ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Saturday 5 December 2015

டிசம்பர் 6: பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு தினம்!

பாபர் மசூதி இந்துமதவெறியர்களால் இடிக்கப்பட்டு தாசப்தங்கள் கடந்து விட்டன. அன்று இடிக்கப்பட்ட உடன் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம். இந்தக் கட்டுரை குறிப்பிடும் பல விசயங்கள் இன்று நடந்திருப்பதைப் பார்க்கிறோம்.


இந்துமதவெறியர்களால் 1992 டிசம்பர் ஆறு அன்று பாபர்மசூதி இடிக்கப்பட்டு தாசப்தங்கள் கடந்து விட்டன. இடிக்கப்பட்ட உடன் புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம்.
இந்தக் கட்டுரை குறிப்பிடும் பல விசயங்கள் இன்று நடந்திருப்பதைப் பார்க்கிறோம். ஆட்சியைப் பிடித்த இந்துமதவெறியர்கள் 2002 இல் குஜராத்தில் இசுலாமிய மக்களை இனப்படுகொலை செய்தும், அதையே இந்துத்வாவின் பரிசோதனைச் சாலை என்று பெருமை பேசுவதையும் பார்த்திருக்கிறோம்.
பாபர்மசூதி இடிக்கப்பட்ட பின்தான் எத்தனை கலவரங்கள், குண்டு வெடிப்புக்கள்! இந்து மதவெறியர்கள் அதிகார அமைப்புகளின் உதவியோடு கலவரம் செய்வதோடு இன்று அவர்களே குண்டு வைக்குமளவு முன்னேறி விட்டார்கள். இத்தகைய இந்துமதவெறி பாசிஸ்டுகளை இந்த நாட்டின் நீதி நிர்வாக அமைப்புகள் தண்டிக்காது என்ற உண்மையை நாம் பார்த்தது போக இன்று ஆட்சி பீடத்திலும் ஏறிவிட்டார்கள்.
கிட்டத்தட்ட  23 ஆண்டுகளாக தேசத்தின் விவாதப் பொருளாக இருந்து வரும் இந்து மதவெறி பல பிரச்சினைகளை திசை திருப்புவதற்கும் பயன்படுகிறது. காங்கிரசுக்குப் போட்டியாக ஏகாதிபத்திய விசுவாசத்தில் கொடிகட்டிப் பறக்கும் இந்து மதவெறியர்கள் மறுகாலனியாக்கத்தை அவர்களது ஆட்சியின் போது தீவிரமாக அமல்படுத்தினர்.
பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்துமதவெறியருக்கு ஆதரவாகவே இருந்தது நீதியின் அடிப்படையில் அல்ல. மறுபுறம் மதச்சார்பின்மை பேசும் காங்கிரசு முதலான கட்சிகள் மிதவாத இந்துத்வத்தை பின்பற்றுவதையும் நாம் கண்டிருக்கிறோம்.
வெறுமனே மசூதியை இடிப்பது மட்டுமல்ல அனைத்து துறையிலும் இந்து ராஷ்டிர திட்டத்தை வைத்திருக்கும் இந்து மதவெறியர்கள் இன்றும் அரசியல் ரீதியான செல்வாக்கோடுதான் உள்ளனர். இதையெல்லாம் அன்றே சொன்னது புதிய ஜனநாயகம். படித்துப் பாருங்கள், இந்துமதவெறியை நிர்மூலமாக்க தோள் கொடுங்கள்!
                                                                            நன்றி:வினவு இணையதளம்
இடிக்கப் பட்டது பாபர் மசூதி அல்ல; இந்தியாவின் கலாச்சாரம்,ஒருமைப்பாடு,இறையாண்மை,பன்முகத்தன்மை

அயோத்தி பாபரி மசூதியை இடித்துத் தரைமட்டம் ஆக்கியதோடு நாடு முழுவதும் மதவெறிப்படுகொலைக் கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட்டதன் மூலம் தங்களது நயவஞ்சகச் சதித் திட்டத்தை வெற்றிகரமாகத் துவக்கி விட்டார்கள், இந்துமதவெறி பார்ப்ன-பனியா பாசிசக் கூட்டத்தினர்.
பாபரி மசூதியை இடித்ததானது, “இந்துமத-வகுப்புவாதத் தீவிரவாதிகளது வெறிச்செயல்” “வக்கிரமான கோழைத்தனம்” “மத்திய கால மதவெறிக் குரூரம்” “தேசிய அவமானம்-துரோகம்” “மன்னிக்க முடியாத கிரிமினல் குற்றம்” – என்று சித்தரிப்பது எல்லாம் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் நாசகரமான கடப்பாரைச் சேவையை மட்டும் குறிக்கின்றன.
ஆனால், இந்த இழிசெயல், இந்துமதவெறி பாசிச பயங்கரவாத ஆட்சியை நிறுவுவது என்கிற மிகவும் அபாயகரமான, நயவஞ்சகமான, கொடிய சதித்திட்டத்தைப் பகிரங்கமாக அரங்கேற்றுவதைத்தான் குறிக்கிறது.
பாபரி மசூதியின் கவிகைகளை உடைத்து நொறுக்கி வீழ்த்தியவுடன் இந்து மத “சந்நியாசினிகள்” என்று பட்டஞ் சூட்டிக் கொண்டுள்ள உமா பாரதியும், ரிதம்பராவும் ஒலிபெருக்கி மூலம் அலறினார்கள், “இதோ, இந்து ராஷ்டிரம் பிறக்கிறது!” – இதுதான் அவர்கள் இலட்சியம். இந்து மதவெறி பாசிச பயங்கரவாதம் – இதுதான் அவர்களின் இராம ராஜ்ஜியம்!
இந்துமதவெறியின் குருபீடமாகிய ஆர்.எஸ்.எஸ்ஸோ அதன் கள்ளக் குழந்தைகளான பாரதீய ஜனதா, விசுவ இந்து பரிஷத், சிவசேனா, பஜ்ரங்கதள், இந்து முன்னணி முதல் தமிழ்நாடு பிராமணம் சங்கம் வரை அவர்கள் யாருமோ, “இந்துராஷ்டிரம்”தான் தமது இலட்சியம் என்பதை மறைக்கவில்லை.
2005ஆம் ஆண்டு புலனாய்வுக் கழகத்தின் (Intelligence Bureau) முன்னாள் இணை இயக்குனர் மலோய் கிருஷ்ண தர் வெளியிட்ட ஒரு நூலில் பாபர் மசூதி இடிப்பு பாஜக, ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிசத் அமைப்புகளால் 10 மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிடப்பட்டதாகக் கூறுகிறார்.
ஆக முதலில் இது ஒரு திட்டமிடப்பட்ட செயல் என்பது உறுதி. இது பலரும் அறிந்ததே, ஆனால் இதன் காலம் பத்து மாதங்கள் என்பது அப்பட்டமான பொய்யாகவே பார்க்க முடிகின்றது. பாபர் மசூதி இடிப்பும், அங்கு இராமர் கோவில் கட்டும் திட்டமும், ‘ரஃகுபீர் தாஸ்’ என்பவர் 1885 ஜனவரி-16 அன்று தொடுத்த வழக்கிலிருந்தே அறியப்படுகின்றது. அதன் பின்னர் தொடர்ச்சியாக மேல்முறையீடு செய்து முயற்சித்தும், பின்னர் 1934-ம் ஆண்டு மசூதியின் முகப்பு சுவர்களை இடித்தும் தொடர்ந்தது இந்துத்துவாக்களின் குரோதச் செயல்கள். இதனடிப்படையிலே தொடங்கப்பட்டதுதான் ஆர்.எஸ்.எஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படி அவர்களின் வெகு ஆண்டுகாலத் திட்டமாக இருந்த மசூதி இடிப்பின் மத்தியச் செயல்தான், 1949-ம் ஆண்டு சிலைகளை உள்ளே வைத்து, அங்கு இராமர் அவதாரமாக தோன்றியுள்ளார் என்பது. அதன் நீட்சியாகவும், உச்சமாகவும் நிகழ்ந்ததுதான் உலக வரலாற்றிலே கருப்பு தினமாகக் காணப்படும் டிசம்பர்-6 1992 அன்று காவி கரசேவகர்களால் இடித்து தள்ளப்பட்ட பாபரி மசூதி தகர்ப்பு. இப்படி நூற்றாண்டுகளுக்கும் மேல் திட்டமிட்டு செய்யப்பட்டு ஒன்றுதான் இந்த மசூதி இடிப்பு என்பதனை உணர வேண்டும்.
“பாபர் மசூதி தீர்ப்பானது, இந்து-முஸ்லீம் பிரச்சனை அல்ல. மாறாக இது அமைதியினை விரும்பக்கக் கூடிய, மதச்சார்பின்னைமையினை போற்றக் கூடிய, அரசியல் சட்டங்களை மதிக்கக் கூடியவர்களுக்கும், சட்டத்தை காலில் போட்டு மிதிக்கக் கூடிய, நாசகர செயலை செய்கின்றவர்களுக்கும், அநீதியாள‌ர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தமாகும்” என்று இதன் தன்மையினை விவரித்துக் கூறுகின்றார், சிறந்த சமூக ஆர்வலரான திரு.ஹர்ஷ் மந்திர் அவர்கள்.
ஆகவே, இசுலாமற்ற தோழர்களே! பாப்ரி மசூதி இடிப்பிற்கு ஆதரவு தரும் எவரும் உண்மை தேசியவாதிகள் இல்லை என்பதனையும், மாறாக அவர்களே தேச விரோதிகள், தீவிரவாதிகள் என்பதனையும் நீங்கள் உணர்ந்து, நாட்டை நலம் காணச் செய்ய வேண்டும்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR