ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Tuesday 19 August 2014

இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கு-3

முஃப்தீ இனாயத் அஹ்மது

தேடி வந்த முன்சீப் பதவியை உதறித் தள்ளி விட்டு இந்திய விடு தலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் முஃப்தீ இனாயத் அஹ்மது. உ.பி.யில் 1822ம் ஆண்டு பிறந்த இவர் நிகழ்த்திய தீப்பொறி பறக்கும் சொற்பொழிவுகள் மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டின. இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்தது. இவர் மீது வழக்கு தொடரப் பட்டது. 'நீங்கள் புரட்சி செய்தது உண்மையா?' என்று நீதிபதி இவரிடம் கேட்டார்.

'ஆம். அடிமை விலங்கை உடைத்தெறியப் புரட்சி செய்வது என்னுடைய கடமை என்று உணர்ந்து கொண்டேன். புரட்சி செய்தேன்' என்று முஃப்தி இனாயத் அஹ்மது துணிச்சலுடன் பதிலளித்தார். இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

அன்றும்... அயோத்தி அவலம்...

தேச விடுதலைக்காக நாடு முழுவதும் துறவிக் கோலத்தில் சுற்றுப்பயணம் செய்து புரட்சிப் பிரச்சாரம் செய்தவர் மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி. சென்னை நவாபின் வழிவந்தவரான இவர் கிழக்கு அயோத்தி எனப்படும் பைசாபாத்தின் அதிபராக இருந்தவர். இவரது புரட்சிப் பிரச்சாரம் ஆங்கிலேயருக்கு ஆத்திரமூட்டியது. இவரைக் கைது செய்து பைசாபாத் சிறையில் அடைத்தனர். புரட்சியாளார்கள் சிறைக் கதவை உடைத்து இவரை மீட்டு வந்தனர். இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது.

தலைமறைவாக இருந்த மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி அயோத்தி மன்னன் விரித்த வஞ்சக வலையில் சிக்கினார். அவரைக் காண யானைப் பாகனாக மாறு வேடத்தில் சென்ற போது, அயோத்தி மன்னனின் தம்பி பாவென் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். 1858ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதியன்று அவரது தலையை அயோத்தி மன்னன் வெட்டி ஆங்கிலேயரிடம் கொண்டு போய்க் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசை பெற்றான்.

#புதைந்து_போன_புரட்சி_மலர்கள்

வட இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது ஹியூவீலர் என்னும் ஆங்கிலேய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். இப்புரட்சியில் கலந்து கொண்ட ஜாபர் அலி என்பவர் தான் அவரைச் சுட்டுக் கொன்றார் என்ற தவறான தவகல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குத் தரப்பட்டது. ஜாபர் அலி கைது செய்யப்பட்டார். அவரை ஒரு தூணில் கட்டி வைத்து, சாட்டையால் அடித்தனர். அவரது உடலிலிருந்து கசிந்த இரத்தம் கீழே விரிக்கப்பட்டிருந்த ஈரப்பாயில் சிந்தி உறையாமல் ஈரமாக இருந்தது. பாயில் சிந்திய இரத்தத்தை நாவினால் சுத்தப்படுத்தும் படி ஜாபர் அலியை சித்ரவதை செய்தனர். பாயை சுத்தம் செய்த போதும் சாட்டையால் அவரை அடித்தனர். இறுதியில் ஜாபர் அலி ஆங்கிலேயர்களால் தூக்கிலிட ப்பட்டுக் கொல்லப்பட்டார்.

1857ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது டிட்டு மிர் மியான் என்று அழைக்கப்பட்ட மிர் நிசார் அலி வஹாபிகளை ஒன்று திரட்டிக் கிளர்ச்சியில் ஈடுபடுத்தினார். கொல்கத்தா அருகே பல கிராமங்களை ஆங்கிலேயரின் அதிக்கத்திலிருந்து விடுவித்தார். பிரிட்டிஷ் தளபதி அலெக்சாண்டர் தலைமையில் இராணுவம் வந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இதில் 400 வஹாபியர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியின் முன்னணியில் இருந்த ரசூல் என்பவர் தூக்கிலி டப்பட்டார்.

#அன்றும்_ஒருபொடோ

இந்திய மக்களை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்கள் பல அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தனர். அவற்றுள் மிகக் கொடுமையானது 'ரௌலட் சட்டம்'. இந்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவெங்கும் பெரும் கிளர்ச்சி மூண்டது. பஞ்சாபில் இக்கிளர்ச்சி மிகத் தீவிரமாக நடைபெறக் காரணமாக இருந்தவர் டாக்டர் சைபுதீன் கிச்சுலு. இவரைப் பிரிட்டிஷ் இராணுவம் அமிர்தஸரசிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தர்மசாலா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றது. இதனை அறிந்த மக்கள் கொதிப்படைந்தனர். போலீஸ் ஆணை ஆணையர் அலுவலகத்திற்கு அவர்கள் பெருந்திரளாகச் சென்றனர். அந்த மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்தனர். இதில் ராபின்சன், சார்ஜண்ட் ரௌலண்ட் என்னும் இரு ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.

அப்போது மக்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்த மக்பூல் மாமூத் என்னும் வழக்கறிஞரைப் போலீசார் கைது செய்தனர். ராபின்சன், ரௌலண்ட் ஆகியோரைக் கொன்றவர்கள் யார் என்று கூறும் படி அவரைச் சித்ரவதை செய்தனர். 'கொலையாளிகளை என்னால் அடையாளம் காட்ட முடியாது' என்று அவர் எழுதிக் கொடுத்தார். உடனே போலீசாரே சில பெயர்களை எழுதி, அவர்கள் குற்றவாளிகள் என்று வாக்குமூலம் தருமாறு அவரை வற்புறுத்தினர். 'எனக்கு மனசாட்சி உண்டு, பொய் சொல்ல மாட்டேன்' என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டார். மன சாட்சியுடன் நடந்து கொண்ட அவரது வக்கீல் சான்றிதழ் பறிக்கப்பட்டது.

இந்தக் கலவரத்தின் போது ஈஸ்டன் என்னும் ஆங்கிலப் பெண்மணியைத் தாக்க முயன்றதாக முஹம்மது அக்ரம் என்பவர் கைது செய்யப்பட்டார். உண்மையில் அவர் ஈஸ்டனைத் தாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் விசாரணையில் அவர் குற்றவாளி என்று கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சட்டத்தை மீறி தண்டியில் உப்பு அள்ளிய காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் வெற்றிகரமாக பொது வேலைநிறுத்தம் நடத்தியவர் அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன். அப்போது அந்த மாநிலத்தில் பல இடங்களில் கலவரங்கள் நடந்தன. இக்கலவரங்களைத் தூண்டிவிட்டதாக அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன் மீது வழக்குத் தொடரப்பட்டு, மரண தண்டனை விதிக்கப் பட்டது. 1931ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதியன்று ஏர்வாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.

ககோரி ரயில் கொள்ளை வழக்கில் புரட்சி வீரர் அஷ்பாகுல்லாஹ் கான் மீது விசாரணை நடைபெற்றது. 'நீ முஸ்லிம். மற்ற புரட்சிக்காரர்கள் இந்துக்கள். அவர்களைக் காட்டிக் கொடுத்தால் உனக்கு நிபந்தனை யற்ற விடுதலை கிடைக்கும். ஏராளமான பணமும் தரப்படும்' என்றெல்லாம் கூறி வெள்ளை அதிகாரிகள் ஆசை காட்டினார்கள். இந்த ஆசை வார்த்தைகளை யெல்லாம் கேட்ட அஷ்பகுல்லாஹ் கான் பாறைபோல் அசையாமல் நின்றார். தங்கள் பரித்தாளும் சூழ்ச்சி பலிக்காமல் போகவே பிரிட்டிஷார் இவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தனர். அவர் தூக்கில் ஏற்றப்பட்ட நாளன்று திருக்குர்ஆனைக் கழுத்திலே தொங்கப் போட்டார். ஹாஜிகளைப் போன்று 'லப்பைக் லப்பைக்' என்று கூறிக் கொண்டிருந்தார். தாமே சுருக்குக் கயிற்றை எடுத்துக் கழுத்திலே மாட்டிக் கொண்டார். அஷ்பகுல்லாஹ் கான் உ.பி.யில் உள்ள ஷாஜஹான்பூரில் பிறந்தவர்.

முஹம்மதலி, ஷெளகத் அலி, அபுல்கலாம் அஸாத் ஆகியோர் காந்தியடிகளின் ஆதரவுடன் துவக்கிய கிலாஃபத் இயக்கத்திற்குத் தமிழக முஸ்லிம்கள் பேராதரவு அளித்தனர். காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் இந்த இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். ஆங்கில ஆட்சியை எதிர்த்து மாணவர்கள் கல்லூரிகளையும் படிப்பையும் துறக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று பி.ஏ படிப்பை இடையில் நிறுத்தினார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். கதர் மீது மிகுந்த அபிமானம் கொண்ட இவர் தனது திருமணத்தின் போது கரடுமுரடான கதர் ஆடை தான் அணிந்திருந்தார்.

விடுதலைப் போரில் ஈடுபடுவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறி எறிந்தவர் - கம்பம் பீர்முஹம்மது பாவலர். இவர் கதர் இயக்கத்தின் தீவிரத் தொண்டராகத் திகழ்ந்தவர். விடுதலை உணர்வைத் தூண்டும் நாடகத்தில் நடித்ததற்காக இவர் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பொதுக்கூட்டங்களில் பேச ஆங்கிலேய அரசு இவருக்குத் தடை விதித்தது. அதனால் இவர் வாயைத் துணியால் கட்டிக் கொண்டு மேடையேறி சைகைகளின் மூலம் பேசி வரலாறு படைத்தவர்.
தொடரும் ...

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR