. இதர கடமைகளுக்கு இல்லாத பிரதிபலனும் உண்டு.
அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அது (நோன்பு) எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். (காரணம்) அவனுடைய இச்சையையும், உணவையும் எனக்காக விட்டுவிடுகின்றான்.” (நூல்:முஸ்லிம்).
உணவையும், பானத்தையும், இச்சைகளையும் விலக்குவது மட்டும் நோன்பு அல்ல. நமது சொல், செயல்களிலும், உள்ளத்திலும் நோன்பின் ஆன்மா வெளிப்பட வேண்டும். உடல் மற்றும் உள்ளத்தின் பரிசுத்தம் தான் நோன்பின் லட்சியம்.
“யார் பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ, அவர் பசித்திருப்பதாலும், தாகித்திருப்பதாலும் அல்லாஹ்வுக்கு எத்தகையத் தேவையுமில்லை” (நூல்: புகாரி)
ரமலான் மாதத்தின் சிறப்பையும், அம்மாதத்தில் நோன்பு நோற்பதன் முக்கியத்துவம் குறித்தும் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்: “ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).” (அல்குர்ஆன் 2:185).
ரமலானில் நோன்பு நோற்பது அல்லாஹ் அருளிய பரிசுத்த திருக்குர்ஆன் என்ற மகத்தான அருட்கொடைக்கு நன்றி தெரிவிப்பதாகும். நம்மை படைத்து பரிபாலித்து பாதுகாத்து நேர்வழியையும் காட்டிய இறைவனுக்கு நாம் நன்றி தெரிவிக்கும் சரியான முறை அவன் நம்மைப் படைத்த நோக்கத்தை நிறைவேற்ற நாம் முழு மனதுடன் தயாராகவேண்டும் என்பதாகும்.
திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டதன் நோக்கம் இறைவனின் திருப்தியை அடைவதற்கான வழிமுறையை கண்டறிந்து அதன் அடிப்படையில் வாழ்வதும், உலகை அவ்வழியின் மூலமாக வழி நடத்துவதுமாகும். திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதத்தில் நோன்பு நோற்பது வெறும் ஒரு ஆன்மீக கடமையோ, வழிபாடோ மட்டுமல்ல.
திருக்குர்ஆன் எனும் மகத்தான அருட்கொடையை நமக்கு இறக்கி அருள்புரிந்த அல்லாஹ்வுக்கு செலுத்தும் நன்றியாகும்.
மனித சமூக வாழ்வின் துவக்கம் முதல் இறுதி வரை மாபெரும் மாற்றத்தை  எக்காலத்திலும் உருவாக்கிக்கொண்டிருக்கும் புரட்சி வேதம்தான் திருக்குர்ஆன். மனித சமூகத்திற்கு ஓர் பூரணமான விடுதலையை திருக்குர்ஆன் லட்சியமாக கொண்டுள்ளது. சாத்தானிய சக்திகளிடமிருந்து விடுதலை, ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை, மனோ இச்சையில் இருந்து விடுதலை, உலகியல் வாழ்வின் அதி மோகத்தில் இருந்து விடுதலை ஆன்மீகத்தின் அபத்தமான பயணத்தில்  இருந்து விடுதலை மரணத்திற்கு பிந்தைய வாழ்வில் நரகில் இருந்து விடுதலை – இவ்வாறு திருக்குர்ஆன் சமர்ப்பிக்கும் விடுதலை கொள்கை உலகியல் மற்றும் மரணத்திற்கு பிந்தைய வாழ்வின் வெற்றிக்கு அடித்தளமாகும்.
திருக்குர்ஆன் அறிவுப்பூர்வமாக புரட்சியை சாதிக்கிறது. பரிசுத்த திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டதுதான் ரமலானின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. திருக்குர்ஆன் கூறும் புரட்சிகர கொள்கையை செயல்ரீதியாக மாற்றுவதற்கான திறன் படைத்த குழுவினர் நோன்பு என்ற வழிபாட்டின் மூலம் வார்த்தெடுக்கப்படுகின்றார்கள்.
திருக்குர்ஆன் அருளப்பட்டதன் வருடாந்திர நிகழ்வை நாம் இவ்வாறு கொண்டாட பணிக்கப்பட்டுள்ளோம். இவ்வாறு வார்த்தெடுக்கப்பட்ட குழுவினரரால் சரித்திரத்தின் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன.
ஆபத்தில் சிக்கிய ஒருவரை காணும்பொழுது உள்ளத்தில் தோன்றும் ஒரு பரிதவிப்புதான் பச்சாதாபம். எறும்புகளிடம் கூட கருணை காண்பித்த மார்க்கம் இஸ்லாம். ஹிஜ்ரி ஐந்தில் பட்டினியால் வாடிய எதிரிகளுக்கு கூட உணவை அனுப்பிக் கொடுத்தார்கள் நபி(ஸல்). ரமலானை ‘பச்சாதாபத்தின் மாதம்’ என நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்தார்கள்.
துயருறும் மக்களின் வேதனையை உணருபவன் தான் நோன்பாளி. பசியின் ருசியையும், தானத்தின் ஆனந்தத்தையும் காருண்யத்தின் பிரார்த்தனைகளையும் நோன்பாளி சொந்தமாக்குகிறான். ரமலானில் அனைவருடனும் நல்லிணக்கத்தோடு நடந்துகொள்ள வேண்டும். வீசும் காற்றை விட வேகமாக நபி(ஸல்) அவர்கள் தானம் செய்துள்ளார்கள்.
துஆ(பிரார்த்தனை) மூலம் அமைதியும், அனுபவமும் நுகராதவருக்கு சுகபாக்கியங்கள் என்ன என்பது தெரியாது. தனக்கு புகலிடமாக இறைவனை ஆக்கியவன் தோட்டத்தில் நடை பயிலுவதைப் போல ஆறுதலடைகிறான்.
“பிரார்த்தனை விசுவாசியின் ஆயுதமாகும். தீனின் தூண் ஆகும். வானங்கள், பூமிக்கு இடையே ஒளியாகும்” (ஹாகிம்)பிரார்த்தனை என்ற பரிசுத்த கயிறினால் நம்பிக்கையாளர்கள் தனது இறைவனுடன் நெருக்கமாவார்கள்.
நோன்பின் வசனங்களை பற்றி குறிப்பிடும் அல்லாஹ் அதற்கு அடுத்ததாக(2:186) பிரார்த்தனையைக் குறித்து கூறுகிறான்.
தொழுகை இறைவனுடன் நடத்தும் உரையாடல் என்பது நபிமொழி. பிரார்த்தனை வேளைகள் இறைவனுடன் உரையாடும் விலைமதிப்பற்ற அனுபவங்களை நோன்பாளிக்கு அளிக்கிறது. குறிப்பாக ரமலானின் இரவுகளில். நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் லயித்துப் போவார்கள். எந்த அளவுக்கு என்றால் கால் வீங்குவது கூட தெரியாமல் இரவுகளில் நின்று வணங்குவார்கள். நபித் தோழர்களோ தொழுகையில் லயித்துவிட்டால் தன்னை சுற்றி நடப்பதை கூட மறந்துவிடுவார்கள். நோன்பாளி ரமலான் இரவுகளில் தொழுகையை நீட்டுகிறார். இரவின் கடைசிப் பகுதிகளில் அவர் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக்கோரி மண்டாடுவார். ஆனால், தொழுகையின் வெளிப்புற அசைவுகளிலும், எண்ணிக்கையிலும் மட்டும் ஒருவர் கவனம் செலுத்தினால் அவரால் தொழுகையின் அனுபவத்தை பெற இயலாது.
ருக்வும், ஸுஜூதும் முறையாக நிறைவேற்றாதவனின் தொழுகை வானை நோக்கி உயராது. பழையத் துணிக்கட்டு போல அவனது முகத்தில் வீசியெறியப்படும். உள்ளச்சம் இல்லாத தொழுகையை ஜடம் என்று சிலர் வர்ணிக்கின்றனர்.
ரமலானின் கடைசி 10 தினங்களின் ஒற்றை இரவுகளில் ஆயிரம் மாதங்களை விட சிறந்த புனித லைலத்துல் கத்ர் இரவை தேடுமாறு நபி(ஸல்) அவர்கள் நம்மை பணித்துள்ளார்கள்.
‘அல்லாஹ்வின் திருத்தூதர், நபி(ஸல்) அவர்கள் (ரமளானின்) பிந்திய பத்து இரவுகள் வந்ததும் வணக்கத்தில் ஈடுபட முழுமையாக ஆயத்தமாகி விடுவார்கள். இரவை வணக்கத்தில் கழிப்பார்கள். தனது குடும்பத்தையும் விழிக்கச் செய்வார்கள்’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம்
‘நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசி பத்து நாட்களில் அவர்கள் மரணிக்கும்வரை இஃதிகாஃப் (பள்ளியில் தங்கி) இருந்தார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)
ஒரு நம்பிக்கையாளனின் இரத்தில் கலந்ததுதான் போராட்டம். தீமை உலகை ஆளுகையில் போராட்ட உணர்வை வெளிப்படுத்தாதவன் நம்பிக்கையாளன் அல்லன். ஷைத்தானோடு போர் பிரகடனம் செய்த நோன்பாளியால் அதர்மத்தின் முன்னால் மெளனியாக நிற்க முடியாது. ஒன்றும் செய்யவியலாதி நிர்கதியான சூழலில் கூட அவனுடைய உள்ளத்தில் அதர்மத்திற்கு எதிரான போராட்ட உணர்வு ஜொலித்துக்கொண்டே இருக்கும்.
ஹஸனுல் பன்னாஹ்(ரஹ்) அவர்களின் வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் போராட்ட வீதியிலே இரத்த சாட்சியம் ஒரு விசுவாசியின் மதுர மனோகரமான மோகம் ஆகும். இந்த போராட்ட உணர்வும், இரத்தசாட்சிய எண்ணமும் நோன்பாளியிடம் நூறு சதவீதம் உற்பத்தியாகிறது.
ரமலான் வரும்பொழுதெல்லாம் பத்ரையும், மக்கா வெற்றியையும் சுமந்துகொண்டே வருகிறது. இம்மாதத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உலகின் போக்கை மாற்றிய ஏராளமான சம்பவங்கள் நடந்தேறின. சிலுவைப் போர் வீரர்களுக்கு எதிரான ஹத்தீன் போர், தார்தாரியர்களுக்கு எதிரான ஐன் ஜாலூத் போர், கான்ஸ்டாண்டி நோபிள் வெற்றி, இஸ்ரேலுக்கு எதிரான போர் என ஏராளமான சம்பவங்களுக்கு ரமலான் சாட்சியம் வகிக்கிறது.
ஆகவே நோன்பு என்பது ஒரு ஆன்மீக சித்திரவதை அல்ல. வாழ்க்கையின் மகத்தான லட்சியங்களை அடைவதற்கும், தம் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்றவும் இறை நம்பிக்கையாளர்களை வார்த்தெடுப்பதும், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பக்குவப்படுத்துவதுமாகும்.
ரமலான் மாதத்தில் நிறைவேற்ற நமக்கு இடப்பட்டுள்ள கட்டளைகளை உதாசீனப்படுத்திவிடக் கூடாது. ஓய்வில்லாத வணக்கங்கள்தாம் இம்மாதத்தின் அடையாள முத்திரை. ரமலானை யார் இறையச்சத்திற்கான பயிற்சி பாசறையாக பயன்படுத்தி அந்த லட்சியத்தை அடைகின்றார்களோ அவர்கள் ரய்யான் எனும் சுவன வாசல் வழியாக நுழைவார்கள்.
ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன.  ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள்: புகாரீ
சுவனம் செல்வதற்கான வழிகள் ரமலானில் எளிதாக இருக்கும் வேளையில் அதனை கண்டும் காணாமல் இருப்பவர் அறிவாளியா? வாருங்கள் புனித ரமலானில் சுவனத்தில் நுழைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம்!
நன்றி:thoothu online


எகிப்து அதிபர் முர்சி பதவி இறக்கம்: பின்னணியில் அமெரிக்காவின் சதி!

​2011 ஆம் ஆண்டு எகிப்தில் நடந்த மக்கள் புரட்சிக்குப் பின்னர், தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை மக்கள் ஏகமனதாக தேர்ந்தெடுத்தனர்;
முர்சி, ஜனநாயகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபரானார். கடந்தவாரம் நடந்த சதி புரட்சியினால் அதிபர் முர்சி, எகிப்து இராணுவத்தால் பதவி பறிக்கப்பட்டார்.
எட்டு தசாப்தத்திற்கு மேலாக சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சியின்கீழ்​ அடிமை பட்டு கிடந்த எகிப்து மக்களுக்கு ​ அதிபரான முர்சிக்கு, நிலைமையைச் சீராக்க முழுதாக இரு ஆண்டுகள்கூட அவகாசம் கொடுக்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
அதிபர் முர்சியை பதவி இறக்க இலட்சக்கணக்கானோர் போராடினார்கள்;
 அதனாலேயே இராணுவம் தலையிட்டு அவரை நீக்கியது என்று நியாயம் பேசப்படுகிறது. அதிபர் முர்சிக்கு எதிராக வாக்களித்த அந்த 48% மக்களையும் ஒருமித்து போராட்ட களத்திற்குக் கொண்டுவந்தால், அது ஒரு பெரிய எண்ணிக்கையாகத்தான் இருக்கும்.​​ அதற்காக பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை பதவி நீக்கலாமா?​ இதற்கு ஜனநாயகத்தில் இடமுள்ளதா என்ன?, இப்படியான அதிசயங்கள் மத்திய கிழக்கு நாடுகளில்தான் நடக்கும்.
முஸ்லீம் சகோதரத்துவ சுதந்திர மற்றும் நீதி கட்சி தேர்தலில் வெற்ற வெற்றிகளின் புள்ளி விபரம்
2011 மார்ச் அரசியலமைப்பு வாக்கெடுப்பு
ஆதரித்தவர்கள் 77%
எதிரானவர்கள் 23%
மக்கள் சட்டசபைத் தேர்தல்
முஸ்லீம் சகோதரத்துவ சுதந்திர மற்றும் நீதி கட்சி 46%
இஸ்லாமிஸ்ட் ப்லோக் கட்சி 25%
ஷூறா சபை தேர்தல்
முஸ்லீம் சகோதரத்துவ சுதந்திர மற்றும் நீதி கட்சி 58%
இஸ்லாமிஸ்ட் ப்லோக் கட்சி 25%
ஜனாதிபதி தேர்தல்
முஹம்மத் முர்சி 52%
அஹ்மத் சபிக் 48%
2012 டிசம்பர் புதிய அரசியலமைப்பு வாக்கெடுப்பு
ஆதரித்தவர்கள் 64%
எதிரானவர்கள் 36%
போராடியவர்கள் யார்?
எகிப்திலுள்ள 10 சதவீத யூதர்களும் கிறித்தவர்களும் இந்தப் போராட்டத்தில் முழுமையாக பங்கெடுத்தார்கள். நாட்டின் ஒவ்வொரு மூலையிலுள்ள யூதர்களும் கிறித்தவர்களும் இப் போராட்ட களத்திற்குக் கொண்டுவரப் பட்டார்கள். இவர்கள் அதிபர் முர்சியை எதிர்ப்பதற்குக் காரணம் இருக்கிறது; அதுதான் எகிப்தில் ஒரு இஸ்லாமிய ஆட்சி வரப்போகின்றது! இதே காரணம்தான் உலக இஸ்லாமிய விரோத நாடுகள் முர்சியை வெறுப்பதற்குக் காரணம். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் அறிக்கையிலிருந்து அமெரிக்கா இந்தச் சதி பின்னணியில் இருந்தது உறுதியாகின்றது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ஈ ரைஸ்,​ இராணுவம் முர்சியைப் பதவியிறக்குவதற்கும் ஒரு மணி நேரம் முன்பு ​அதிபர் முர்சியைத் தொடர்பு கொண்டு, அலுவலகத்தில் இருந்து வெளியறிவிட ​ அறிவுறுத்தியதாக ஒரு அறிக்கை கூறுகிறது.
அரபு உலக வெளியுறவு மந்திரி ஒருவர் அமெரிக்காவின் தூதுவர் கரியாலயத்திலிருந்து அதிபர் முர்சியை தொடர்பு கொண்டு, அமைச்சரவை மாற்றங்களைச் செய்யவும் உதவி அதிபரையும், அதிகாரமுள்ள ஆளுநர்களையும் நியமிக்க ஒரு இறுதி வாய்ப்பு அமெரிக்காவினால் கொடுக்கப்பட்டது எனவும் நியூயார்க் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது.
மேலும் அதிபர் முர்சியின் உயர்மட்ட வெளியுறவு கொள்கை ஆலோசகர் இஸாம் அல் ஹட்டாத், எகிப்து அமெரிக்க தூதுவர் ஆனி டபிள்யூ பேட்டர்சனை அழைத்து அதிபர் முர்சி அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அடிபணியவில்லை என்று கூறினார்.
நாம் சிந்திக்கவேண்டியது, நம் நாட்டு அரசியல்​ தலைவர்களைப் போல அதிகாரமும் ​ பணமுமே முர்சியின் குறிக்கோளாக இருந்திருந்தால் அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து போயிருக்கலாம். ஆனால், சர்வாதிகாரத்துக்கு எதிராக போராடி, ஜனநாயகத்தின்மூலம் தம்மை நம்பி ஆட்சியில் அமர்த்திய எகிப்து எகிப்து மக்களுக்கு அவர் துரோகம் செய்யக்கூடாது என நினைத்தார்; ஆகவேதான் அவர் அமெரிக்காவுக்கு அடிபணியவில்லை!
அதிபரின் ஆலோசகர் இஸாம் அல் ஹட்டாத், முர்சி அமெரிக்காவின் மிரட்டல்களுக்குச் செவிசாய்க்கவில்லை என்ற தகவலை அமெரிக்க தூதுவர் டபிள்யூ பேட்டர்சனுக்குத் தெரிவித்த சற்று நேரத்தில் அல் ஹட்டாத்தின் கைத்தொலைபேசிக்கு பேட்டர்சனிடமிருந்து, "உங்களுடைய விளையாட்டுகளை இன்னும் ஒரு மணித்தியாலங்களுக்குள் எங்களுடைய அம்மா நிறுத்தபோவதாக சொன்னார்" என குறுஞ்செய்தி வந்ததாகவும் இதில் அவர் அம்மா எனக்குறிப்பிட்டது அமெரிக்காவை என்றும் நியூயார்க் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது.
மேலும் அவ்வறிக்கையில், "எகிப்தியர்கள் பழிச்சொல்லாக சொல்லும் மேற்கத்திய அதிகாரம் என்று சொல்லுவார்கள். பில்லியன் டாலர் பெறுமதியான எகிப்திய இராணுவ உதவியுடன் நடந்து முடிந்தது" என்று கூறுகிறது.
​அமெரிக்காவின் டொலர் பெறுமதிக்கு எகிப்தின் இராணுவ அமைச்சர் ஜெனரல் அப்துல் பாட்டாஹ் அல் சிசி விலை போய்விட்டார் என்பதை ​இந்த அறிக்கையின் மூலம் நாம் நேரடியாக புரிந்து கொள்ளலாம்.
அந்த ஒரு மணித்தியாலத்திற்குப் பின்னர் எகிப்தின் இராணுவ அமைச்சர் ஜெனரல் அப்துல் பாட்டாஹ் அல் சிசி ஊடகத்தில், "அதிபர் முர்சியை இராணுவம் பதவிலிருந்து நீக்குவதாகவும் அவர் மக்களின் ஆசைகளை பூர்த்தி செய்ய தவறிவிட்டார்" என்றும் அறிவிக்கிறார்.
முர்சி​ ​எந்த ஆசையை பூர்த்தி செய்யவில்லை? அவர் ஆட்சிக்கு வந்தவுடன் இரவு களியாட்ட விடுதிகளை மூடினார்; மக்களுக்குத் ​ தீமை பயக்கும் பல சமூகவிரோத விடயங்களை ஒழித்தார்.
இதில்​ ​வினோதம் என்னவென்றால், படைத்தளபதியாக இருந்த சிசியை முர்சி,​ ​சுப்ரீம் படைத்தளபதியாக பதவி உயர்த்தியதோடு ​ அவரை அதிகாரமிக்க பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி உயர்த்தினார். முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சார்ந்த உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் கூறுகிறார்: "அதிபர் முர்சி அவர்கள் பாட்டாஹ் சிசி அவர்களை மிகவும் ஆழமாக நம்பினார்."
இராணுவத்தால் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டுள்ள அட்லி மன்சூருக்கு மக்கள் மத்தியிலிருக்கும் பிரபல்யம் பற்றி அல் ஜசீரா கூறுகையில், "தற்போது போராட்டம் நடக்கும் இடத்திற்கு அட்லி மன்சூர் நடந்து போனால், எந்த ஆபத்தும் இல்லாமல் அவர் திரும்பி வரலாம். ஏனென்றால் மக்களுக்கு அவரை தெரியாது."
இத்தனைக்கும் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அதிபர் முர்சியினால் உச்ச அரசியலமைப்பு நீதிமன்றத் தலைவராக அட்லி​ மன்சூர் ​நியமிக்கப்பட்டார். இப்படி அதிபர் முர்சி அவர்களின் அதி நம்பிக்கையை வென்ற இவர்கள், எப்படி குறுகிய காலப்பகுதிக்குள் அவருக்கு எதிரிகளாக மாறினார்கள்? இதிலிருந்து ​, எகிப்து சகோதரத்துவ கட்சியின் ஆட்சிக்கு எதிராக திட்டமிட்டு செயற்பட்டு இருக்கிறார்கள் என்பது புரியவருகின்றது. முஹம்மட் எல்பராதி (ElBaradei) என்பவரை உதவி அதிபராக நியமித்து இருப்பது, இச்சதியின் பின்னணியில் அமெரிக்கா இருக்கின்றது என்பதற்கான மற்றொரு சான்றாகும்.
வாஷிங்டனில் கடந்த டிசம்பரில் அதிபர் முர்சியின் ஆலோசகர் இஸாம் அல் ஹட்டாத் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களை சந்தித்த போது, "எதிர்தரப்பு கட்சிகளையும் நிர்வாகத்துக்குள் உள்வங்குமாறு ஒபாமா வாதாடினார்" என்றும் மாநில செயலாளர் ஜான் கெர்ரி, "எகிப்தின் பிரதம மந்திரியாக முன்னாள் சர்வதேச அணுசக்தி தலைவர் முஹம்மமட் எல் பராதியை நியமிக்க" வற்புறுத்தினார் என்றும் ஆனால் அது அதிபர் முர்சியினால் நிராகரிக்கப்பட்டது என்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.
இவை எல்லாவற்றையும் பார்க்கும்போதும் வளைகுடா நாடுகளில் மக்கள் தேர்வு செய்யும் ஒரு ஜனநாயக அடிப்படையிலான இஸ்லாமிய ஆட்சி வருவதை அமெரிக்கா விரும்பவில்லை என்பதும் இதற்கு மத்திய வளைகுடா முஸ்லிம் நாடுகளும் உடந்தை என்பதும் தெளிவாக விளங்குகின்றது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அதிபர் முர்சியினை இராணுவம் அடாவடியாக நீக்கியச் செயலை, மக்களால் தேர்வு செய்யப்படாத இஸ்லாத்துக்கு எதிரான மன்னராட்சியினைக் கொண்டிருக்கும் சவூதி மன்னர் வரவேற்றச் செயல் இதற்கு கட்டியம் கூறுகிறது.
ஆனால் ஒன்றும் மட்டும் உண்மை; மத்திய அரபுலக மக்கள் விழிப்புணர்வு பெற்று வருகின்றார்கள். அவர்களை இனிமேலும் ஏமாற்றி, அமெரிக்காவுக்கு வாலாட்டும் பொம்மைகளாக அந்த நாடுகளை நீண்டநாட்களுக்குக் கொண்டு செல்ல முடியாது. அங்கு விரைவிலேயே மக்கள் எழுச்சி முழு அளவில் நடக்கும். அது, மக்களால் தேர்வு செய்யப்படும் சர்வாதிகாரமற்ற, அமெரிக்காவுக்கு வாலாட்டாத மக்கள் குடியரசு ஏற்பட வழிவகுக்கும்! இது உறுதி!
 
- சாய்ந்தமருது முஹம்மத் ஹனீஸ்

Saturday, 6 July 2013

முஸ்லிம்களின் கொள்கை இஸ்லாமா? தவ்ஹீதா?

லகில் வாழும் மக்களை இரண்டு பிரிவினராகப் பிரித்து விடலாம். அவை,

A) இறைவன் உண்டு (ஆன்மீகவாதிகள்)
B) இறைவன் இல்லை (நாத்திகர்)

இதில் நாத்திகர்களை விட்டுவிடுவோம். இறைவன் உண்டு என நம்பும் A கேட்டகரி மக்களை மேலும் இரு பிரிவினராகப் பிரிக்கலாம். அவை,


A-1 ஒரே கடவுள் நம்பிக்கை கொண்ட இந்து, முஸ்லிம், கிறித்துவர்கள், etc.
A-2 ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்களில் நம்பிக்கை கொண்ட இந்து, கிறித்துவர்கள், etc.

ஒரே இறைவன் - படைத்தவனை ஒருமைப்படுத்துதல் - ஏக இறைவன் - என்ற கொள்கையினையே "ஏகத்துவம்/தௌஹீத்" என்ற பெயரில் முஸ்லிம்களாகிய நாம் பெரும்பாலும் அறியப் படுகிறோம். 

அதாவது "ஏகத்துவவாதிகள்" அல்லது "தௌஹீதுவாதிகள்" என்றதுமே அவர்கள் அனைவருமே முஸ்லிம்கள்தான்; அவர்களின் கொள்கை இஸ்லாம் என்று முஸ்லிம்களாகிய நாம் நம்புகிறோம். இது சரியா என்பதே, இக் கட்டுரையின் கேள்விக்கு அடிப்படை.

இப்போது, "இறைவன் ஒருவனே" என்போரைக் குறித்து பார்ப்போம். இறைவன் ஒருவனே என்ற கொள்கை கொண்டோர் முஸ்லிம்கள் மட்டும் அல்ல; உலகில் வேறு சில மதத்தவரும் உள்ளனர் என்பதை நாம் மறுக்க இயலாது.

எளிய உதாரணம், நம் தமிழகத்தில் முன்னர் வாழ்ந்திருந்த, இப்போதும் காடு மலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்கள். இவர்களின் தெய்வ நம்பிக்கை என்பது, சக்தி ஒன்றுதான் என்பதே. தமிழிலேயே, "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்றொரு சொல் உண்டு. இந்தச் சொல்வழக்கு உருவானது சித்தர்களிலிருந்தே. எனில், இந்தச் சித்தர்களும் ஏகத்துவவாதிகள் தானே? இதுபோல், இறைவன் ஒருவன்தான் என்பதில் மிக உறுதியான நம்பிக்கை கொண்டு வேறு பலரும் உள்ளனர். உதாரணமாக, கிறிஸ்த்தவத்தில் "ஜெகோவா" பிரிவினர். இவர்கள், கர்த்தரை-இறைவனை ஜெகோவா என்ற பெயரில் அழைக்கின்றனர். அவர்கள், இயேசுவைத் தூதர் என்றே கூறுகின்றனர். எனில், இவர்களும் ஏகத்துவவாதிகள் தானே? உதாரணங்கள் இன்னும் பல சொல்லலாம். சுருக்கமாக, "ஏகத்துவம்-இறைவன் ஒருவனே" சிந்தனை கொண்டோர் எல்லோரையுமே முஸ்லிம்கள்தான் என்று நாம் சொல்வதற்கு இயலாது. அதனை அல்லாஹ்தான் தீர்மானிக்க வேண்டும். அடிப்படையில் இஸ்லாமிய கொள்கைக்கும் ஏகத்துவ கொள்கைக்கும் வித்தியாசம் உண்டு. அதனை இப்படி சொல்லலாம்: ஏகத்துவ கொள்கை இஸ்லாமிய கொள்கையின் உள்ளே அடங்கும். அதாவது, இஸ்லாமியக் கொள்கையின் ஒரு அம்சமே ஏகத்துவம். ஆனால், ஏகத்துவம் மட்டுமே முழுமையான இஸ்லாமியக் கொள்கையாக ஆகி விடாது.

அப்படி எனில், இஸ்லாமியக் கொள்கை தான் என்ன?

இஸ்லாமியக் கொள்கையின் அடிப்படை என்பது "ஏகத்துவம்+தூதுத்துவம்" ஆகிய இரண்டும் உள்ளடக்கியதாகும். "ஏகத்துவம் - லா இலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறில்லை" - இதனை மட்டும் ஒருவர் உளமார முன் மொழிந்துவிட்டால் அவர் முஸ்லிமாகிவிடுவார் என்று நாம் ஒருபோதும் கூறுவதில்லை. "லா இலாஹ இல்லல்லாஹ் - ஏகத்துவம்" + "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - தூதுத்துவம்" ஆகிய இரண்டையும் சேர்த்து மொழிந்தால் மட்டுமே ஒருவர் முஸ்லிமாக முடியும். இதுதான் இஸ்லாமிய கொள்கை! ஒவ்வொரு நபிமாரின் சமூகமும் இறைவன் ஒருவன் என்று நம்புவதோடு, அவன் அனுப்பிய தூதர்தான் அந்த நபி என்பதையும் நம்பவேண்டும். அப்படி நம்பினாலே அவர்கள் முஸ்லிம்கள் ஆவார்கள். 

ஆக, இஸ்லாமியக் கொள்கை என்பது "ஏகத்துவம்+தூதுத்துவம்" ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும்.

முன் சென்ற பத்தியில் குறிப்பிட்ட ஏகத்துவச் சிந்தனை கொண்ட சித்தர்கள், இஸ்லாத்தின் அடிப்படை கூறான "ரிஸாலத்" (தூதுத்துவம்) என்பதை ஏற்காதவர்கள். இவர்கள் தமது ஆன்மீகத் தேடுதல்+ மனக் கட்டுப்பாடு (தியானம்) மூலம் இறைவனை அறிந்துகொள்ளலாம், இறைவனை அடைந்து கொள்ள முடியும் (முக்தி நிலை) என்ற எண்ணங்களோடு ஓரிறைக் கொள்கையை நிலை நிறுத்தியுள்ளவர்களாவர். 

வரலாற்றை நோக்கினால், தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் தமக்கு நபித்துவம் கிடைக்கும் முன்னர் இந் நிலையிலேயே இருந்தார்கள். அதாவது, சமூகத்தின் சீரழிவான போக்கினைக் கண்டு மனம் நொந்து, நிச்சயமாக இறைவன் இத்தகைய மோசமான விசயங்களை ஏற்றுக்கொள்பவனாக இருக்கமாட்டான் என்ற நம்பிக்கையோடு தனிமையில் சென்று இறை எண்ணங்களில், தியானங்களில் அமர்ந்தார்கள். 

தொடர்ந்து நபியவர்களைத் தம் தூதுவராக தேர்வு செய்த ஏக இறைவனான அல்லாஹ், மக்களிடம் சரியான இறை கொள்கையை எடுத்துரைக்கும் பொறுப்பைக் கொடுத்தான். நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இறைத் தூதராக நியமிக்கப்பட்டு விட்ட நிமிடத்திலிருந்து, "ஒரே இறைவன் - ஏகத்துவம்" என்பதோடு நில்லாமல், முஹம்மது(ஸல்) அவர்களே இறைத்தூதர், என்பதையும் சேர்த்து நம்பினால் மட்டுமே ஒருவர் முஸ்லிம் ஆக முடியும்.

அதே சமயம், ஒரே இறைவன் - ஏகத்துவக் கொள்கை கொண்ட ஒருவர், முஹம்மது(ஸல்) அவர்களை தூதரென ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறி விடுவாரேயானால் அவர் முஸ்லிம் ஆகமாட்டார். ஆனாலும், ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்வதால் அவரும் தௌஹீதுவாதி / ஏகத்துவவாதியே!

அல்லாஹ்வும் தன் மறையில், அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து (தாமும்) நல்ல அமல்கள் செய்து “நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன்” என்று சொல்பவரை விட அழகிய சொல்லைக் கூறுபவர் யார்?” (குர்ஆன் 41:33) என்று கூறுகிறான்.
எனவே, நாம் நம்மை வெறுமனே தவ்ஹீதுவாதி என்று அழைத்துக் கொள்வதைவிட, என் கொள்கை தவ்ஹீது என்று சொல்லிக் கொள்வதைவிட இறைக்கட்டளையின் படி "நான் முஸ்லிம்; என் கொள்கை இஸ்லாம்" என்று சொல்லிக் கொள்வதே சாலப் பொருத்தமானது.

- அபூ சுமையா

Friday, 5 July 2013

ரமளான் பற்றிய திருமறை வசனங்கள்.

அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்).....

 அல்லாஹ்வின் கிருபையால் இந்த ஆண்டு ரமலானை  நாம் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அல்லாஹ் திருமறையில் ரமளானின் சிறப்புகளாக கூறுவதாவது

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ [٢:١٨٣]

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.

சூரா:  வசனம்: 183

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ [٢:١٨٥]

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).

 சூரா:2  வசனம்: 185 

நோன்பை விட்டவருக்கு பரிகாரம்:

أَيَّامًا مَّعْدُودَاتٍ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۚ وَعَلَى الَّذِينَ
يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ ۖ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُ ۚ وَأَن تَصُومُوا خَيْرٌ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ [٢:١٨٤]

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).


சூரா: 2  வசனம்: 184

வரம்புகள்:

أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَىٰ نِسَائِكُمْ ۚ هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ ۗ عَلِمَ اللَّهُ أَنَّكُمْ كُنتُمْ تَخْتَانُونَ أَنفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنكُمْ ۖ فَالْآنَ بَاشِرُوهُنَّ وَابْتَغُوا مَا كَتَبَ اللَّهُ لَكُمْ ۚ وَكُلُوا وَاشْرَبُوا حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ۖ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ ۚ وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ ۗ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ [٢:١٨٧]


நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்;. எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;. இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்;. பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்;. அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்;. இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.

சூரா: 2 வசனம்: 187 


إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا [٣٣:٣٥]


நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.

சூரா: 33  வசனம்: 35 



சூரா: Al-Qadr
بِّسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ [٩٧:١]
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ [٩٧:٢]
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ [٩٧:٣]
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.
تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ [٩٧:٤]
அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ [٩٧:٥]
சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.

சூரா: 97 வசனம்: 1-5

Tuesday, 2 July 2013

சேவை பெறும் உரிமைச் சட்ட முன்வரைவு

அரசுத் துறைகளில் குறித்தகாலத்தில் பொருள் மற்றும் சேவை பெறும் உரிமை மற்றும் குறைதீர் சட்ட முன்வடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைச் சுருக்கமாக "சேவை பெறும் உரிமைச் சட்ட முன்வரைவு' எனலாம். இந்தச் சட்ட முன்வரைவின் உள்ளார்ந்த நோக்கம் ஒருவகையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு இணையானது.
மத்திய, மாநில அரசுத் துறைகள், அரசு நிதியுதவி பெறும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் ஆகியன அனைத்தும் இந்தச் சட்ட வரம்புக்குள் வருகின்றன. சேவைக் குறைபாடு உண்மை என்று கண்டறியப்பட்டால், ரூ.250 முதல் ரூ.50,000 வரை அபராதம், துறை நடவடிக்கை எல்லாவற்றையும் இந்தச் சட்டம் உறுதி செய்கிறது.
இப்போதும்கூட, பல அரசுத் துறைகளில் ஒவ்வொரு சேவைக்கும் ஒரு கால அளவு வைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு மாதத்தில் கடவுச்சிட்டை (பாஸ்போர்ட்) அளிக்க வேண்டும் என்பதை பாஸ்போர்ட் அலுவலகம் லட்சியமாகக் கொண்டுள்ளது. ஆனால், இது சட்டம் அல்ல. இதில் குறை ஏற்பட்டால் நாம் கேள்வி கேட்க முடியாது. இந்த மசோதா சட்டமானால், பொதுமக்கள் கேள்வி கேட்க முடியும்.
வேறுபல மத்திய, மாநில அரசுத்துறை நிறுவனங்களும்கூட தங்களது ஒவ்வொரு சேவைக்கும் ஒரு காலஅளவை நிர்ணயித்துள்ளன. ஆனாலும்கூட இதை நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கக் காரணம், அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் ஊழியர்கள் இல்லை என்பதும், அத்தகைய ஊழியர்களைத் தண்டிக்க முடியாத அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகள்தான்.
வருங்கால வைப்புநிதி அலுவலகமும், வருமான வரி அலுவலகமும் தங்களது இணைய முகவரியில் இத்தகைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன. விண்ணப்பித்தவர்கள் 30 நாள்களுக்குள் தங்களுக்குப் பதில் கிடைக்காவிட்டால், அந்த இணைய முகவரியில் குறிப்பிட்டுள்ள அதிகாரிக்கு இணையத்தின் மூலமே தெரிவிக்கலாம். அவர்களும், "புகார் கவனத்துக்கு வந்தது, பார்க்கிறோம்' என்று பதில் அளித்து உறுதிசெய்கிறார்கள்.
அடுத்த சில நாள்களில், அத்துறையிலிருந்து வரும் பதில், நம் மீது குறை சொல்வதாகத்தான் இருக்கிறதே தவிர, ஊழியர்களின் தவறை ஏற்றுக்கொள்வதாக இருப்பதில்லை. ஒரு இன்றியமையாச் சான்று இணைக்கப்படாவிட்டால், அதை விண்ணப்பித்த சில நாள்களிலேயே தெரிவித்திருக்கலாமே? புகார் கொடுத்த பிறகு தெரிவிக்கும்போது, அந்தச் சான்றை அந்த ஊழியரே கிழித்துப்போட்டுவிட்டு பதில் தருகிறார் என்று நாம் சொன்னால் அதை யார் நம்புவார்கள்?
ஒவ்வொரு விண்ணப்பம் பெறும்போதும், இன்னின்ன சான்றுகளுடன், முழுமையாக அளிக்கப்பட்டது என்று ஒவ்வொரு துறையும் ரசீது வழங்க வேண்டும் என்பதை இந்தச் சட்ட முன்வரைவு கட்டாயப்படுத்தவில்லை எனும்போதே, எந்த அளவுக்கு இந்தச் சட்டம் பயனளிக்கப் போகிறது என்பது தெரிகிறது.
மத்திய அரசு கொண்டு வரும் பல சட்டத்திருத்தங்களின் நோக்கம் நல்லவையாக இருந்தாலும், சட்டத்தில் நிறைய நெளிவுசுளிவுகள் வைத்து, குற்றம் செய்யும் அரசு ஊழியர்களைப் பாதுகாப்பதாகவே அமைந்துவிடுவதால், அந்தச் சட்டங்களுக்கு எல்லாம் உள்நோக்கம் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
சேவை பெறும் உரிமைச் சட்ட முன்வடிவு இரண்டு விஷயங்களைக் கட்டாயமாக்குகிறது. அதாவது, ஒவ்வொரு அரசு ஊழியர் அல்லது துறை செய்ய வேண்டிய கடமை என்ன, அந்தக் கடமையைச் செய்துமுடிக்கக் குறைந்தபட்சம் எத்தனை அலுவலக வேலைநாள்கள் தேவையாக இருக்கும் என்பதை மக்கள் சாசனமாக அறிவிக்க வேண்டும்; அத்துடன், ஒவ்வொரு மாநில அரசும், மத்திய அரசும் தனித்தனியாக பொதுமக்கள் குறைதீர் ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்பவைதான் அவை.
ஒரு அலுவலர் 30 வேலைநாள்களில் பணியை முடிக்கவில்லை என்று புகார் சொன்னாலும், அவர் அந்த வேலைநாள்களில் மாற்றுப்பணியில் இருந்தார், அவரது பொறுப்பில் யாரும் நியமிக்கப்படவில்லை என்று துறைத் தலைவர் கூறினால் அதை இந்தச் சேவை உரிமை மற்றும் குறைதீர் ஆணையம் ஏற்பதைத் தவிர வேறுவழியில்லை. வேறு ஒருவரைப் பணியில் அமர்த்தி விரைந்து முடித்துக் கொடுக்க முடியாதா என்று ஆணையம் கண்டனம் செய்யலாம், அவ்வளவே!
ஒவ்வொரு சேவையை எத்தனை நாளைக்குள் அளிக்க வேண்டும் என்பதை மக்கள் சாசனமாக அளிப்பது மட்டுமே போதாது. ஒவ்வொரு அரசு ஊழியரும் அன்றைய தினம் என்ன பணி செய்தார், எத்தனை கோப்புகளைப் பார்த்தார், எத்தனை விண்ணப்பங்களைப் பரிசீலித்தார் என்பதைப் பணிநிரல் பதிவேட்டில் பதிவது கட்டாயம் என்றாக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் நாற்காலிகள் காலியாகவும், கேன்டீன் மரத்தடியில் எப்போதும் கூட்டமும் இருக்கும் நிலை அப்போதுதான் மாறும்.
தகவல் பெறும் உரிமைச் சட்டம், கல்வி பெறும் உரிமைச் சட்டம், தொழிற்போட்டி நெறிப்படுத்தும் ஆணையம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், நிலம் கையகப்படுத்தும் சட்டம் என்பன போன்ற பல நல்ல சட்டங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒன்பதாண்டு ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது உண்மை. ஆனால், இந்தச் சட்டங்கள் அனைத்தும் முனைமழுங்கிய கத்திகளாக வலம் வருகின்ற அவல நிலை காணப்படுவதும் உண்மை. சற்று ஏதேனும் உயிர்ப்பு இருக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தையும்கூட நீர்த்துப் போக வைக்க அரசு வழிமுறைகளைத் தேடிக் கொண்டிருக்கிறது.
அடுத்த பொதுத் தேர்தலில் வாக்காளர்களைச் சந்திக்கும்போது நாங்கள் இன்னின்ன சட்டங்களைக் கொண்டு வந்து இந்திய ஜனநாயகத்திற்கு வலு சேர்த்திருக்கிறோம் என்று சொல்லி மக்களை ஏமாற்றத்தான் இந்தச் சட்டங்கள் உதவுகின்றனவே அன்றி, குறிக்கோளை நிறைவேற்றுகின்றனவா என்றால் இல்லை. ஆனால்தான் என்ன? அடுத்து ஒரு நேர்மையான அரசு பதவிக்கு வருமேயானால், சட்டத்தின் ஓட்டைகளை அடைத்து, முறையாகச் செயல்பட வழிகோலக் கூடாதா? அந்த வகையில் இந்தச் சட்டத்தை வரவேற்கலாம்!

-- 


ALAVUDEEN

9 Great Reason to Drink Water


9 Great Reason to Drink Water

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR